~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Archive for பிப்ரவரி, 2013

வழியும் வலியும்

நாற்சந்திக் கூவல் – ௮௫(85)

(உணர்வின் பதிவு)

{ உணர்வில் உதித்த உறவுக்கதை(!?!) }

வெள்ளிக் கிழமை காலை பத்து மணி. ஆர்வமாக ட்விட்டரில், கீச்சுக்கள் மூலம் சில பேச்சுக்கள் நடந்து வந்தன. நானும் அதில் மூழ்கி விட்டேன். சரியாக, அலுவலகத்துக்கு புறப்பட வேண்டிய நேரம் கடந்து விடும் சமயத்தில், சட்டையை மாட்டி கொண்டு, வண்டியை ஒரே அழுத்தாய் அழுத்தினேன். எண்ணங்கள் எங்கெங்கோ பறக்க, நான் மாட்டு சம தளத்தில் பயணித்தேன் !

அது என்ன நல்ல நேரமோ தெரியல, நான் செல்லும் சமயம் பார்த்து இந்த சிக்னல்(கள் எல்லாம்), ஆரஞ்சு நிறத்தில் இருந்து சிவப்புக்கு குதிக்கும். யாரோ செய்யும் சதி என்று கூட தோன்றும். அருகில் நிழல் இருந்த ஒர் ஓரத்தில், (எப்பொழுதும் போல) ஒதுங்கி நின்று கொண்டேன். எட்டு பதினாறு கண்களுடன் என்னையே பார்த்து கொண்டு இருந்த ப்ளெக்ஸ் பேனர்களை, வெறுப்புடன் நானும் பார்த்தேன். அரசியல், வீடு, சமையல், செல்பேசி, விளையாட்டு…. என பெரும் பட்டியல். காசு இருந்தால் கனவுகள் காணலாம் !

என்னை நோக்கி ஒரு பெரியவர் வந்தார். டிபிகல் கிராமத்து மனிதர். இந்தியாவின் எந்த கடைக்கோடியிலும் காணக்கூடிய விவசாயி. வெயில் கொடுத்த கொடை : கருத்த நிறம். உழைப்பின் சுவடுகள் : கட்டுமஸ்தான உடல், நேர் கோட்டில் முதுகெலும்பு. கவலையில் சுருங்கிய நெற்றி மட்டும் சட்டை காலர். பழுப்பு நிறம் ஏறிப் போன சட்டை. அவிழ்த்து விட்ட மேல் மூன்று சட்டை பொத்தன்கள். முண்டாசுக்கா தோளில் துண்டு. மடித்து கட்டிய வேட்டி. பட்டாப்பட்டி. வாய் நிறைய வெத்தலை. முன் வழுக்கை. காற்றில் பறந்த, ஸ்பைக்ஸ் போன்ற முடி (சுய) அலங்காரம். குறுந்தாடி. நீண்ட மீசை. இரண்டும் வெண்மை நிறம். அனுபவ வயதில் தோய்ந்த கண்கள். அதற்கு மேல் அரசு கொடுத்த கண்ணாடி. கக்கத்தில் ஒரு மஞ்சப் பை, வெத்தலைப் பெட்டி உடன். இவைகளும் ஒரு வகை அழகிய ஸ்டைல் தான் என்று எண்ணினேன் !

“ஒரு கல்யாணத்துக்கு போவணும் தம்பி. இங்கு இருந்து விமான நிலையத்துக்கு எத்தன ரூவா ?” அஞ்சு இல்ல நாலு ரூவா வரும். சிக்னலில் எண்கள் எறங்கி கொண்டே ஓடின. எனக்கோ அவசரம். ஆனாலும் போகவில்லை, அடுத்த கேள்வி “எந்த நம்பர் பஸ்ல தம்பி ஏறனும்” நானும் வரிசயாக பஸ் எண்களை அடுக்கி விவரித்தேன். மொப்சல் வண்டிகளில் ஏற வேண்டாம் என்றும் சொன்னேன்.

farmerசொல்லி முடித்தது தான் தாமதம், சிக்னல் விழுந்து விட்டது. கூட்டை பிய்த்து கொண்டும் ஓடும் சிங்கங்கள் போல வீறிக் கொண்டு, இஞ்சின்கள் கர்ஜிக்க அனைவரும் பறந்தனர். ஏனோ இங்கு மட்டும் எல்லோருக்கும் அவசரம். நான் மட்டும் ஓரத்தில் நம்ம தாத்தாவுடன். “எங்க தம்பி பஸ் ஏறனும்” சிக்னல் மறுபுறத்தில் இருந்த இடத்தை சுட்டிக் காட்டினேன். அங்கு பயணிகளுக்கு என நிழலில் தரும், கூரை வேயிந்த இடம் எல்லாம் இல்லை, அதை விட அழகாக சில மரங்கள் அந்த பணியை செய்தன. திரும்பவும் அதே கதை : ஆரஞ்சு நிறம் சிவப்பாக மாறியது.

“ரொம்ப நன்றி தம்பி, போய்ட்டு வாரேன்” என்று சொல்லி, மெல்ல சாலையைக் கடந்தார் பெரியவர். சில வினாடிகளில் அவர் செல்ல வேண்டிய பேருந்து வந்து. என்னை திரும்ப பார்த்து, சிரித்து கொண்டே படிகளில் ஏறி விட்டார். விசில் சத்ததுடன் பஸ் கிளம்பியது.

சிக்னலில் கவனம் செலுத்தினேன், அதுவும் பச்சை நிறம்க் காட்டி சிரித்தது. தாமதமாக அலுவலகம் சென்றடைந்தேன். வேலைகள் வந்து குவிந்தது. சில சமயம் கோவமும், அலுப்பும், சலிப்பும் தான். ஆனாலும் நாள் முழுவதும், அந்த பெயர் தெரியா பெரியவர், சொல்லி சென்ற நன்றியும், அவர் காற்றில் தூது அனுப்பிய சிரிப்பும், உற்சாகமும் இன்பமும் மாறி மாறி ஊட்டின. அவர் முகம் மட்டும் இன்னும் மறக்கவில்லை. நான் செய்தது ஒரு உதவியே அல்ல ! இருப்பினும் கைம்மாறு பற்றி நினைக்கமால் செய்யும் உதவுவின் பயன் இதுவோ, என்று மனம் எண்ணியது. சரியோ தவறோ, இன்பம் மட்டுமே மிச்சம் இருந்தது.

அவரின் பால் என்னை கவர்ந்து என்ன, என்று சிந்தித்தேன். அவர் நிறமோ, உடையோ, நடையோ நிச்சயம் அல்ல. அவர் பேசிய முறை தான். வாய் நிறைய தம்பி தம்பி என்று விளித்தார். என் உதவிக்கும் நேரத்துக்கும் அவர் கொடுத்த மிகப்பெரும் சன்மானம் : பஸ்சில் ஏறும் பொழுது அவர் விட்டு சென்ற அன்பின் சிரிப்பு தான் ! வெகுமதி என்றால் இது அல்லவோ….. பணத்தால் இதைப் பெற முடியுமா ?

சனிக் கிழமை காலை, கிட்டத்தெட்ட அதே நேரம், அதே சிக்னல், அதே சிவப்பு நிறம், அதே நிழல், அதே நான். யாரவது வந்து உதவி கேட்ப்பார்களா என்று கண்கள் வட்டமிட்டன. யாரவது வழி கேட்டு, இன்றைய மன வலிகளுக்கு, சிரிப்பு மருந்து தர மாட்டார்களா என்று மனம் ஏங்கியது. அதோ என்னை நோக்கி ஒரு பாட்டி அம்மா வருகிறார்கள்………….. 🙂

[இது சிறுகதை எனில் சொல்லுங்கள், ‘பகுப்பு’ல் சேர்க்கிறேன் !  ]

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: