~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்சந்தி கூவல் -௧௬(16)

(ஆன்மிக பதிவு)

தினமணி வெள்ளிமணி இதழில் வெளிவந்த சொல்லின் செல்வன், அஞ்சனை மைந்தன், ராம பக்தன் ஹனுமான் பற்றிய சுந்தர கட்டுரை உங்கள் பார்வைக்கு. இதை எழுதிய மனத்துக்கினியவன் அவர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள். இன்று ஹனுமத் ஜெயந்தி என்பது கூடுதல் சிறப்பு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அயோத்யாவின் அஸ்வமேத மண்டபம். வசிஷ்டர் முதலிய பிரம்ம ரிஷிகள் கூடியிருக்க, கவி வால்மீகி தன் காவியத்தின் அரங்கேற்றத்தை அங்கே நடத்தவிருந்தார். சகோதரர் புடை சூழ சபைத் தலைவராக வீற்றிருந்தார், சக்கரவர்த்தித் திருமகன். அண்ணலின் அடிக்கீழ் அமைதியே வடிவாக அஞ்சனை மைந்தன். வீணை மீட்டியபடி, காவியத்தைப் பாடத் தொடங்கினர் சிறார்கள் இருவர்.குற்றம் காண இயலாத காவியத்தில் எல்லோரும் லயித்திருக்க, ஒருவர் மட்டும் அச்சத்தில் இருந்தார். வேறு யார்… வால்மீகியேதான்! அதற்குக் காரணம் – மகா பண்டிதரான அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயன்!

பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம்… காவியத்தின் பெரும்பகுதி எந்தத் தடைகளும் இல்லாமல் முடிந்தது. “இதி கிஷ்கிந்தா காண்டஸ் ஸமாப்த:’ என்று காவியத்தின் நான்காவது காண்டத்தைப் பாடி முடித்த திருப்தியில் சிறார்கள் சற்றே ஆசுவாசப் படுத்திக்கொண்டனர்.

அடுத்த காண்டத்தைக் கேட்கும் ஆவலில் சபையில் எங்கும் அமைதி. சிறார்கள் இருவரும் பாடத் தொடங்கினர். “அத ஹனுமத் காண்ட: ஆரப்யதே’ என்று தலைப்புச் சொல் வந்த அந்த நொடி…. ஒரு பேரிரைச்சல் சபையோரை அதிரச் செய்தது.

“கவியே நிறுத்தும். சிறார்கள் பாடுவதை நிறுத்தச் சொல்லும். தலைப்பைத் திருத்தும். இல்லையேல் உம்மைக் கடலில் வீசி எறிந்துவிடுவேன்…’

இப்படி கர்ஜித்தவர், அனுமன். எல்லாம் அறிந்த எம்பிரானோ அமைதி காத்தார். இப்படி நடக்கும் என எதிர்பார்த்திருந்த வால்மீகியோ கண்களால் ராமனை ஏறெடுத்துப் பார்த்தார்.

பின்னர் அனுமனைப் பார்த்துக் கேட்டார்…

“என்ன குற்றம் கண்டீர்? சொல் குற்றமா? பொருள் குற்றமா?’

“பெருங் குற்றம்..! முக்திக்கு வித்தாகும் புனிதமான ராம சரிதத்தில், பாமரக் குரங்கின் பெயரைச் சூட்டுதல் பொருத்தமற்றதே! அதுவும், ஒரு காண்டத்தின் தலைப்பாகவே ஒரு குரங்கின் பெயரைச் சூட்டுதல் பொறுத்துக் கொள்ள முடியாத பெருங்குற்றமே!’

“அதாவது… ஹனுமன் தொடர்பான வீரதீரங்களைச் சொல்வதற்கு ஹனுமத் காண்டம் என்றுதானே வைக்க முடியும். இதில் என்ன தவறு இருக்க முடியும்? இதில் ஏன் உமக்கு ஆட்சேபணை?’

“தாசானுதாசனாக, ராமபிரானின் திருப்பெயர் முழங்கும் விரதம் பூண்ட இந்த அடிமையின் பெயரை, புனித ராம சரிதத்தில் வைப்பது எவ்விதத்திலும் தகாது. உடனே அதை நீக்கி, வேறு பெயரைச் சூட்டுங்கள். இல்லையேல் நடப்பதே வேறு….’.

வால்மீகியின் கண்கள் கருணையே வடிவான ராமபிரானைக் கெஞ்சின. இந்தத் தலைப்பையே வைப்பதற்கு ஆஞ்சனேயனிடம் சொல்லுமாறு வேண்டின. கவிஞனுக்கும் ஒரு சுதந்திரம் இருக்கிறதே. அவ்வளவு லேசில் தலைப்பை மாற்ற கவி சம்மதிப்பாரா என்ன?

ராமனுக்கோ தர்மசங்கடமானது. வசிஷ்டர் முதலான ரிஷிகளிடம் தன் பார்வையை ஓட்டினார். அவர்களோ, ஒன்றும் சொல்வதற்கு இயலாதவர்களாய் ஒதுங்கிப் போனார்கள்.

காலம் கடந்து கொண்டிருந்தது. யாருமே ஒரு முடிவுக்கும் வரக்காணோம். அந்த நிலையில் கவியின் உள்ளத்தில் ஒன்று நினைவுக்கு வந்தது.

கவிக்கு பிரம்ம தேவர் ஒரு முறை வரம் ஒன்று கொடுத்திருந்தார். “ரஹஸ்யமானதும் வெளிப்படையாக உம் கண்ணிலே புலப்படும்’ என்பது அந்த வரம். அனுமனின் பெயரையே அந்த காண்டத்துக்கு சூட்டவேண்டும். ஆனால் அனுமனின் கோபத்தையும் வளர்க்கக் கூடாது…. யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் அவருக்கு இந்த வரம் நினைவுக்கு வந்தது. உடனே அவர் உள்ளத்தில் ஒரு பெயர் தோன்றியது.

“அனுமனே உம் இஷ்டப்படி நான் முன்பு வைத்த பெயரை நீக்கிவிட்டு, அந்த காண்டத்துக்கு சுந்தர காண்டம் என்று பெயரிட்டால் உமக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே’ என்றார்.

“ஏற்கிறேன்’ என்றார் அனுமன்.

அவையும் ஆமோதித்தது. அப்படியே சுந்தர காண்டம் தொடர்ந்தது. நிறையும் தறுவாயில், “இதி சுந்தரகாண்டஸ் ஸமாப்த:’ என்று பாலகர்கள் இருவரும் பாடினர்.

அவையோருக்கு சுந்தர காண்டத்தைக் கேட்டு முடித்ததும் அப்போதுதான் ஒன்று தோன்றியது.

“ஏன் கவியே, இந்த காண்டம் முழுவதும் அனுமனின் வீரம்தானே வருகிறது. எங்குமே சுந்தர என்ற சொல்லுக்குரிய அழகு தெரியவேயில்லையே. பின் எப்படி இதற்கு சுந்தர காண்டம் என்பது பொருத்தமாக அமையும்…’ கேள்வி எழுப்பினர் அவையோர்.

வால்மீகிக்கு உண்மையைச் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. சொல்லத் தொடங்கினார்..

“இந்த காண்டத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை, அஞ்சனை மைந்தனின் சரிதம் வருவதால் அவருடைய பெயர் சூட்டுவதே பொருத்தம். அதுதான் கவி தர்மம். நியாயமும்கூட. இது அடியேனுக்குத் தெரியும். ஆகவே, அஞ்சனாதேவி ஆஞ்சனேயருக்கு இட்டு அழைத்த செல்லப் பெயரையே இந்த காண்டத்துக்குச் சூட்டினேன்’ – சொல்லிவிட்டு அமர்ந்த கவியைப் பார்த்து புருவம் நெறித்தார் அனுமன்.

அனுமனுக்கு சுந்தரன் என்ற பெயர் ஒன்று உண்டு என்பதை சபையோர் எவரும் அறிந்திருக்கவில்லை. ஏன், அனுமனுக்கும் கூடத்தான் தெரியாது. சரி, கவி ஏதோ வீம்புக்குச் சொல்கிறார் போலும் என்றே சபையோர் எண்ணினர். அனுமனும் அப்படியே எண்ணினார்.

மாலை நேரமானதும், கவியிடம் சென்ற அனுமன், தன் ஐயத்தைக் கேட்டார். வால்மீகியோ, “உம் அன்னை அஞ்சனாதேவியிடம் சென்று கேட்டுவிட்டு வாரும்’ என்றார்.

கவியால் தான் ஏமாற்றப்பட்டோமோ என்ற ஏக்கத்தோடும், தனக்கு இப்படியும் ஒரு பெயர் உண்டோ என்ற ஊக்கத்தோடும் அஞ்சனை மலைக்குச் சென்றார். அங்கே தன் தாயின் திருவடி வணங்கி எழ, அன்னை அழைத்தாள்… “வா சுந்தரா, எப்படி இருக்கிறாய்?’

அனுமனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. தனக்கு இப்படியும் ஒரு செல்லப் பெயர் உண்டோ? சரி போகட்டும், அண்ணலின் திருநாமம் கேட்பது அன்றோ முக்கியம்… அயோத்யாபுரியின் அஸ்வமேத மண்டபத்துக்கு வந்தார் அனுமன். அங்கே கவி வால்மீகியைப் பார்த்து, நடந்தவற்றைச் சொல்லி, தன்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டார்.

இதனால்தான் சுந்தரகாண்டத்தின் பலச்ருதி இப்படி அமைந்திருக்கின்றது….

“ஸýந்தரே ஸýந்தரஸ்யாஸ்ய ஸýந்தரம் கர்ம கத்யதே

படநாத்சிரவணாச்சாபி ஸர்வ ùஸüபாக்யபாக் பவேத்’.

அதாவது, சுந்தர காண்டத்தில் சுந்தரன் என்ற அனுமனின் அழகுக் கைங்கர்யம் கூறப்படுவதால், சுந்தர காண்டத்தைப் படித்தாலும் கேட்டாலும் சகல செüபாக்கியங்களும் உண்டாகும் என்று எழுதிவைத்தார் ஆதி கவி வால்மீகி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாற்சந்தி நன்றிகள் : தினமணி வெள்ளிமணி

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: