நாற்சந்திக் கூவல் – ௧௦௮(108)
(புத்தகப் பதிவு)
உலக புத்தக தின நல்வாழ்த்துக்கள் 🙂
புத்தகம்
இல்லாத
அகம்
பித்தகம் !
– இலங்குவனார்
நூல் விபரம்
பெயர் : மோக முள்
ஆசிரியர் : தி.ஜானகிராமன்
பக்கங்கள் : 663
முதல் பதிப்பு : 1956
பதிப்பகம் : காலச்சுவடு
விலை : ரூ.550
நம்மிடம் இல்லாதது பிறரிடம் இருப்பதைப் பார்த்துச் சிரிப்பதாலோ எரிச்சல்ப் படுவதிலோ என்ன லாபம் ? சிறுமைதான் மிஞ்சுகிறது
மூன்று நாட்கள். பைத்தியம் பிடிக்காத குறை தான். இரவு ஒன்றரை மணிக்கும், புதினத்தை மூட மனமில்லை. அப்படி ஒரு ஈர்ப்பு. கைகளை அடக்கி, மனத்தை அதட்டி…. பெரும் பாடகப் போய்விட்டது, தூங்கச் செல்ல!
2015 சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கி சேர்த்த செல்வங்களில் ஒன்று, விடுதலை பெற்றது என்பதில் மகிழ்ச்சி. வஞ்சனையிலிருந்து மீண்டு என்னை கொ(/கு)த்திய மோக முள் – சுகமான அனுபவம். அலமாரியில் ஏங்கும் மற்ற புத்தங்களும் சீக்கிரம் ஜென்ம சாபல்யம் அடையட்டும்.
****
சுகுமாரனின் முன்னுரை அழகாக அமைந்துள்ளது. நிறை யாதெனில், அதை முதலில் படிக்காமல், இறுதியில் படித்ததில் திருப்தி. முன்னுரை ஆரம்பிக்கும் போது – Spoilers ahead என்று அவசியம் போட வேண்டும். நாவலை நம் கண்களால் படித்து, கைகளால் பக்கங்கள் திருப்பி, மனத்தில் வரைந்து, அசைப்போட வேண்டும். முன்னரே கதையும், களமும், விமர்சனமும் அறிந்து, ஒரு கண்ணோட்டத்துடன் biasedடாக வாசிப்பது எந்த வகையில் ஞாயம் ?
****
இரண்டு நுண்ணிய தளங்களில் நம்மை அழைத்து செல்கிறார் தி.ஜ. இசை என்னும் அண்டத்தின் பெருவெளி. காமம் என்னும் மனித பிண்டத்தின் பெருவலி! பாபுவிற்கு இரண்டும் பெரும் செல்வம், ஒன்றோடு ஒன்று ஸ்ருதி பிறராமல் எங்கு சேர்க்கிறது என்பதே மோகமுள்.
தத்துவங்களின் சங்கமமாக திகழ்கிறது மோக முள். பெண்ணைக் கடவுளாகப் பார்ப்பது, உறவுகளின் இயைபு, நண்பர்களின் மகத்துவம், நாத உபாசனையின் உன்னதம், நாதத்தை அனுபவிக்கும் முறை, பயிற்சியின் முதிர்ச்சி, குரு பக்தி, நித்திய பூஜை மற்றும் உபாசனை, கலப்பு திருமணம், வயது முதிர்ந்த காதல், தனிமையின் துயரம், இரண்டாம் தாரத்தின் தவிப்பு, கல்லூரி அனுபவங்கள்,…..
****
இன்றைய காலக்கட்டத்தில் கூட இத்தகு சம்பவங்கள் நடப்பது அபூர்வம். வயது முதிர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் தான் அதிகம். சாமானிய மனிதர்கள் குறைவு – அத்தகு திருமணங்களின் வெற்றியும் சொற்பம்! தி.ஜ மிகுந்த நேர்த்தியுடன் கதையை இக்கருவுடன் செலுத்தியுள்ளார்.
****
சில அழகிய வரிகள் :
பகவானுக்கு யமன் அந்தரங்க காரியதரசியாம்
வெறும் இன்பத்தை விட, துன்பத்திலிருந்து விடுதலையை உடலும் மனமும் அனுபவிப்பது அதிகம் தான்.

****
நாம் எல்லோர் வாழ்க்கையிலும் மிக இயல்பாக நடக்கும் சம்பவம். பேருந்து நிலையம். ஊருக்கு செல்லும் மகன், பஸ் ஏறிவிட்டான். கண்ணாடி ஜன்னல் வழியாக பார்க்கும் மகன். கீழே நிற்கும் அப்பா. மேலே தி.ஜ
கீழே நின்ற அவர் முகத்தைப் பார்க்கும் போது பாபுவிக்கு இறங்கி சற்று நேரம் அவரோடு பேச வேண்டும்போல் துடித்தது. அவருக்கு ஒன்றும் தோன்றவில்லையோ என்னமோ, அவனையே பார்த்துக்கொண்டு நின்றார். நினைவுகள் கூட அந்த கணத்தில் முடங்கிக் கிடந்தாற்போல் தோன்றின. ஏக்கமே நிறைந்திருந்த அந்த நெஞ்சில் வேறு யோசனைக்குக் கூட இடமில்லை போலிருந்தது.
Spoilers ahead
ஒவ்வொரு பாகம் முடியும் போதும் சில வரிகள் எழுதி வைத்தேன்.
மோக முள். முதல் பாகம்.
பாபு தான் நானா ? அவன் பாடும் போது ஆனந்தம், ராஜத்துடன் குதூகலம், ரங்கண்ணாவிடம் பக்தி, வைத்தி அப்பாவிடம் அன்பு, யமுனா மீதி ???
அக்காவின் குழந்தை இறந்த போது அழுகை முட்டிக்கொண்டது. தங்கம்மாள் வந்த காலம் காற்றில் உஷ்ணம். காதில் ஒரு படப்படப்பு.
பாபு ராஜத்துடன் பேசும் தருணங்கள் ஆஸ்வாசம். வைத்தி மீது மரியாதை. ரங்கண்ணா இசை சாம்ராட். பார்வதி பாவம். கும்பத்தில் லைவ் ரிலே பார்ப்பது போல் பிரமை.
எது நடந்தாலும் சரி. யமுனா இன்னொரு சிவகாமியாக மாறட்டும். பாபு இசை சக்ரவர்த்தி ஆகட்டும். கும்பேஸ்வரர் அருள் இருந்தால் தண்டவாளங்கள் இணையட்டும்!
1950களின் தமிழ் ஒரு தனி ருசி. இஞ்சா, எளுதுறேன், ஜோலி, மனனம், முடை, பலஹீனம்… இன்னும் இன்னும்…. வளரும் குழந்தை புது வடிவம் பெறுவது காலத்தின் கட்டாயம்.
பாகம் இரண்டு
ரங்கண்ணாவின் இறப்பு, ரணம். பல நாட்களுக்கு பிறகு விக்கை அழுதேன். நல்ல வேளை தனி அறை. மெல்லிய குளிர். புத்தகத்தை மூடி, தூங்கிப் போனேன். ஆழ்ந்த உறக்கம். சோகம் தீர நல்ல மருந்தாக அமைந்தது. எழுதும் நம்ப முடியவில்லை – ரங்கண்ணா மீண்டும் வர மாட்டார். அந்த ஸ்ருதி சேர்த்த தம்புரா, அந்த வாஞ்சை, அந்த சிங்கத்தின் கம்பீரம், காற்றோடு போயே போச்சு 😦
அடுத்தது யமுனா, என்னாச்சு இவளுக்கு, ஏன் இப்படி இருக்கிறாள், பதற்றம் !
பாபுவோ பாவம். அவளுக்காக வேலைத் தேடித் திருக்கிறான். நல்லந்து நடந்தா சரி.
பாகம் மூன்று
ஐ மிஸ் கும்பகோணம் அண்ட் காவேரி காற்று .
கூண்டை விட்ட பறந்து, வெளியே வந்த கிளி, பீச் காற்றை ஸ்வாசித்து மகிழந்ததாம்.
சங்குவின் கடிதத்தை படித்து பச்சாதாபம் ஏற்ப்பட்டது.
பத்மாசினி அம்மாளின் குணங்கள் உயர்வு !
பாலூர் ராமு மீது தனி மரியாதை ஜனித்துவிட்டது. ரங்கண்ணாவின் வளர்ப்பாச்சே, சோடைப் போகுமா ? பாபுவும் அவரும் செய்த சங்கீத தத்துவ விவாதங்கள் படு ஜோர்.
என்றுமே ஜுரம் நல்லது. நமக்காக ஏங்கும் உள்ளங்களை கண்டறிய அது ஒரு சிற்ந்த மருந்து.
இசை எவனையும் ஆட்டிவைக்கும். இசை சாம்ராட் ரங்கண்ணாவின் அணுக்க தொண்டன் பாபு இதற்கு விலக்கல்ல.
யமுனா என்ன ஆவாள் என்ற பயம் எனக்கு, சிவகாமியா ? அல்லது குறிஞ்சி மலர் பூரணியா? (பாபுவின் ஜுரம் எனக்கு ஊட்டிய பயம்). கடவுள் இருக்கான் குமாரு. அவளின் வனப்பையும், மேதா சக்தியையும் கண்டு வியக்கிறேன்.
வேண்டும்…
பாபுவின் பண்பும்,
ராஜத்தின் ரம்யமும்,
சங்குவின் வாஞ்சையும்,
யமுனாவின் அழகும்,
தங்கமாவின் திடமும்,
ரங்கண்ணாவின் விசால புத்தியும்,
வைத்தியின் அன்பும் !
என்னுடைய அக்காவும் இரண்டு பட்டுகளும் ஆனந்தமாகா இருக்கிறார்கள், மாப்பிளைத் தவிர !
என்னுடைய ரங்கண்ணாக்கள் இருக்க, நான் கற்றது சொல்பம்!
என்னுடைய வைத்தி அப்பா, இன்னும் இன்னும் உற்சாகத்துடன் என்னை வழி நடத்திவருகிறார் !
என்னுடைய ராஜம் வடக்கில் எங்கோ இருக்கிறேன். தொடர்பு எல்லைக்கு அப்பால்!
நேற்று முந்தினநாள் என்னுடைய யமுனாவை சந்தித்தேன், ஒரு வயதுப் பிள்ளை குழந்தையுடன் !
காலம் ஒரு சக்கரம் ! யாரும் நிறுத்த முடியாத சக்கரம் !
மோக முள் முப்பது நாள் குத்தும்.
இந்த குரலில் மாயங்கள் எல்லாம் செய்து காட்ட வேண்டும். மழையும் புயலும், அமைதியும் காதலும், அருவருப்பும் வெறுப்பும், பிரிவும் வாஞ்சையும், அதில் நான் நினைத்துப்படியெல்லாம் ஒலிக்க வேண்டும். அப்படி இந்தக் குரலை வசப்படுத்த வேண்டும். இந்த உடம்பே பாட்டாக நாதமாக மாறிவிட வேண்டும்.
தி ஜ – மோக முள்ளின் கடைசி வாசகத்துடன் முடிக்கிறேன், இதனைச் எண்ணி எண்ணி, சொல்லிச் சொல்லி களிக்கிறேன்
அப்பா எவ்வளவு பெரியவர் !
Like this:
Like ஏற்றப்படுகின்றது...