~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Archive for the ‘அறிமுகம்’ Category

குறியும் நெறியும்

அலகிலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.

வாழ்க்கை ஒரு விளையாட்டு வீதி என்பது ஆன்மீக கோட்ப்பாடு. ஜனவரி மாதம், உலகில் தலை சிறந்து விளங்கும் இரு வீர்களின் செறிவான சம்பவங்களே இந்தப் பதிவு.

ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டி. மெல்போர்ன் மாநகரத்தில் உள்ள விளையாட்டு திடலுக்கு ரோஜர் பெட்ரெர் வருகிறார். வீரர்கள் தங்கி இருக்கும் பகுதிக்கு செல்லும் போது, வாயில் பணியில் இருந்த காவலர் அவரின் அடையாள அட்டையை கேட்கிறார்.  தன்​​​னுடன் வந்தவர்கள் வரும் வரை பேசாமல் நின்று கொண்டிருந்தார் ரோஜர். அவரது அடையாள அட்டையை காட்டி, மெல்லிய புன்னகையுடன் நகர்கிறார். ஒரு வார்த்தை எதிர்த்து பேச வில்லை, நான் யார் தெரியுமா என்ற சத்தமில்லை. அமைதி! ஏற்கும் தன்மை! அவரது கடமையை அவர் செய்யட்டும், நான் குறுக்கில் இல்லை! அதுவும் பந்தைய நாள் இல்லை, பயிற்சி நாளில். இத்தகு முதிர்ச்சி. நிலை உயரும் பொது பணிவு கொள்ளல் வேண்டும், அதுவே ஆண்மையின் அழகு.

பரபரப்பான மகளிர் பிரிவில், செரினா வில்லியம்ஸை எதிரித்து  உக்ரேன் தேசத்து 18 வயது டயானா. விறுவிறுப்பான ஆட்டம். செரினாவின் 50ஆவது கிராண்ட் ஸ்லாம் வெற்றியை நோக்கிய பயணம். சரித்திரம் தாண்டி சாதனை! நேர் செட் கணக்கில் டயானா வீழ்ந்தார். ஆட்டம் முடிந்தது. டயானாவின் கண்களில் கண்ணீர். தனது அறைக்கு செல்லவிருந்த செரினா திரும்பி வந்தார். டயானாவுக்கு ஆறுதலுடன் உற்சாகமூட்டினார். டயானாவின் தோள்களில் தட்டி கொடுத்து, அன்பாக அரவணைத்துக்கொண்டு, “நீ சிறப்பாக விளையாடினாய், அழாதே” என்றார் செரினா. அரங்கம் அதிர்ந்தது. அன்பின் ஆட்சி. வெற்றி தோல்வி மட்டுமல்ல விளையாட்டு – பெருந்தன்மையும் பேரொழுக்கமும் சேர்ந்து –  Sportsmanship என்பார்கள்.

சிலர் கணநேர எழுச்சியால் பல அரிய பெரிய காரியங்களை செய்து விடுவார்கள். ஆனால் சாதாரண வேலைகளையும் ஒருவன் எவ்வளவு கவனமாக செய்கிறான் என்பது தான் அவனது உண்மைத் தகுதியைத் தெரியப்படுத்துகிறது.

ஒன்றில் கவனம் வை,
ஒவ்வொன்றிலும் கவனம் வை,
உலகம் உன்னை கவனிக்கும்!

தோட்டியின் மகனும், தமிழும்!

நாற்சந்தி கூவல் – ௯௮(98)
(புத்தக மதிப்புரை)

புதுபுது விஷயங்களையோ அல்லது சாதாரண வாழ்கையின், மாறுபட்ட கோணங்களை படம் பிடித்து, மனதில் பதிப்பது – ஒரு நாவலின் பலம். இத்தகு தகுதிகள் இரண்டும் நிறைந்த தோட்டியின் மகன் தான் இந்த பதிவின் பிதாமகன். மகனை ஸ்ருஷ்டித்தவர் : தகழி சிவசங்கரப் பிள்ளை. தமிழில் அழகு கூட்டியவர் : சுந்தர ராமசாமி #அறிமுகம்

தை திங்கள், நானும் என் அன்பு தோழர் தமிழும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தோம். கிளம்பும் சமயத்தில் புத்தகம் ஒன்றை கொடுத்து, படித்து விட்டு தாருங்கள் என்றான் தம்பி. அவர் கொடுப்பது எதையும் படிப்பேன் (புத்தகமோ, இணைய சுட்டியோ… எதுவானாலும்). என் வாசிப்பு வெளியை திறந்து விரிவுப்படுத்துவர் அவர் தானே. நானும் வாங்கி வைத்து கொண்டு அவனுக்கு சில புத்தகங்கள் கொடுத்தேன் #சரிக்குசரி.

நூல் விபரம்
பெயர் : தோட்டியின் மகன்
ஆசிரியர் : தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில் : சுந்தர ராமசாமி
பக்கங்கள் : 173
பதிப்பகம் : காலசுவடு
விலை : ரூ.130

வியாழன் அன்று அலுவல் நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வந்தது. அவசரமாக கிளம்பியதால், மேஜை மேல் இருந்த தோட்டியை கூடக் கூட்டி சென்றேன். திருப்பும் போது தான் படிக்க ஆரம்பித்தேன். கீழே வைக்க முடியவில்லை. முதல் நாள் இரவில் மிதமான வேகத்துடன் பாதி தாண்டி. அடுத்த நாளில், மின்னல் வேகத்தில் மீதியையும் முடித்தேன். வாசகனுக்கு மட்டுமே ஏற்படும் தனிப்பெரும் மகிழ்ச்சி இதுவல்லவோ #பூர்வ_கதை_முற்றும்

தோட்டி என்பவன் யார் ? சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன், தற்போது இருப்பது போல் பாதாள சாக்கடை திட்டம் எல்லாம் இல்லை. எனவே வீட்டில் உள்ள கக்கூசை சுத்தம் செய்ய தினமும் காலை மண்வெட்டி, வாலி சகிதம் தோட்டி வருவான். நம் மலத்தை தன் வாளியில் அள்ளிக்கொண்டு, பீப்பாயில் சேர்ப்பான். வீடு வீடாகயேறி இந்த வேலைய தொடர்வான். பீப்பாய் நிரம்பி வழியும், ரோடில் சிந்தும். அதையும் எடுத்து, சேர்ந்து, மொத்தமாக ஊர் கோடியில் உள்ள மலக்கிடங்கில் சென்று கொட்டுவான். அவன் வீடும் கிடங்கின் அருகிலேயே தான் இருக்கும். படிக்கும் போதே, (மனதில்) எவ்வளவு அருவருப்பை ஏற்ப்படுத்துகிறது ? முகத்தில் ஒரு துர்நாற்றத்தின் சுளிப்பு தானாக வருகிறது… இப்படி ஒரு வகை பாட்டாளி மக்கள் வாழ்ண்ந்துள்ளனர் என்று சொன்னால், முதலில் நம்பவே முடியவில்லை. ஆனாலும் சரித்திர உண்மை.

இதில் கொடுமை என்னவென்றால். இவர்களை கீழ்தர அடிமைகளாக நடத்துவதும், மதிக்காமல் உதாசீன படுத்துவதும் வாடிக்கையாக இருந்துள்ளது. இவர்களின் சந்ததியும் இதே வேலையில் ஈடுபடுகிறது. ஒழுங்கான சம்பளம் கிடையாது. பாதியை தராமல் பிடுங்கும் ஓவர்சீயர். (இன்று போல) வந்ததை குடித்தே பழகிய தோட்டிகள். சாப்பாடு, சுகாதாரம், மரியாதை, அடிப்படை உரிமைகைள் எல்லாம் எல்லாம் மறுக்கப்பட்ட தீண்டத்தகாத தலித் மனிதர்களின் வாழ்க்கை படம் தான் இந்த நாவல்.

#முன்னுரையிலிருந்து சுந்தர ராமசாமி : வெளியுலகத்துக்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்கையினூடே எப்படி இவரால் (தகழி) சகஜமாக புகுந்து மன உணர்வுகளை அள்ளி கொண்டுவர முடிகிறது ? அவர்களின் அடி மனதில் இருந்த நெருப்பை எப்படி இவரால் மொழியில் மறு உருவாக்கம் செய்ய முடிந்தது ? கொடுமையில், மனம் கொள்ளும் கோபத்தில், ரத்தத்தில் உஷ்ணம் ஏறமால் என்னால் எந்த பக்கத்தையும் படிக்கமுடிவில்லை  — எனக்கு(ம்) ஏற்றப்பட்ட உணர்வுகளும் இதுவே. ஆனால் இவ்வளவு தெளிவாக சொல்ல முடியும் என்று தோன்றவில்லை.

#தம்பியின்_வரிகளில் (என் உணர்வுகள்): வெளிப்படியாக சொல்லி விடுகிறேன். புத்தகத்தின் நடை பல இடங்களில் பரபரவென பறகிராற்போல் நகர்கிறது. எங்கேனும் ஓரிடத்தில் வெளிப்படும் உரையாடல் (வசனம்) நெஞ்சை அப்படியே கிழித்துவிடுவது போல உணரமுடிகிறது. பல இடங்களில் தொடர்ச்சியாக படிக்க முடியாமல் இதயம் விக்கித்தபடி நின்றிருக்கிறேன்.

நாவலின் நெற்றியடி வசனம் ஒன்றை சொல்லுங்கள் என்றால், பளிசென்று சொல்லிவிடுவேன் :

பணக்காரன், வயிறு தெரியம திம்பான். சீரணமாவாது.
ஏழைகள் கண்டதையும், கெடச்சதையும் திம்பானுங்க. 
அவங்களுக்கும் சீரணமாவது.

மலக்கிடங்கில் தோட்டிகளின் இடையில் நடக்கும் விவாதத்தில் வரும் வசனமிது. எவ்வளவு பொருள் பொதிந்த உண்மை. இன்றளவும் இதுவே தான் உலக நியதி. என்றும் மாறாத மாயம் போலும் !

இந்தியா சுதந்திரம் பெரும் தருவாயில் (1946) வெளிவந்த அடிமைகளின் கதை இது. அந்த காலக் கட்டத்தில் தன்னை தானே, ‘கலை உலகின் கடைசி ஏழை’ என்று வர்ணித்து கொள்ளும் சுந்தர ராமசாமி, சரஸ்வதி என்னும் சஞ்சிகையில் தமிழில் எழுதினார். அவருக்கு அப்ப 20 வயது (தான்!)

தமிழில் இந்த நாவல் மொழி பெயர்க்கப்பட்டது என்று சொல்லக் கூடாது. மொழியாக்கம் செய்ய பட்டு, மெருகேறியுள்ளது. கதையின், கருவின் வீரியம் குறையாத, நாடி துடிப்புக்குள் பறக்கும் நடை மற்றும் சொல்லாட்சி. கொச்சை தமிழில்லேயே தோட்டிகள் பேசும் வசனம் வந்தாலும், அவை வாசிப்புக்கு வேகத்தடையாக அமையவேயில்லை.

சந்தர்ப்பமா ?  சூழ்நிலையா ? என்று தெரியவில்லை. இந்த நாவலை படித்து கொண்டு இருக்கும் சமயத்தில் தான், முதன் முதலில், இயக்குனர் ராம் அவர்களின் கற்றது தமிழ் படம் பார்தேன். பிரபாகாரனும், சுடலைமுத்துவிக்கும் பந்தம் இருப்பதாகவே தோன்றியது. இருவருக்கும் எத்தனை எத்தனை பொருத்தங்கள் : இறுதி வரை நாயகன் நல்லவனா ? கெட்டவனா ? என்ற கேள்விக்கு சரியான விடையில்லை. இருவரும் வாழ்கையில் எதையோ தேடி தேடி சலித்து துன்பம் அடைகின்றனர். சாமர்த்தியசாலிகள். கைக்கூடாக் காதல் மற்றும் லட்சியம். சமூகத்தின் மேல ஒரு கோவம், வெறி. இல்லாமையின் எதிரொலி. தெரிந்த தொழிலை செய்ய, மரியாதை இல்லாமை… #இது_நிற்க

தோட்டியின் மகன் நாவலில் இல்லாத உணர்வே இல்லை என்று சொல்லலாம். அன்பு, வெறுப்பு, கோபம், தாபம், காமம், காதல், பாசம், வேஷம், வஞ்சம், துன்பம், கொடுமை, சோகம், இறப்பு,  பெருமை, நெகிழ்வு, காழ்ப்புணர்ச்சி, பயம், அழுகை, கதறல், அடிமை, பசி, பட்டினி, நோய், பஞ்சம், தாழ்வு மனப்பாங்கு….. இன்னும் இன்னும் இருப்பதை எல்லாம் அடக்கலாம். தகழி தான் எத்தனை சாமர்த்தியசாலி ! மனித உணர்வுகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து அதற்கு மொழியில் அழகு வடிவம் தந்துள்ளார்.

அன்றைய சமூகத்தின் ஆவண பெட்டகம் இந்த நாவல். போகிற போக்கில் பாத்திரங்களின் பாங்கில் சமூக்கதை, சம்பிரதாயங்களை சாடியுள்ளார். கடவுள் மீது தகழிக்கு என்ன கோவமோ தெரியவில்லை! பக்தியையும் பூசைகளையும் வேஷங்கள் என்பதை நேராக சொல்லாமல், சம்பவங்களாக அடுக்கியுள்ளார். பணக்காரர்களின் பழக்க வழக்கங்களை பார்த்து பார்த்து தானும் அது போல செய்யும் மக்களை அன்று முதல் இன்று வரை காணலாம்.

தோட்டிகளின் வாழ்கை தான் நாவல் என்றாலும். மையக்கரு : மகனுக்காக பாடு படும் தந்தையின் முயற்சிகளும் அதன் பலாபலன்களும். இதற்காக அவன் காணும் கனவுகள் ஏராளம், செய்யும் தியாகங்கள் தாராளம். தான் என்ன ஆனாலும் சரி, தன் மகன் பெரிய ஆளாக வர வேண்டும், எந்த சிரமமும் அவனுக்கு வரக்கூடாது. படித்துப் புகழ் பெற வேணும். நவ நாகரிக மனிதனாக அவன் வளர்ந்து, வாழ வேண்டும். மகனின் செழுமையான வாழ்விற்கு, தந்தையின் முழுமையான் அர்ப்பணம்.

காலம் தொட்டு மகன்களை பெற்ற அப்பகளுக்கு தான் எத்தனை பெரிய ஆசைகள், கனவுகள். எல்லாம் ஒரே புள்ளில் நோக்கி தான் : தான் பெற்ற தவப் புதல்வன், சீரும் சிறப்புடன் வாழ வேண்டும். இதற்காக சுடலைமுத்து போடும் திட்டங்கள், அவனை அவனே நிர்பந்தத்துடன் மாற்றி கொள்ளும் வாழ்கை முறை, சேர்த்து வைக்கும் பணம், செலவு செய்யும் குணம்… அனைத்தும் அனைத்தும் பிரமிக்க வைக்கிறது. ஏனெனில் சாதாரண தோட்டி இது எதையும் செய்ய மாட்டன். மோகன் கொடுத்து வைத்தவன் தான். சாதாரண நடு வர்க்கத்து குடும்ப தலைவனின் வாழ்கையில் இருக்கும் அதே அளவு அதீத பாசம் தான் இந்த தந்தை மகன் உறவும்!

உறவுகள் ஆயிரம் வரும்
 சிறகுகள் ஆயிரம் விரியும்
தந்தைகள் என்றும் அப்படியே
 விந்தைகள் படைக்க கனவுகளுடன்
சிந்தை அனைத்தும் செலவுசெய்து
 சீர்மிகு புதல்வனை வளர்க துடிப்பர் !

புத்தகத்தை வாசிக்க கொடுத்து, என்னையும் எழுத ஊக்குவிக்கும் தமிழ் தம்பிக்கு என் அன்பு வணக்கம். நட்பில் நன்றி நல்குவது நன்றன்று!

நாற்சந்தி கூவல் – ௧(1)

(அறிமுகப் பதிவு)

வணக்கம்.

தமிழ் வாழ்கிறது! வளருகிறது!! வாழவைக்கிறது!!!

நாற்சந்தி – உடல், உள்ளம், உயிர், உலகம் ஆகிய நான்கும் உரசி விளையாடி, சந்திகள் சிரிக்கும் ஓஜஸின் நாற்சந்தி.

ஒரு புதிய தளம். நான் கற்க என்னும் வோர்ட்பிரஸ். தமிழ் தளம் (ஆங்கிலம் சில வரும், பொறுத்தருளவும்).

‘நிறைய படித்தால் தான் நன்கு எழுத முடியும்’ என நான் நம்புகிறேன். இது மாற்ற முடியாதா, மறக்க முடியாத விதியும் கூட. எனவே நான் ரசித்து, ருசித்த தமிழ் பதிவுகள், இங்கு உங்கள் பார்வைக்கு வரும் – மீள் பதிவுகளாக. (மீள் பதிவுகளின் உரிமை அதன் ஆசிரியருடையதே. அவர் ஆட்சேபிக்கும் பட்சத்தில், அந்த பதிவு தாழ்மையுடன் நீக்கப்படும்.)

அது மட்டும் தானா? என்றால், இல்லை. என் எண்ணங்களையும் பார்வைகளையும் இன்று முதல் இங்கு இருந்து எழுதுகிறேன். இதில் என் சொந்த சரக்குகள் சிலவும் நடு நடுவில் தலைக் காட்டும் . அதை தவிர நல்ல படங்களை (தமிழ் அறிஞர்கள், வாசகங்கள்) இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

சினிமா, அரசியல் சம்பந்தமான பதிவுகளை எப்பொழுதும் போல தவிர்ப்பேன்.

எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டி, வணங்கி இந்தக் காரியத்தில் இறங்குகிறேன். உங்கள் உதவியும், கருத்துக்களும், வாசிப்பும் எனக்கும், என் இச்சிறு பணிக்கும் உரமாக அமையும் என திடமாக நம்புகிறேன்.

வெற்றி என்பது என் குறிக்கோள் அல்ல. மன திருப்தி மட்டும் தான் என் வெற்றி!!!

இன்று டிசம்பர் திங்கள் ௧௧(11).  ஒரு நன்நாள். முண்டாசு கவி பாரதி பிறந்தநாள். இவனை போல ஒரு ‘வீர தமிழ்’ எழுதுபவன் இனி பிறக்க முடியாது. இசை கலையின் பெண் தெய்வம்: குறை ஒன்றும் இல்லை “எம்.எஸ்.அம்மா” அவர்களின் நினைவு தினம் இன்று. கல்லும் உருகும் இசை வாழ்கை வாழ்ந்த பெண். உங்கள் இருவரையும் வாழ்த்தி வணங்கி இந்த பதிவு சகாப்தத்தை தொடங்குகிறேன்.

உங்களுள் ஒருவன்,
உங்களைப் போல் ஒருவன்,
அ. ஓஜஸ்.

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: