~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Archive for the ‘தமிழ்’ Category

அஷ்டமத்து கஷ்டம்

நாற்சந்தி கூவல் – ௧௦௦(100)
(சனிச் சிந்தனை)

திருமுருக கிருபானந்த வாரியாரின் கட்டுரை தொகுப்பு “சிந்தனை செல்வம்”. பரணில் இருந்த புத்தகத்தை மீட்டேன். மட்டற்ற மகிழ்ச்சி, பழுப்பேரிய மஞ்சள் நிற தாள்கள், மெல்லிய வாசனை, அரிதான ஸ்பரிசம் தான். பயணத்தின் போது சிறிதுபடித்தேன். அதிலிருந்து ஒரு பாடல் மட்டும் இங்கே.

அஷ்டமத்து சனி என்பார்கள். வந்தால் படாதபாடுபடுத்தும், இருக்கதையும் இல்லாமல் செய்யும். ஆளையே சுருட்டி போடும். தலைகீழாக தருணங்கள், தடங்கல்களாக மாறும்… இன்னும் இன்னும் என்ன என்னவோ சொல்லி கேட்டிருப்பீங்க. இந்த கஷ்டதசையின் காரணம் : ஜாதக கட்டத்தில், எட்டாம் இடத்தில சனி வந்து அமர்வான் என்பது பொது வழக்கு. ராசி தவிர்த்து இந்த எட்டாமிடத்து சனி எப்படி வரும் என்று ஒளவை மூதரசி அழகான எளிமையான தமிழில் சொல்கிறார்.

காலையிலே பல்கலைநூல் கல்லாதத் தலைமகன்
ஆலையெரி போன்ற அயலானும்
– சால
மனைக்கட் டழிக்கு மனையாளும் இம்மூவர்
தனக்கட் டமத்துச் சனி

  1. படிக்காத மூத்த மகனும்
  2. பக்கத்தில் உள்ள பகைவனும்
  3. வரவுக்கு மிஞ்சமால் செலவு செய்யும் மனையாளும்

கொண்டவர்களுக்கு எந்நாளும் அஷ்டமத்து சனி என்கிறாள் தமிழ் கிழவி

இப்ப சொல்லுங்க உங்கள்ல எத்தனை பேருக்கு, எட்டாமிடத்து சனி ? (எனக்கு இல்லப்பா!). என்றைக்கு இது பொருந்தும். ஆனாலும், இன்றைக்கு தமிழ் பாட்டி இருந்திருந்தால், என்ன எழுதியிருப்பாள் என்ற சிந்தனை, சிரிப்பை மூட்டுகிறது. நிதர்சனத்தில் உள்ளது நவரசமும் !

தோட்டியின் மகனும், தமிழும்!

நாற்சந்தி கூவல் – ௯௮(98)
(புத்தக மதிப்புரை)

புதுபுது விஷயங்களையோ அல்லது சாதாரண வாழ்கையின், மாறுபட்ட கோணங்களை படம் பிடித்து, மனதில் பதிப்பது – ஒரு நாவலின் பலம். இத்தகு தகுதிகள் இரண்டும் நிறைந்த தோட்டியின் மகன் தான் இந்த பதிவின் பிதாமகன். மகனை ஸ்ருஷ்டித்தவர் : தகழி சிவசங்கரப் பிள்ளை. தமிழில் அழகு கூட்டியவர் : சுந்தர ராமசாமி #அறிமுகம்

தை திங்கள், நானும் என் அன்பு தோழர் தமிழும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தோம். கிளம்பும் சமயத்தில் புத்தகம் ஒன்றை கொடுத்து, படித்து விட்டு தாருங்கள் என்றான் தம்பி. அவர் கொடுப்பது எதையும் படிப்பேன் (புத்தகமோ, இணைய சுட்டியோ… எதுவானாலும்). என் வாசிப்பு வெளியை திறந்து விரிவுப்படுத்துவர் அவர் தானே. நானும் வாங்கி வைத்து கொண்டு அவனுக்கு சில புத்தகங்கள் கொடுத்தேன் #சரிக்குசரி.

நூல் விபரம்
பெயர் : தோட்டியின் மகன்
ஆசிரியர் : தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில் : சுந்தர ராமசாமி
பக்கங்கள் : 173
பதிப்பகம் : காலசுவடு
விலை : ரூ.130

வியாழன் அன்று அலுவல் நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வந்தது. அவசரமாக கிளம்பியதால், மேஜை மேல் இருந்த தோட்டியை கூட கூட்டி சென்றேன். திருப்பும் போது தான் படிக்க ஆரம்பித்தேன். கீழே வைக்க முடியவில்லை. முதல் நாள் இரவில் மிதமான வேகத்துடன் பாதி தாண்டி. அடுத்த நாளில், மின்னல் வேகத்தில் மீதியையும் முடித்தேன். வாசகனுக்கு மட்டுமே ஏற்படும் தனிப்பெரும் மகிழ்ச்சி இதுவல்லவோ #பூர்வ_கதை_முற்றும்

தோட்டி என்பவன் யார் ? சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன், தற்போது இருப்பது போல் பாதாள சாக்கடை திட்டம் எல்லாம் இல்லை. எனவே வீட்டில் உள்ள கக்கூசோ சுத்தம் செய்ய தினமும் காலை மண்வெட்டி, வாலி சகிதம் தோட்டி வருவான். நம் மலத்தை தன் வாளியில் அள்ளிக்கொண்டு, பீப்பாயில் சேர்ப்பான். வீடு வீடாக ஏறி இந்த வேலைய தொடர்வான். பீப்பாய் நிரம்பி வழியும், ரோடில் சிந்தும். அதையும் எடுத்து, சேர்ந்து, மொத்தமாக ஊர் கோடியில் உள்ள மலக்கிடங்கில் சென்று கொட்டுவான். அவன் வீடும் கிடங்கின் அருகிலேயே தான் இருக்கும். படிக்கும் போதே, (மனதில்) எவ்வளவு அருவருப்பை ஏற்ப்படுத்துகிறது ? முகத்தில் ஒரு துர்நாற்றத்தின் சுளிப்பு தானாக வருகிறது… இப்படி ஒரு வகை பாட்டாளி மக்கள் வாழ்த்துள்ளனர் என்று சொன்னால், முதலில் நம்பவே முடியவில்லை. ஆனாலும் சரித்திர உண்மை.

இதில் கொடுமை என்னவென்றால். இவர்களை கீழ்தர அடிமைகளாக நடத்துவதும், மதிக்காமல் உதாசீன படுத்துவதும் வாடிக்கையாக இருந்துள்ளது. இவர்களின் சந்ததியும் இதே வேலையில் ஈடுபடுகிறது. ஒழுங்கான சம்பளம் கிடையாது. பாதியை தராமல் பிடுங்கும் ஓவர்சீயர். (இன்று போல) வந்ததை குடித்தே பழகிய தோட்டிகள். சாப்பாடு, சுகாதாரம், மரியாதை, அடிப்படை உரிமைகைள் எல்லாம் எல்லாம் மறுக்கப்பட்ட தீண்டத்தகாத தலித் மனிதர்களின் வாழ்க்கை படம் தான் இந்த நாவல்

#முன்னுரையிலிருந்து சுந்தர ராமசாமி : வெளியுலகத்துக்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்கையினூடே எப்படி இவரால் (தகழி) சகஜமாக புகுந்து மன உணர்வுகளை அள்ளி கொண்டுவர முடிகிறது ? அவர்களின் அடி மனதில் இருந்த நெருப்பை எப்படி இவரால் மொழியில் மறு உருவாக்கம் செய்ய முடிந்தது ? கொடுமையில், மனம் கொள்ளும் கோபத்தில், ரத்தத்தில் உஷ்ணம் ஏறமால் என்னால் எந்த பக்கத்தையும் படிக்கமுடிவில்லை  — எனக்கு(ம்) ஏற்றப்பட்ட உணர்வுகளும் இதுவே. ஆனால் இவ்வளவு தெளிவாக சொல்ல முடியும் என்று தோன்றவில்லை.

#தம்பியின்_வரிகளில் (என் உணர்வுகள்): வெளிப்படியாக சொல்லி விடுகிறேன். புத்தகத்தின் நடை பல இடங்களில் பரபரவென பறகிராற்போல் நகர்கிறது. எங்கேனும் ஓரிடத்தில் வெளிப்படும் உரையாடல் (வசனம்) நெஞ்சை அப்படியே கிழித்துவிடுவது போல உணரமுடிகிறது. பல இடங்களில் தொடர்ச்சியாக படிக்க முடியாமல் இதயம் விக்கித்தபடி நின்றிருக்கிறேன்.

நாவலின் நெற்றியடி வசனம் ஒன்றை சொல்லுங்கள் என்றால், பளிசென்று சொல்லிவிடுவேன் :

பணக்காரன், வயிறு தெரியம திம்பான். சீரணமாவாது.
ஏழைகள் கண்டதையும், கெடச்சதையும் திம்பானுங்க. 
அவங்களுக்கும் சீரணமாவது.

மலக்கிடங்கில் தோட்டிகளின் இடையில் நடக்கும் விவாதத்தில் வரும் வசனமிது. எவ்வளவு பொருள் பொதிந்த உண்மை. இன்றளவும் இதுவே தான் உலக நியதி. என்றும் மாறாத மாயம் போலும் !

இந்தியா சுதந்திரம் பெரும் தருவாயில் (1946) வெளிவந்த அடிமைகளின் கதை இது. அந்த கால கட்டத்தில் தன்னை தானே, ‘கலை உலகின் கடைசி ஏழை’ என்று வர்ணித்து கொள்ளும் சுந்தர ராமசாமி, சரஸ்வதி என்னும் சஞ்சிகையில் தமிழில் எழுதினார். அவருக்கு அப்ப 20 வயது (தான்!) என்று சொன்னால் நம்பவா முடிகிறது ?

தமிழில் இந்த நாவல் மொழி பெயர்க்கப்பட்டது என்று சொல்லக் கூடாது. மொழியாக்கம் செய்ய பட்டு, மெருகேறியுள்ளது. கதையின், கருவின் வீரியம் குறையாத, நாடி துடிப்புக்குள் பறக்கும் நடை மற்றும் சொல்லாட்சி. கொச்சை தமிழில்லேயே தோட்டிகள் பேசும் வசனம் வந்தாலும், அவை வாசிப்புக்கு வேகத்தடையாக அமையவேயில்லை.

சந்தர்ப்பமா ?  சூழ்நிலையா ? என்று தெரியவில்லை. இந்த நாவலை படித்து கொண்டு இருக்கும் சமயத்தில் தான், முதன் முதலில், இயக்குனர் ராம் அவர்களின் கற்றது தமிழ் படம் பார்தேன். பிரபாகாரனும், சுடலைமுத்துவிக்கும் பந்தம் இருப்பதாகவே தோன்றியது. இருவருக்கும் எத்தனை எத்தனை பொருத்தங்கள் : இறுதி வரை நாயகன் நல்வனா ? கெட்டவனா ? என்ற கேள்விக்கு சரியான விடையில்லை. இருவரும் வாழ்கையில் எதையோ தேடி தேடி சலித்து துன்பம் அடைகின்றனர். சாமர்த்தியசாலிகள். கைக்கூடா காதல் மற்றும் லட்சியம். சமூகத்தின் மேல ஒரு கோவம், வெறி. இல்லாமையின் எதிரொலி. தெரிந்த தொழிலை செய்ய, மரியாதை இல்லாமை… #இது_நிற்க

தோட்டியின் மகன் நாவலில் இல்லாத உணர்வே இல்லை என்று சொல்லலாம். அன்பு, வெறுப்பு, கோபம், தாபம், காமம், காதல், பாசம், வேஷம், வஞ்சம், துன்பம், கொடுமை, சோகம், இறப்பு,  பெருமை, நெகிழ்வு, காழ்புணர்ச்சி, பயம், அழுகை, கதறல், அடிமை, பசி, பட்டினி, நோய், பஞ்சம், தாழ்வு மனப்பாங்கு….. இன்னும் இன்னும் இருப்பதை எல்லாம் அடக்கலாம். தகழி தான் எத்தனை சாமர்த்தியசாலி ! மனித உணர்வுகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து அதற்கு மொழியில் அழகு வடிவம் தந்துள்ளார்.

அன்றைய சமூகத்தின் ஆவண பெட்டகம் இந்த நாவல். போகிற போக்கில் பாத்திரங்களின் பாங்கில் சமூக்கதை, சம்பிரதாயங்களை சாடியுள்ளார். கடவுள் மீது தகழிக்கு என்ன கோவமோ தெரியவில்லை! பக்தியையும் பூசைகளையும் வேஷங்கள் என்பதை நேராக சொல்லாமல், சம்பவங்களாக அடுக்கியுள்ளார். பணக்காரர்களின் பழக்க வழக்கங்களை பார்த்து பார்த்து தானும் அது போல செய்யும் மக்களை அன்று முதல் இன்று வரை காணலாம்.

தோட்டிகளின் வாழ்கை தான் நாவல் என்றாலும். மையக்கரு : மகனுக்காக பாடு படும் தந்தையின் முயற்சிகளும் அதன் பலாபலன்களும். இதற்காக அவன் காணும் கனவுகள் ஏராளம், செய்யும் தியாகங்கள் தாராளம். தான் என்ன ஆனாலும் சரி, தன் மகன் பெரிய ஆளாக வர வேண்டும், எந்த சிரமமும் அவனுக்கு வரக்கூடாது. படித்து புகழ் பெற வேணும். நவ நாகரிக மனிதனாக அவன் வளர, வாழ வேண்டும். மகனின் செழுமையான வாழ்விற்கு, தந்தையின் முழுமையான் அர்ப்பணம்.

காலம் தொட்டு மகன்களை பெற்ற அப்பகளுக்கு தான் எத்தனை பெரிய ஆசைகள், கனவுகள். எல்லாம் ஒரே புள்ளில் நோக்கி தான் : தான் பெற்ற தவப் புதல்வன், சீரும் சிறப்புடன் வாழ வேண்டும். இதற்காக சுடலைமுத்து போடும் திட்டங்கள், அவனை அவனே நிர்பந்தத்துடன் மாற்றி கொள்ளும் வாழ்கை முறை, சேர்த்து வைக்கும் பணம், செலவு செய்யும் குணம்… அனைத்தும் அனைத்தும் பிரமிக்க வைக்கிறது. ஏனெனில் சாதாரண தோட்டி இது எதையும் செய்ய மாட்டன். மோகன் கொடுத்து வைத்தவன் தான். சாதாரண நடு வர்க்கத்து குடும்ப தலைவனின் வாழ்கையில் இருக்கும் அதே அளவு அதீத பாசம் தான் இந்த தந்தை மகன் உறவும்!

உறவுகள் ஆயிரம் வரும்
 சிறகுகள் ஆயிரம் விரியும்
தந்தைகள் என்றும் அப்படியே
 விந்தைகள் படைக்க கனவுக்ளுடன்
சிந்தை அனைத்தும் செலவுசெய்து
 சீர்மிகு புதல்வனை வளர்க துடிப்பர் !

புத்தகத்தை வாசிக்க கொடுத்து, என்னையும் எழுத ஊக்குவிக்கும் தமிழ் தம்பிக்கு என் அன்பு வணக்கம். நட்பில் நன்றி நல்குவது நன்றன்று!

வெள்ளி விருந்து #2

நாற்சந்தி கூவல் – ௯௫(95)
(கதம்பம்)

பதிவெழுதி ஒரு வாரமாகிவிட்டது. வேகமான கால ஓட்டத்தில்  பல சுவையான சம்பவங்கள் நடந்தன. தீபாவளி சீசன். இதுவரை எல்லாம் சுகமே. இன்பங்களும், இனிப்புகளும், காரங்களும், உடைகளும், வெடிகளும் வரிசையாக நிற்கின்றன. இன்றோ விடுமுறை. அதில் எதோ தனி திருப்தி. மேட்டருக்கு வருவோம். வெள்ளி விருந்துடன் மீண்டும் நான் ! தம்பி குடுத்த ஊகத்தில் இந்த பதிவு மலர்கிறது. தொடருமா என்று எல்லாம் கேக்காதீங்க… போன பதிவு எவளோ ரீச்-ஆச்சுனு எனக்கு தெரியல…. படிப்பதை எல்லாம் இங்கு பகிர்வது, நியாமில்லை என்பதை தெளிவாக அறிவேன். பிறருடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு / அவர்களையும் சிந்தக, ரசிக்க வைக்கும் பதிவுகளை மட்டும் தருகிறேன்.


சிறுகதை :

  • இமையமலை எங்கள் மலைகல்கி – மூன்றே கதாபாத்திரம் கொண்ட , ஒரு சிறுகதை. என்ன ஒரு சரளமான நடை… சின்னதொரு கருவும் அவரிடம் சிறகு விரிக்கிறது. இன்னும் ஒரு பாரதி பற்றின் சான்று.
  • வாடாமல்லிகை –  புதுமைபித்தன் –  1934லில் இது முற்றிலும் புதிய சிந்தனை தான். ஸரஸுவின் (விதவை) மனநிலையை ஆழமாக படம்பிடித்துள்ளார். வர்ணனையும் அதி பிரமாதம்.  /எனக்கு உமது தியாகம் வேண்டாம். உமது பாசம் இருந்தால் போதும்!/ உணர்வின் உச்சம்
  • கோவிந்தனும் வீரப்பனும் கல்கி – விமோசனத்தில் வெளிவந்தது (மதுவிலக்குக்காக மட்டுமே வெளிவந்த மாத இதழ்). இப்படி சிம்பிளா கதை எழுதனும், அதே சமயம் உண்மையாகவும். ஒரு நல்ல கருத்தை சொல்லவல்தாகவும் அமைதல் வேண்டும்.

கட்டுரை :

  • சைக்கிள் ஓட்டுவோம் – என்.எஸ்.சுகுமார். சைக்கிள் ஓட்டுவதன் சிறப்பும், இன்று பெருகியுள்ள சிக்கல்களையும் சொல்லும் சிறிய பத்தி. கொலக்தாவில், சமீபத்தில் (சில தெருக்களில்) சைக்கிள் ஓட்ட தடை விதிக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல். {தினமணி நடுப் பக்கம்}
  • நண்பர், நல்லாசன், வழிகாட்டி – ஞானி – எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றி பல நல்ல தகவல்கள், அனுபவங்கள். தினமணி தீபாவளி மலரில் வந்துள்ளதாம்.
  • அறிவு தந்த மன்றங்கள் தெ.ஞானசுந்தரம் – தமிழகத்தின் பொற்காலத்தில் கல்லூரியில் பயின்ற இவர்கள் தான் பாக்கியவான்கள். இப்படிப்பட்ட மன்றங்கள் நான் படித்த கல்லூரியில் இல்லையே என்ற வருத்தத்தை தருகின்றன. இப்போ, இணையம் இந்த பசிக்கும் சோறு போடுகிறது என்பதே நிதர்சனம்.
  • நமக்குத் தேவை டான் ப்ரௌன்கள் – ஜெயமோகன் – // வாசகர்கள் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. ஆனாலும், புயல் காற்றில் தீபத்தைக் கையால் பொத்திக்கொண்டு செல்வதுபோல அவர்கள் இலக்கியத்தை முன்னெடுத்தார்கள். // என் கருத்து : டான் ப்ரௌன் வேண்டும் தான், ஆனாலும் சேதன் அண்ணனே வேணாம், வணிக எழுத்தாளர்கள் தேவையா இல்லையா என்று என்னால் ஏனோ சொல்ல முடியவில்லை. வணிகம் தாண்டியது தானே எழுத்து, தகுதியாக இருந்தால் வாசிப்பு  நிச்சியம் ஏற்படுமல்லவா ?
  • திருத்த வேண்டிய எழுத்துகள் திருப்பூர் கிருஷ்ணன் – யாரயோ குறி வைத்து எழுதியது போலவே தோன்றுகிறது. ஆனால் யார் என்று தெரியவில்லை. இப்படி சிந்திக்கும் எழுத்தாளார்களும் இன்று உண்டு என்பதை நான் மறுக்கவில்லை

கவிதை

  • வைரமுத்து பகிர்ந்து கொண்டது,அவர் எழுதியது அல்ல !)
நேற்று சபதங்களின் காரணமாக
மது கோப்பைகளை உடைத்தேன் – இன்று
மது கோப்பைகளை காரணமாக
சபதங்களை உடைத்தேன் !
  • நாமக்கல் கவிஞர், மதுவிலக்கை முன்னிட்டு, திருசெங்கோடு ஆஸ்ரமத்துக்கு எழுதியப் பாடல் :
குற்றமென்று யாருமே கூருமிந்த கள்ளினை
விற்கவிட்டுத் தீமையை விதைபதென்ன விந்தையே !
பாடுப்பட்ட கூலியைப் பறிக்கும்இந்தக் கள்ளினை 
வீடுவிட்டு நாடுவிட்டு வெளியிலே துரத்துவோம் !   

தந்தை கொண்டு சிரிப்பு, நம்பிக்கை நம்மை ஏற்றும்,
நம்பிக்கை கொண்டு சிரிப்பு, நல்லது நடக்கும் மாற்றம்! 
அனல் ஆணவச் சிரிப்பு, தம்வீரம் அழிவின் அசதி,
கர்வம் கூடா சிரிப்பு, கம்பீரம் கொஞ்சம் அலாதி !

  • காதல் பேருந்து, யார் எழுதியது என்று தெரியவில்லை. நன்பர் ஒருவர் மீள் பதிவு செய்துள்ளார். புதுக்கவிதை, கதை வடிவில். நல்லா இருக்கு, சிம்பிளா இருக்கு என்பது எனது அவிப்பிராயம்.

காணொளி / இசை :

குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் வயலின் தான் எத்தனை எத்தனை வேஷம் போட தக்கது. அவர் வாசுக்கும் “ஹரிவரசானம்” ஐய்யப்பன் பாடலைக் கேளுங்கள். எத்தனை நேர்த்தி, வளைவுகள். அற்புதம்

படங்கள் :

greatest prisonஇத நாம செஞ்சா அவுங்க என்ன நினைப்பாங்க.. அந்த ஆளு அப்படி பேசுவாரே… அம்மா நல்லா இருகன்னு சொல்லுவாங்களா… நாம இந்த  டிரஸ் போட்ட நம்மல பத்தி அவ என்ன பேசுவா….. அப்பாடி….

நாமே நமது சிறையை தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு உள்ளது. சிறையை விட்டு வெளிவர வேணும், சிறகு விரிக்க வேணும், சீக்கிரம் பறக்க வேணும் என நாம் சிந்திப்போமாகுக.

God and love ~~~~~~
இறை என்பது அன்பின் மறு வடிவும். இதை சொல்லாத மதம் இல்லை. ஆனால் இது நடவாமல் மக்களுக்கு மதம் பிடிக்கிறது. இது வேறு அது வேறு என்று. எல்லாம் ஒன்றே. அன்பே ஆனந்தம். நீங்கள் கடவுளை நம்ம வேண்டாம். ஆனாலும் காதலை நம்பி தான் ஆக வேணும். உலகை ஒழுங்கே இயக்கும் சக்தி அது. சர்வமும் அதுவே.

!!!!!!

Fill with gratitude விடியும் திங்களுக்கான செய்தி. நாளை நல்ல சிரிப்புடன் தொடங்க வேணும். ஆனால் நாமோ செல்போன் சிணுங்களுடன் தான் விடிகிறோம். நன்றி சொல்லுங்கள், அனைத்துக்கும். இந்த வையத்துக்கும், உங்களை வைபவர்களும் !

இன்னும் சில :

  • நவம்பர் மாத ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழ். இலவசமாக பதிவிறக்கி படிக்க சொடுக்கவும்.
  • வருடா வருடம் நவம்பர் மாதம் மீசை வளர்க்கும் Movemberராக கொண்டாடப்படுகிறது. ஆண்களின் பொது நலத்துக்கான இயக்கமிது. மேலும் அறிய
  • அதே போல நாவல் எழுதும் மாதம் நவம்பர். 50000 வார்த்தைகள் கொண்ட கதையே நாவல். ஆயிரகணக்கான மக்கள் எழுதும் தளம். மேலும் இது பற்றி படிக்க. (நான் எழுதல!) NaMoWriMoல எழுதி லிங்க் அனுப்புங்க.

diwali naarchanthi

வெள்ளி விருந்து

நாற்சந்தி கூவல் – ௯௪ (94)
(கதம்பம்)

படிக்க நேரம் தேடுவதன் சிரமமும் சுவையும் பட்டால் தான் புரியும், அனுபவித்து அறிய முடியும். வாழ்க்கை ஓடுதோ இல்லையோ. காலம் மட்டும் தனது கடனை சரிவர செய்து வருகிறது. எதற்க்கு இப்படி பூர்வாங்க பீடிகைககள் எல்லாம் என தீர்சிதர்வாள் கேட்க்கிறார். எழுதுவதைவிட வாசிக்கவே அதிக நெரம் செலுத்த ஆசை, செய்தும் வருகிறேன் என்பது என் நம்பிக்கை. நாளிதழ், வார இதழ், புத்தகம், இணையம், மின் புத்தகம், செவி நுகர் புத்தகம் என வாசிக்கதான் எத்தனை வசதிகள். என் இனபத்தை உங்களுடன் பகிர்த்துக் கொள்ளப் (கொல்லப்) போகிறேன். படிக்க சுட்டிகளோ, புத்தக இணைப்போ தந்துவிடிகிறேன். (பணச்) செலவில்லாமல் படிப்பதுவும் ஒரு சாமர்த்தியம் தான். வெள்ளி இரவு உங்களுக்கு என் விருந்து.

(மின்)புத்தகம்

தீட்சிதர் கதைகள் (1936)


ராவ் பகதூர் திரு. சம்பந்த முதலியார் எழுதிய நூல். யார் இந்த தீட்சிதர் என்று இப்போது யாருக்கும் தெரியாது. (கும்பகோணத்தில் 1886சில் தனது உலக வாழ்க்கையை முடித்தார் என் நூல் சொல்கிறது). தெனாலிராமன் பரம்பரையில் வந்து, ஆங்கில ஆட்சி காலத்தில் வாழ்ந்த சாமர்த்தியவான். தனது நுன்மதியினால் (Presence of Mind) தீட்சிதர் செய்யும் லீலைகள் தான் அடிநாதம். 28 கதைகள், 50 பக்கங்கள். எந்த வரிசையில் வேணாலும் கதைகளை வாசிக்கலாம். நகைச்சுவை நிறைந்த நூல். 1940 காலங்களை செவ்வனே படம் பிடிக்கிறது. சமீபத்தில் (மிக வேகமாக) வாசித்த ஒரே மின் நூல்.

>>>>படிக்க / சேமிக்க சொடுக்கவும்<<<<

கட்டுரை

  • எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய : மகாபாரதம் வாசிப்பது எப்படி ? நல்ல ஆராய்ச்சி கட்டுரை, பாரத கதையை வாசிக்க விருப்பமா, இதை முதலில் படிங்க… மஹாபாரத புத்தகள் பற்றியா பட்டியலும் உள்ளது
  • கதிர்மதியம் போல் முகத்தான் http://solvanam.com/?p=28771 செமையான ஒரு திரில்லர் நாவல் படித்த Effect ! என்ன என்ன எல்லாம் உலகத்துல நடக்குது…. சுஜாதாதேசிகன் எழுதிய கட்டுரை. சுவாரசியம் கூட்டும் பாணி.  இது போல சம்பவங்கள் இன்னும் நடந்து வருகின்றன. (சொல்வனம் இதழில் வெளிவந்தது.)

கதை

  • சித்ராக்குட்டி – எஸ்.ஸ்ரீதுறை நீங்களும் நல்லா அனுபவிப்பீங்க. இயல்பான கதை.
  • ஜெயமோகன் தளத்தில் வந்த (பெரிய) சிறுகதை : பூ – எழுதியது போகன் மலையாள வாசம் கலந்த கதை. ”விசுவாசமும் வேணம் மருந்து பாதி விசுவாசம் பாதி.விசுவாசக் குறைவுதான் பெரிய பாவம் .” எழுதியவர் மருத்தவர் எனக் கேள்விப்பட்டேன்.
  •  நேரமும் நகரங்களும் எண்களும் கொண்ட சிறுகதை புதிதாக இருந்தது, பிடித்தும் இருந்தது. (இதுவும் சொல்வனம்)

இசை

இசை பற்றி ஒரு குட்டி பத்தி எழுதி இருந்தேன், அதற்கு ஒரு தம்பியும் வந்துள்ளான் -> Ph’Ojas வடிவில் “ திசையெங்கும் இசை “. அந்த பதிவில் நானே எழுதிய ஒரு வார்த்தை :

ஒலிந்து = ஒலியுடன் இயந்து !

எம்,எஸ் அம்மாவின் சகுந்தலா படத்தின் பாடல்கள் கிடைத்து, ஆஹா எழுத வார்த்தைகளே இல்லை, இன்னும் பலமுறை கேட்டு விட்டு சொல்கிறேன்.

ஸ்டார்ட் விஜயில் – எம் எஸ் அம்மாவின் நினைவாக காற்றின் குரல் என்னும் நிகழ்ச்சி வந்தது. நீங்களும் பாருங்கள்.

இன்று அதிகம் முனுமுணுத்த பாடல் வரிகள் :

அனைவரும் கூடி,
அவன் புகழ் பாடி,
நிர்மலா யமுனா நதியில் நீராடி…
#கல்கி #எம்.எஸ் #மீரா (கேட்க்க சொடுக்கவும்)

மீள்

(தினமணி கதிரிலிருந்து)

பரிபாஷை என்றால்  ஒரு பொருளையோ கருத்தையோ குறிப்பிடுவதற்கு வழக்கத்தில் உள்ள சொல்லையோ சொல் தொடரையோ உபயோகிக்காமல் வேறு சொல்லையோ, சொல் தொடரையோ உபயோகித்து மறைமுகமாகக் குறிப்பிடுவது என்று பொருள். பரிபாஷை எல்லாத்துறையிலும் உண்டு. ரஸாயனம், வியாபாரம், தரகு எல்லாவற்றிலும் உண்டு. “ஆக்வா’ என்றால் நமக்குப் புரியாது. விஞ்ஞானி ஜலம் என்று அறிவான். சமையல்காரர்கள் பேசிக் கொள்ளும்போது சூலம், பஞ்சா என்ற வார்த்தைகள் அடிபடும். சம்பளம் மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என்று பொருள்!

தங்கள் தங்கள் சாமானுக்கு வியாபாரிகள் விலாசம் போட்டிருப்பார்கள். விலாசம் என்றால் விலை. 11091 என்று போட்டிருந்தால் சில எண்களை ஒதுக்கிவிட்டால் அதுவே அந்தச் சாமானின் விலையாகும். எந்த எண்ணை ஒதுக்க வேண்டும் என்பது அந்தக் கடையின் பரிபாஷை ரகசியத்தைச் சேர்ந்தது. சில சமயம் எண்களுக்குப் பதிலாக எழுத்துகளை விலாசமாக உபயோகிப்பதுண்டு. மாட்டு வியாபாரி, நகை வியாபாரி முதலியவர்கள் கம்பளிக்குள் விரலைத் தொட்டு விலை பேசுவதை நாம் பார்த்திருக்கலாம். இங்கே விரல்கள் பரிபாஷை.

கோயில்களில், குறிப்பாக பரிபாஷை மிகுந்தது வைணவ ஆலயங்களே. அதிலும் ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள அளவுக்கு வேறு எந்தக் கோயிலிலும் பரிபாஷைகள் இல்லை.

இங்கு அரவணை என்ற ஒரு சொல் ஒரு வகைப் பிரசாதத்தைக் குறிப்பிடும். இராக்காலத்தில் அரங்கர் சந்நிதியில் நைவேத்யம் ஆகும். இது ஆதி சேஷனுக்காக ஏற்பட்டது. அதனால் அரவணை என்ற பெயர் போலும். ஆராதனைக் காலங்களில் உபயோகிக்கப்படும் பொருள்களுக்கும் பரிபாஷைப் பெயர்கள் உண்டு. “ராமானுஜனை எடு’ என்றால் தீபக்கால் எடுக்க வேண்டும். “கரைசல் கொடு’ என்றால் சந்தனம் கொடுக்க வேண்டும். “மிலாக்கா வாங்கி வா’ என்றால் கொட்டாரத்திலிருந்து சந்தனக் கட்டை வாங்கி வர வேண்டும். “பவழக் காப்பு’ என்றால் புளி கொண்டு வர வேண்டும். “வகைச்சல்” என்றால் மாலை! “ஈரங்கொல்லி’ என்றால் கோயில் சலவைக்காரனுக்குப் பரிபாஷைப் பெயர்!

கோயிலில் உள்ள திருப்படிகத்திற்குச் சுந்தரபாண்டியன் என்று பெயர். பாண்டிய நாட்டரசன் சுந்தரபாண்டியன் அரங்கனிடம் அளவுக்கு மிஞ்சி ஈடுபட்டவன். கோயிலை ஆதியில் தங்கமயமாக்கினான் என்று சரித்திரம் சொல்லுகிறது. தினசரி பூஜைக்கு இன்றியமையாத படிகம் சுந்தரபாண்டியன் என்ற பெயரால் வழங்குகிறது.

அரங்கர் கோயில் உற்சவமூர்த்திக்கு நம்பெருமாள் என்று பெயர்! கர்ப்பகிரஹத்தில் – நம்பெருமாள் பூபாலராயன் மீது வீற்றிருக்கிறார். சிம்மாசனத்துக்குப் பரிபாஷை பூபால ராயன்!

-> “ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள்” என்ற நூலில் “பரிபாஷை’ என்ற கட்டுரையில் ந.பிச்சமூர்த்தி.

கவிதை

  • கவிவாணன் எழுதியது, மெழுகுவத்தி பற்றி
      இருட்டை 
      எச்சரிக்கும் 
      புரட்சிக்குரல் !
  • உன்னத உணர்வுகளை சொல்லும் லாவண்யா அவர்களின் கவிதை அட்டகாசம் :
    மழையில்லை மடியில் கனமில்லை,
    மகன்கள் சுகமில்லை,
    கையில் பணமில்லை,
    கள்குடிக்கக் கூட காசில்லை !

சொற்பொழிவு 

புலவர் கீரன் பேசிய கம்ப ராமாயணம் தொடர் சொற்பொழிவு. ஏழு நாட்கள் அமெரிக்காவில் பேசியுள்ளார். துல்லியமான வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 21க் கோப்பைகள் உள்ளன.  நான் இப்போது கேட்ப்பது. என்னமா பேசுறார்… ஆழமான உணர்வுகள் மற்றும் வாசிப்பு. சிரிப்பு வெடிகளுக்கு பஞ்சமே இல்லை. திரு என் சொக்கன் பகிர்ந்துக் கொண்ட சுட்டி.

 >>> பதிவிறக்க <<<

படம் 

(நெட்டில் சுட்டது)

Three Friends

யோசித்து பார்க்கும் போது சரி எனவேப்பட்டது, வாழ்க்கை பாதையில் தான் எத்தனை நண்பர்கள். காரியம் கருதி, இடம் கருதியும் நட்பு மலர்கிறது, சீக்கிரம் வாடவும் செய்கிறது, மறக்கவும் படுகிறது. ஆனாலும் வாழக்கை சிறக்க என தோன்றும் நண்பர்கள் சிலரே !

என் கிறுக்கல் 

இரவும் இதயமும்
இனிதே உறங்கட்டும்
சிறகும் சிந்தனையும்
சிலிர்த்தே வளரட்டும்

உறவும் உறக்கமும்
உணர்ந்தே கூடட்டும்
மலரும் மனமும்
மகிழ்தே விடியட்டும்

நாளும் நலமும்
நம்முடன் வாழட்டும்
காற்றும் காதலும்
காலமெல்லாம் பெருகட்டும் !

சுவாமிஜியும் நேதாஜியும்

நாற்சந்தி கூவல் – ௯௨(92)
(சுதந்திர தின சிறப்பு பதிவு மற்றும் புத்தகப்பதிவு)

♦♠♠♠♠♠♠♠♦

நொந்தே போயினும்,
வெந்தே மாயினும்
ந்தேசத்தவர் உவந்தே
சொல்வது – வந்தே மாதரம் !! 

பாரதியின் வரிகளுடன், சுதந்திர தின நல்வாழ்த்துகள். அறுபத்தி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதே தருணத்தில் அந்த நாளில் இந்தியா தனது சுதந்திரத்தை ஆங்கிலேய அரசிடம் இருந்து (மட்டும்) பெற்றது. வளர்ச்சி என்பது எங்கும் வியாபித்து இருந்தாலும், மோகங்களின் வீழ்ச்சி வாசலின் வாய் பிளந்துக் கொண்டே செல்கிறது.

ind

கொடியை சட்டையில் குத்திய சந்தாமாமாக்களும். சுந்தர பாண்டியர்களும், நீ தானே என் பொன் வசந்தம் என இனிய கீதம் இசைத்து கடலில் வத்திக்குச்சியாக மூழ்கி கரையும் நாள் இதோ இனிதே விடிந்தது. பாரதி அன்றே சொன்னான், அழகே சொன்னான் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?“

விடுதலை என்பது யாது ? என்று நம் வீர துறவி விவேகானந்தர் சொல்கிறார் -> விடுதலை என்பது ஆன்மாவின் கீதம். தனி மனிதனின் அளவில் இது பொருந்தும், தேசிய அளவில் விடுதலை என்னும் சொல்லுக்கு எண்ணிலடங்கா அர்த்தங்கள் உள்ளன. இந்தியாவின் ஆங்கிலேய விடுதலைக்கு பாடுப்பட்ட அனைவரும் விவேகனந்தரின் அடி பணிந்து, அவரை படித்து, சிந்தித்து, செயல் படுத்தியவர்களே. அவரால் ஈர்க்கபட்டவர்களின் பட்டியல் மிகவும் நீளமானது : காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ், பாரதி, ராஜாஜி ++++

மனிதரை உருவாக்குவது தான் என் நோக்கம் என்பார் சுவாமிஜி. அவர் ஸ்தாபித்த ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் அடிநாதம் ஆத்மநோ மோக்ஷாத், ஜகத் ஹிதாயச: “. அதன் தமிழாக்கம், மக்களுக்கு சேவை செய்வதின் மூலமே ஒருவன் தனது சொந்த வீடுபேற்றை அடைய முடியும். இதுவே கலியுகத்தின் எளிய முக்தி மார்கமாகும்.

இப்படி மக்களுக்கு என்றே வாழ்ந்து, தங்கள் மோட்சத்தை அடைந்து, காலத்தின் சுவடுகளில் திடமான தடம் பதித்த பல வீரர்களுள் சுபாஷ் சந்திர போஸ் ஒரு விடிவெள்ளி. நேதாஜி என்றாலே வீரம் நெஞ்சில் பாயும். எப்படியும் சுதந்திரம் பெற்று விட வேண்டும் என்பதற்காக என்ன என்னவோ முயற்சிகள் செய்தார். அவரை பற்றிய ஒரு சிறு புத்தகம் படித்து முடித்தேன்.

நூலின் பெயர் : சுவாமிஜியும் நேதாஜியும்
பதிப்பகம் : சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்
தமிழில் : சாருகேசி
பக்கங்கள் : 130
விலை : ரூ.25

சுவாமி விவேகனந்தரின் 150ஆவது ஜெயந்தி விழாவின் ஒரு அங்கமாக இந்த புத்தகம் தமிழில் மொழியாக்கம் செய்து வெளிவந்துள்ளது. மிகவும் சரளமான நடையில் நேதாஜியின் சிறு வாழ்க்கை குறிப்பு இப்புத்தகம், என்றே சொல்லலாம். சுவாமிஜியால் அவர் எப்படி எல்லாம் ஈர்க்கப் பட்டார் என்று அவரின் கடிதங்கள், உரைகள் மூலம் இந்த புத்தம் பேசுகிறது.

நேதாஜியின் சிறு வாழ்க்கை குறிப்பு ( நான் அறிந்த பட்சத்தில்) தனது பதின் பருவத்தில் மிகுந்த ஆன்மீக நாட்டம் கொண்டவர் சுபாஷ். வீட்டை விட்டு ஓடி சென்று சில வருடங்கள் இமைய மலை சாரல்களில் தனது குருவை தேடினார். பின்னர் வீடு திரும்பி, லண்டன் சென்று, மூன்றே மாதத்தில் ICS தேர்வில் மூன்றாம் இடம் பிடித்தார், அது இன்றைய IAS தேர்வைப் போன்றது, மிகவும் கடினமானது. பிரிட்டிஷ் அரசு வழங்கிய உயரிய வேலைகளை துறந்து, சேவை செய்ய சொந்த ஊர் கல்கத்தா வந்தார். தேசபந்து தலைமையில் கலக்கத்தா மேயர் பதவி. மக்கள் செல்வாக்கினால், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உயர்ந்தார். இவரை முஸ்லிம் மக்களும் மிகவும் நேசித்தனர் என்பதை நாம் மறக்கக்கூடாது

பின்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து காந்தியினால் வெளியேறி, Forward Block கட்சி ஆரம்பித்தார். வீட்டிலேயே சிறைப்பட்டார். தப்பி ஆப்கானிஸ்தான் சென்றார். அவரின் வாழ்கையை எழுதிய ஒரு ஆங்கில ஆசிரியர் சொல்கிறார் … He shaked his hands with the devil, for the one and only wish : his nations freedom….” ஹிட்லர் சந்திப்பை பற்றிய குறிப்பு இது. ஸ்டாலினை சந்தித்தார், இந்தியாவை மீட்க உதவி கோரினார்.

independence-day-50a

நீர் மூழ்கி கப்பல் மூலம் உயிரையே பணையம் வைத்து ஜப்பான் சென்றார். சித்தரஞ்சன் தாஸ் உதவியுடன் இந்திய அகதிகளை, கைதிகளைக் கொண்டு இந்தியாவை மீட்க படை அமைத்தார். சிங்கப்பூரில் டாக்டர் லக்ஷ்மி செஹால் தலைமையில் முதல் பெண்கள் படை உருவானது. பலம், பலத்தை தான் உபனிஷத்துக்கள் கூறுகின்றன என்பது சுவாமிஜியின் ஆழ்ந்த நம்பிக்கை. இதை செயலில் காட்டியது இந்தப் படை.

AZAD HIND என்று முதல் முதலில் இந்திய அரசாங்கம் ஆரம்பித்து, அதற்கு மந்திரி பிரதானிகள் அமைத்து, நிதி திரட்டி, புதிய தேசத்தின் பலதரப்பட்ட வளர்ச்சிக்காக பாடுப்பட்டார். Exile governmentடை முற்காலத்தில் முதன் முதலில் அமலுக்கு கொண்டு வந்தவர் தான் ஸ்ரீ ராமர் : சுக்கிரீவனுக்கு, வாலி இருக்கும் போதே பட்டம் கட்டியது. விபீஷணனுக்கு, இராவணன் இருக்கும் போதே மன்னன் பட்டம் கட்டி, கடல் நீரினால் மகுடாபிஷேகம் செய்தார் . காலம் தொட்டு நடத்து வரும் செயல் இது. ஆசாத் ஹிந்த் – Indian Government In exile.

அந்த அரசாங்கம் அச்சு பதிப்பித்த ரூபாய் நோட்டுகளில் இருந்த வீர வாசகம் : நீ எனக்கு ரத்தத்தை கொடு , நான் உனக்கு சுதந்திரம் தருகிறேன் ! – நேதாஜி. அஸாம் வரை Indian National Army (INA) வந்து போராடியது. இதற்கு தேவையான பல உதவிகளை ஜப்பான் அரசாங்கம் செய்தது. “நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் சாவுஎன்பான் பாரதி. அஸாம் மாநிலத்தில் இதுவே நடந்தது, INAவில் இருந்த பலர் பிரிட்டிஷ் போலிஸ்ஸுடன் சேர்ந்து நமக்கே வீழ்ச்சி தந்தார்கள். இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம் அது. அணு குண்டுகளால் ஜப்பான் முழுவதும் நொறுங்கிப் போனது. நமக்கு இருந்த துணையும் இறந்தது. அஸாம் யுத்தம் நின்றது. கேப்டன் பிரேம் குமார் சஹால் மற்றும் சகோக்கள் சிலர் பிரிட்டிஷ் அரசிடம் வேண்டும் என்றே சிறைப்பட்டனர். அவர்களால் தான் இந்த INAவின் முழு விபரங்களை நாம் அறிய முடிந்தது. இதற்கு பிறகு நேதாஜி, ஜெர்மனி மார்கத்தில் செல்லும் போது இறந்தார் என்று கட்டு கதையுடன் அவரது வாழ்க்கை, வரலாறு என்னும் பட்சத்தில் முடிகிறது. ஆனால் அவர் அந்த விபத்தில் இறக்க வில்லை என்பது உறுதியான தகவல்.

சுபாஷ் போஸ் எழுதுகிறார், ‘சுவாமிஜி இரு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் தியாகம் மற்றும் நற்பண்புகளை வளர்த்தல்; தியாகம் இல்லாமல் எதுவும் இல்லை.’ இதற்கு தகுந்தாற் போல் தன் வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார்.

நேதாஜி மிகமிக செறிவான, விரிவனா ஆளுமை மிக்கவர். சிறந்த பேச்சாளர். தலைமைப் பண்பு மிக்கவர். ஆழ்ந்து சிந்திக்கும் திறன் கொண்டவர். ஆங்கிலத்தில் புலமை மிக்கவர். வியக்க வைக்கும் எழுத்து திறம் கொண்டவர், அவர் எழுதிய இந்திய போராட்டம் (1933) அந்த காலகட்டதின் சுதந்திர போராட்ட முயற்சிகள் பற்றி தெளிவாக பேசுகிறது. இது நிற்க.

vivekananda quote 3

இந்த புத்தகத்தை பற்றி தினமணி கலாரசிகன் ஜூன் 23 இதழில் எழுதியது

…… இந்திய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை வகித்த இரண்டு பெரிய தலைவர்கள் அண்ணல் மகாத்மா காந்தியும், “நேதாஜி’ சுபாஷ் சந்திரபோசும். இவர்கள் இருவருக்குமே வழிகாட்டியாக இருந்தவர் சுவாமி விவேகானந்தர்தான். அவர் விட்ட இடத்திலிருந்து இவர்கள் தொடர்ந்தார்கள் என்பதுதான் உண்மை. சுவாமி விவேகானந்தர் எப்படி, எந்த அளவுக்கு நேதாஜியில் பாதிப்பையும், அவரது அணுகுமுறையில் மாற்றத்தையும் ஏற்படுத்தினார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது சாருகேசி மொழிமாற்றம் செய்திருக்கும் இந்தப் புத்தகம் …..

கடைசிவரை, நேதாஜிக்குச் சோதனையான காலகட்டங்களில் எல்லாம் வழிகாட்டி வந்திருப்பது சுவாமி விவேகானந்தரின் போதனைகளும் உரைகளும் கட்டுரைகளும்தான் என்பது இந்தப் புத்தகத்திலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. அதிலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கொல்கத்தா மேயராக இருந்தபோது ஜனவரி 10, 1931 அன்று, சுவாமி விவேகானந்தரின் 69-ஆவது பிறந்தநாள் விழாவின்போது, பேலூர் மடத்தின் எதிரே கங்கைக் கரையில் நடந்த பெரிய பொதுக்கூட்டத்தில் நிகழ்த்திய உரை, எந்த அளவுக்கு நேதாஜி, சுவாமிஜியால் கவரப்பட்டிருந்தார் என்பதை வெளிச்சம் போடுகிறது.

எல்லோரையும் விடவும் சுவாமிஜி மிகப்பெரும் ஆளுமை. அவரை பற்றி சுபாஷ் போஸ் எழுதியது :

அபரிமிதமான தியாகம், இடையறாத செயல்பாடு, அளவுகடந்த அன்பு, மிக உயர்ந்த ஞானம், தயக்கமின்றி வெளிப்படும் உணர்வுகள், ஈவு இரக்கம்இன்றி தாக்குதல், இவ்வளவு பண்புகள் இருந்தாலும் குழந்தை போன்று எளிமை. இவரே சுவாமி விவேகானந்தர்.

என்ன அழகாக ஆழமாக சுவாமிஜியைப் படித்து, புரிந்து, அறிந்து, நேசித்துள்ளர் சுபாஷ் பாபு. இந்த நூலின் இறுதியில் சுவாமிஜியின் எது உண்மையான தேச பக்தி ?என்பதன் பதில் சேரக்கப்பட்டுள்ளது. அதில், எந்த மகத்தான காரியம் செய்வதற்கும் அவசியமான மூன்று குணங்களை பற்றி சுவாமிஜியே கூறுகிறார் :

  • இதயப் பூர்வமான உணர்ச்சி
  • மலையையொத்த எதிர்ப்புகளை வெல்லுவதற்க்கான மன உறுதி
  • உண்மையான, தூய்மையான லட்சியத்தைக் கொண்ட சிந்தனை மற்றும் அதன் கண் பிறந்து வளரும் ஆற்றல்

வாழ்வில் சாதனை படைத்தவர்களின் சரித்திரம் சொல்லும் பாடமும் இதுவே.

ஓ வீரனே துணிவுகொள். நான் இந்தியன், ஒவ்வொரு இந்தியனும் என் சகோதரன்என்று கர்வத்துடன் சொல் சுவாமிஜி. தீர்க்க தரிசியான பாரதியின் வரிகளுடனேயே நிறைவு செய்கிறேன். (சுதந்திரம் வரும் முன்னமே எழுதப்பட்ட பாடல்)

நாம் இருக்கும் நாடு
நமதென்பதறிந்தோம் – இது 
நமக்கே உரிமையாம்
என்பதுணர்ந்தோம் !

பூமியில் எவர்க்கும் இனி
அடிமை செய்யோம் 
பரிபூரணனுக்கே அடிமை
செய்து வாழ்வோம் !

(ஆடுவோமே பள்ளு பாடுவோமே – ஆனந்த
சுதந்திரம் அடைந்து விட்டோமென்று !)

♦♠♠♠♠♠♠♠♦

இனிய சுதிந்திர தின நல்வாழ்த்துகள் !

இனிய சுதிந்திர தின நல்வாழ்த்துகள் !

பொன்னியின் புதல்வன் கல்கிக் கதம்பம்

நாற்சந்தி கூவல் – ௯௧(91)

(கல்கி பதிவு)

ஆடித்திருநாள் சிறப்புப் பதிவு

ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி என்னுடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நாற்சந்தி நண்பர்களை அழைக்கிறேன்…. ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் நீங்கள் இந்த பதிவைப் படிக்க செய்த பாக்கியத்தை எண்ணி மகிழ்கிறேன்.

ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும் தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம்.

அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள்

ஆம், ஆசான் கல்கியின் அமரக்காவியம் பொன்னியன் செல்வன் வரிகளே. இதை படித்த ஒரு ஆடித்திருநாளில், என்னுள் புது வெள்ளம் போல் பாய்ந்தாள் கன்னி தமிழ். படிக்க படிக்க அவள் மீதுள்ள மோகமும் ஆசையும் தீர்ந்த பாடில்லை.

அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள்.

பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக் கொண்டு உண்டார்கள்.

இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள்………

“வடவாறு பொங்கி வருது
வந்து பாருங்கள், பள்ளியரே!
வெள்ளாறு விரைந்து வருது
வேடிக்கை பாருங்கள், தோழியரே!
காவேரி புரண்டு வருது
காண வாருங்கள், பாங்கியரே!”

எனக்கும் இதுப் போல பல நல்ல ஆடி நினைவுகள் உள்ளன. போன வருடம், ஆடித்திருநாள் தமிழ் தம்பியின் பதிவைப் படித்து விட்டு, ரஞ்சனி அவர்கள் கருத்தின் சில பகுதிகள் :

கல்கியின் ‘பொன்னியின்செல்வன்’ போன தலைமுறையிலிருந்து இந்த இளைய தலைமுறை வரை இதயத்தைக் கொள்ளை கொள்ளுவது வியப்பேதும் இல்லை. அது அமர காவியம் என்பதற்கு இந்தச் சான்று ஒன்று போதும்.

இந்த கமெண்ட்டை பார்த்த நான், அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். என் வந்தியதேவன் பதிவைப் படித்து பார்க்கும் என்று. இப்படியே எங்கள் இணைய நட்பு இனிதே வளர்ந்து வருகிறது. சரியாக ஒரு வருடம் ‘ஓடோடி‘  விட்டது. வாழ்த்துக்கள் மற்றும் நன்றி மாமி

பொன்னியின் செல்வன் காலம் தாண்டி நிற்கிறது என்பதற்கு சரியான உதாரணம் : இந்த புத்தகத்தை அச்சிடாத பதிப்பகமே இல்லை. விகடன் முதல் வானதி வரை, எல்லா விலையிலும் வியாபித்து உள்ளது 🙂 அப்ப வாங்கி வாசிக்க எத்தனை பேர் இருப்பாங்க என்பததை நீங்களே கணக்குப் போடலாம்…..

இந்த வருடம் பாம்பே கண்ணனின் பெரும் முயற்சியில் பொன்னியின் செலவன் ஆடியோ புத்தகம் வெளிவந்துள்ளது. அவரின் சிவகாமியின் சபதம் ஆடியோ புத்தகம் ஒரு மாபெரும் செவி விருந்து. வருடத்திருக்கு ஒரு முறையாவது அதனை முழுமையாக கேட்டு முடிப்பேன்.

தொழில்நுட்ப வளர்ச்சியுடன் பொன்னியின் செல்வன் புகழும் வளர்ந்து வருகிறது. மின் புத்தகம் பல பல வடிவங்களில் இலவசமாக இணையத்தில் பதிவிறக்க உள்ளன. விக்கிபீடியாவில் முழுமையாக உள்ளது. நண்பர்கள் சொல்லி அறிந்தேன், Apple மற்றும் Android Applicationனாகவும் இந்த புத்தகம் இலவசமாக கிடைக்கிறது,

பொன்னியின் செல்வனில் ஆரம்பத்தில் கல்கி எழுத முயற்சித்த பகுதி : இலங்கை தீவில், ஊமை ராணி, அருள் மொழி வர்மனுக்கு சித்திரங்களைக் கொண்டு அவள் சரித்திரத்தை சொல்லுவாள். இதை எழுதிவிட்டு, தனது துணை ஆசிரியர் “பகீரதன்”னிடம் படிக்க கொடுத்தாராம். பகீரதன் ‘இன்னும் நல்லா இருக்கலாம்’ என்று சொல்ல, பல வருடங்களுக்கு பிறகு “ஆடிப்பெருக்கு” முதல் அத்தியாயமானது.

கல்கி

கல்கி

காவியத்தில் வரும் குடந்தை ஜோதிடர் பாத்திரத்தின் Inspiration -> பகீரதனின் அப்பா, அவரும் ஒரு ஜோசியர். கல்கி பகீரதனை முதல் முதல் சந்தித்தது பற்றி ஒரு சுவையான சம்பவம் உள்ளது ! ஒரு காங்கிரஸ் மேடை, இளைஞன் பகீரதன், ஜோதிடம், சகுனம், நேரம் பற்றி எல்லாம் நக்கல் நையாண்டியுடன் சிறப்பாக பேசுகிறான். கூட்டத்தில் அலையென கரகோஷமும், சிரிப்பொலியும் வெடிக்கிறது. கல்கி தான் விழா தலைமை, எல்லாம் முடிந்த பின், கல்கி அவர்கள் பகீரதனை அழைத்து “சிறப்பாக மனப்பாடம் செய்துள்ளாய், வாழ்த்துகள்” என்று சொன்னாராம். ஏட்டிக்கு போட்டி, மற்றும் பல கட்டுரைகளில் கல்கி எழுதியதை தான் அவன் பேசினான்……

எங்கோ தொடங்கி எங்கோ வந்து விட்டேன். நினைவில் இன்னும் பல பல கல்கி அலைகள் உள்ளன. மேலும் அவரைப்பற்றி வாசிக்க புத்தகங்கள் பல உள்ளன. சுந்தா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “பொன்னியின் புதல்வன்” – கல்கி வரலாறு, வானதியில் திரும்ப வெளிவந்துள்ளது. ராமமூர்த்து ஐயா தயவால், ஒரு பிரதி வாங்கி விட்டேன், மேலும் “நம் தந்தையர் செய்த விந்தைகள்” கல்கி பயணக்கட்டுரை தொகுப்பை படித்து முடித்தேன். இப்போ வாசிப்பது “மனிதன் எப்படி உயர்கிறான் ?” – 1931 தொடங்கி, கல்கி எழுதிய சினிமா விமர்சனங்களின் தொகுப்பு!

இன்னுமும்ம் சலிப்பு தட்டவில்லை. தினமும் கல்கி எழுதி எம் எஸ் அம்மா பாடிய பாடல்கள் என் செவிக்கு விருந்து 🙂 அவரோ சிலப்பதிகாரம், பாரதி மற்றும் தனது கவிதைகளைக் கொண்டு இந்த காவியத்துக்கும் சோபை சேர்த்து இருப்பார். இப்படி கல்கி, கல்கி, கல்கி…… என்று சொல்லிக்கொண்டே இருக்க வேணும். விரைவில் அவர் எழுதிய தனி படைப்புகளை படித்து முடிக்கபோறேன். #விளம்பரம் எதோ ஒரு இனம் தெரியாத இன்பன் என்னுள் உள்ளது.1954ரில் காலத்தில் கலந்த கல்கி, இன்னும் கலக்குவதைக் கண்டு வியகிங் !

போதும். நான் தம்பிக்கு எழுதிய ஒரு கமெண்ட்-டுடன் முடிக்கிறேன் :

ஏற்கனவே பல முறை சொல்லிவிட்டேன், மறுபடியும் சொல்கிறேன், கல்கியால் மட்டுமே தமிழ் பக்கம் ஈர்க்க பெற்றவன் நான். அதனால் உன்னையும் அவர் பக்கம் இழுத்தேன். நீயும் மயங்கி விட்டாய். அவர் எழுத்தோவியத்திற்கு மயங்கவாதவர்களே இல்லை எனலாம்.

காலம் இருக்கும் வரை
கல்கி புகழ் வாழ்க !
தமிழ் வாழ்கிறது
தமிழ் வளர்கிறது!

கல்கியால் நான் அடைந்தவைகளை பற்றி சொல்லி முடிக்க முடியாது : வாசிப்பு, நட்பு, ரசனை, எழுத்து, சொற்கள்………. கல்கிதாசன் என்று சொல்க்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். என் வாசிப்புலக வாழ்க்கையை க.மு – கல்கிக்கு முன், க.பி – கல்கிக்கு பின் எனப் பிரிக்கலாம் !

சுட்டிகள் :

பிகே : இந்த பதிவில் “பொன்னியின் செல்வன்”, “கல்கி” எத்தனை முறை உள்ளது ??

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: