~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்சந்தி கூவல் – ௧௦௦(100)
(சனிச் சிந்தனை)

திருமுருக கிருபானந்த வாரியாரின் கட்டுரை தொகுப்பு “சிந்தனை செல்வம்”. பரணில் இருந்த புத்தகத்தை மீட்டேன். மட்டற்ற மகிழ்ச்சி, பழுப்பேரிய மஞ்சள் நிற தாள்கள், மெல்லிய வாசனை, அரிதான ஸ்பரிசம் தான். பயணத்தின் போது சிறிதுபடித்தேன். அதிலிருந்து ஒரு பாடல் மட்டும் இங்கே.

அஷ்டமத்து சனி என்பார்கள். வந்தால் படாதபாடுபடுத்தும், இருக்கதையும் இல்லாமல் செய்யும். ஆளையே சுருட்டி போடும். தலைகீழாக தருணங்கள், தடங்கல்களாக மாறும்… இன்னும் இன்னும் என்ன என்னவோ சொல்லி கேட்டிருப்பீங்க. இந்த கஷ்டதசையின் காரணம் : ஜாதக கட்டத்தில், எட்டாம் இடத்தில சனி வந்து அமர்வான் என்பது பொது வழக்கு. ராசி தவிர்த்து இந்த எட்டாமிடத்து சனி எப்படி வரும் என்று ஒளவை மூதரசி அழகான எளிமையான தமிழில் சொல்கிறார்.

காலையிலே பல்கலைநூல் கல்லாதத் தலைமகன்
ஆலையெரி போன்ற அயலானும்
– சால
மனைக்கட் டழிக்கு மனையாளும் இம்மூவர்
தனக்கட் டமத்துச் சனி

 1. படிக்காத மூத்த மகனும்
 2. பக்கத்தில் உள்ள பகைவனும்
 3. வரவுக்கு மிஞ்சமால் செலவு செய்யும் மனையாளும்

கொண்டவர்களுக்கு எந்நாளும் அஷ்டமத்து சனி என்கிறாள் தமிழ் கிழவி

இப்ப சொல்லுங்க உங்கள்ல எத்தனை பேருக்கு, எட்டாமிடத்து சனி ? (எனக்கு இல்லப்பா!). என்றைக்கு இது பொருந்தும். ஆனாலும், இன்றைக்கு தமிழ் பாட்டி இருந்திருந்தால், என்ன எழுதியிருப்பாள் என்ற சிந்தனை, சிரிப்பை மூட்டுகிறது. நிதர்சனத்தில் உள்ளது நவரசமும் !

Advertisements

நாற்சந்தி கூவல் ௯௯(99)
(தேர்தல் சிந்தனைகள்)

ஒரு சமயம் நம் சகதியே, நம் சக்தி என்று மெச்சுக் கொள்கிறோம் ! என்ன ஒரு அசட்டுத் தனம் – தேவன்

விடிந்ததும் இந்தியாவின் வரலாறு, நம் விரல் நுனிகளில்!  ஜனநாயகம் வெற்றி பெற  ஓட்டு போடுங்கள் என்று கெஞ்ச வேண்டியுள்ளது. சுண்டு விரல் சுட்டும், சுத்தமான தலைவர்களை, சுலபமாக தேர்ந்தெடுக்க சரியான வழி. நாளை மட்டும் : கரை நல்லது ! அதுவும் விரல் ஓரத்துக்கு மட்டுமே. இருந்தும் பரவாயில்லை என்று சகித்து கொண்டு மேலும் சிந்தக்கலாம்.

யாருக்கு உங்கள் வாக்கு ? கட்சிக்கா ? கொள்கைக்கா ? கூட்டணிக்கா ? தனி நபருக்கா ? தொகுதி நலனுக்கா ? முடிவு உங்கள் மனதில் உள்ளது. அது சரியானது தானா என்று மறுபரிசீலனை செய்யுங்கள். இன்று தான் யோசிக்க முடியும், நாளை வெறும் செய்தியை வாசிக்க மட்டுமே முடியும். என் முடிவு, பதிவின் இறுதியில் உள்ளது.

டீக்கடையில், தெரு முனையில், கை நுனியில், இணையத்தில் பேசியதெல்லாம் செயலில் காட்டுங்கள். இருந்தும் யோசிக்கிறேன், யார் ஆண்டால் தான் எனக்கு என்ன ? இங்கு ராமர்கள் இல்லை. ராவண குணங்கள் கொண்டவர்கள் தான் அதிகம். தீதும் நன்றும் பிறர் தர வாரா, நாளை நானே எனக்கான ஐந்து வருட பலன்களை முடிவு செய்கிறேன் !

தேர்தலின் மிகப் பெரும் வேடிக்கை : நான் நேர்மையானவன், உங்களுக்கு நல்லது செய்ய தகுதியானவன். நாளை உங்கள் நாளை வளமாக்க உழைப்பவன் என்று எல்லாம் பொய்யாவது சொல்லி, தான் ஓட்டு கேட்க்க முடியும். பொய்யும் புனை சுருட்டும் சொல்பவனுக்கு கூட நல்லவன் பிம்பம் அவசியம் ! நல்லவனாகவே இருப்பதில் தான் நாட்டுக்கு எவ்வளவு புண்ணியம் 🙂

தேசம் வளர வளர, தேர்தல் முறையும் அதை சார்ந்த பரிச்சார யுக்திகளும், புது புது பரிணாமங்களை பெற்று வருகிறது :

 • நோடா-விற்கு என தனி இடம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே
 • தொலைபேசி மூலம் அழைத்து, பதிவு செய்யப்பட்ட குரலில் வாக்கு சேகரிப்பது
 • இணையம் முழுதும் விளம்பரங்கள். சமூக வலைதளங்களில் விவாதங்கள், குடுமி பிடி சண்டைகள்.
 • வாக்காளர் பட்டியலில் நம் விபரங்களை, இணையம் மூலமே சரி பார்க்கலாம்
 • நூதன முறைகளில் பணம் பட்டுவாடா !
 • சூறாவெளி சுற்று பயணம். பெரும் தலைவர்கள், முப்பரிணாம தொழில்நுட்பம் மூலம் பல இடங்களில் ஒரே நேரத்தில் பொதுக்கூட்டங்கள்
 • கட்சி வளர்ச்சி / தேர்தல் நிதிக்கான நன்கொடைகளை இணையம் மூலவே பெற எளிமையான வழிகள்

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, என்னை வியக்கவைக்கும் விளம்பரங்கள் சிலவற்றை கண்டு மகிழ்ந்து வருகிறேன். கட்சிகள் சார்ந்த பிரச்சாரங்கள் அல்ல அவை. மக்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் வாய்ப்புகள் :

 • முதல் முறை வாக்களக்கும் இளைஞர்களுக்கு எங்கள் உணவகத்தில் 25% சிறப்பு தள்ளிபடி.
 • மையை காட்டினால், கை மேல் பலம். *** வழங்கும் ஆட்டுக்கு கால் சூப் முற்றிலும் இலவசம்
 • கடமை செய்த கரங்களுக்கு கௌரவம். பொருட்களின் பில் அமௌன்ட்-டில் 5% கழிவு

(விளம்பரங்களின் கருத்தை சொல்ல, நான் எழுதிய வாசகங்கள் இவை) இப்படியாக பல பல வண்ண பிளக்ஸ் சுவரொட்டிகள், நாளிதழ்களில் விளம்பரங்கள், துண்டு பரிசுரங்கள். இதை செய்யும் கடைகளுக்கு, ஒரே கல்லில் ரெண்டு மாம்பழங்கள் : விற்பனைக்கிக்கும் விளம்பரத்துக்கு ஒரு வழி மற்றும் சமூக விழிப்புடன் இருபதற்காக நல்ல பெயர். வாழ்க!

பேஷா போய் ஓட்டு போட்டுட்டு வாங்க. அதே வேகத்துடன், உங்கள் கையும் அதன் மையும் தெரியும் படி, உங்களை நீங்களே, ஒரு சுய புகைப்படம் (#selfie) எடுத்துக் கொள்ளுங்கள். விருப்பமுள்ளவர்கள் இணையத்தில் பகிர்ந்து மகிழலாம், என்னை போல் கூச்சம் கொண்டவர்கள் பத்திரப்படுத்தி மலரும் நினைவுகளில் சேர்க்கலாம்.

ஒரு தலைவன் என்பவன் தன்னுடைய தலையைப் பலி கொடுக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். ஓர் இலட்சியத்துக்காக நீ உன் உயிரையும் அர்பணிக்க கூடியவனாக இருந்தால் தான், நீ ஒரு தலைவனாக இருக்க முடியும். ஆனால் நாம் யாரும் தேவையான தியாகங்கள் எதையும் செய்யாமலேயே தலைவர்களாகிவிட விரும்புகிறோம். அதன் விளைவு வெறும் பூஜ்யமாக முடிந்தது போய் விடுகிறது. இதக்கு தலைவர் சொல்வதை ஒருவரும் கேட்பதில்லை !

–    சுவாமி விவேகானந்தர்

(கம்பர் ஷமிக்கனும்)

தேர்தல் வாழ்த்து

உலகம் யாவையும் தாம் உண்டு தீர்க்கவும்
  நிலை பெருக்கவும் நீக்கவும் நீங்களா ?
அழகிலா விளையாட் டுடையார் – அவர்
  தலைவர் அன்வருக்கே நோட்டா நாங்களே !

 

நாற்சந்தி கூவல் – ௯௮(98)
(புத்தக மதிப்புரை)

புதுபுது விஷயங்களையோ அல்லது சாதாரண வாழ்கையின், மாறுபட்ட கோணங்களை படம் பிடித்து, மனதில் பதிப்பது – ஒரு நாவலின் பலம். இத்தகு தகுதிகள் இரண்டும் நிறைந்த தோட்டியின் மகன் தான் இந்த பதிவின் பிதாமகன். மகனை ஸ்ருஷ்டித்தவர் : தகழி சிவசங்கரப் பிள்ளை. தமிழில் அழகு கூட்டியவர் : சுந்தர ராமசாமி #அறிமுகம்

தை திங்கள், நானும் என் அன்பு தோழர் தமிழும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தோம். கிளம்பும் சமயத்தில் புத்தகம் ஒன்றை கொடுத்து, படித்து விட்டு தாருங்கள் என்றான் தம்பி. அவர் கொடுப்பது எதையும் படிப்பேன் (புத்தகமோ, இணைய சுட்டியோ… எதுவானாலும்). என் வாசிப்பு வெளியை திறந்து விரிவுப்படுத்துவர் அவர் தானே. நானும் வாங்கி வைத்து கொண்டு அவனுக்கு சில புத்தகங்கள் கொடுத்தேன் #சரிக்குசரி.

நூல் விபரம்
பெயர் : தோட்டியின் மகன்
ஆசிரியர் : தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில் : சுந்தர ராமசாமி
பக்கங்கள் : 173
பதிப்பகம் : காலசுவடு
விலை : ரூ.130

வியாழன் அன்று அலுவல் நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வந்தது. அவசரமாக கிளம்பியதால், மேஜை மேல் இருந்த தோட்டியை கூட கூட்டி சென்றேன். திருப்பும் போது தான் படிக்க ஆரம்பித்தேன். கீழே வைக்க முடியவில்லை. முதல் நாள் இரவில் மிதமான வேகத்துடன் பாதி தாண்டி. அடுத்த நாளில், மின்னல் வேகத்தில் மீதியையும் முடித்தேன். வாசகனுக்கு மட்டுமே ஏற்படும் தனிப்பெரும் மகிழ்ச்சி இதுவல்லவோ #பூர்வ_கதை_முற்றும்

தோட்டி என்பவன் யார் ? சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன், தற்போது இருப்பது போல் பாதாள சாக்கடை திட்டம் எல்லாம் இல்லை. எனவே வீட்டில் உள்ள கக்கூசோ சுத்தம் செய்ய தினமும் காலை மண்வெட்டி, வாலி சகிதம் தோட்டி வருவான். நம் மலத்தை தன் வாளியில் அள்ளிக்கொண்டு, பீப்பாயில் சேர்ப்பான். வீடு வீடாக ஏறி இந்த வேலைய தொடர்வான். பீப்பாய் நிரம்பி வழியும், ரோடில் சிந்தும். அதையும் எடுத்து, சேர்ந்து, மொத்தமாக ஊர் கோடியில் உள்ள மலக்கிடங்கில் சென்று கொட்டுவான். அவன் வீடும் கிடங்கின் அருகிலேயே தான் இருக்கும். படிக்கும் போதே, (மனதில்) எவ்வளவு அருவருப்பை ஏற்ப்படுத்துகிறது ? முகத்தில் ஒரு துர்நாற்றத்தின் சுளிப்பு தானாக வருகிறது… இப்படி ஒரு வகை பாட்டாளி மக்கள் வாழ்த்துள்ளனர் என்று சொன்னால், முதலில் நம்பவே முடியவில்லை. ஆனாலும் சரித்திர உண்மை.

இதில் கொடுமை என்னவென்றால். இவர்களை கீழ்தர அடிமைகளாக நடத்துவதும், மதிக்காமல் உதாசீன படுத்துவதும் வாடிக்கையாக இருந்துள்ளது. இவர்களின் சந்ததியும் இதே வேலையில் ஈடுபடுகிறது. ஒழுங்கான சம்பளம் கிடையாது. பாதியை தராமல் பிடுங்கும் ஓவர்சீயர். (இன்று போல) வந்ததை குடித்தே பழகிய தோட்டிகள். சாப்பாடு, சுகாதாரம், மரியாதை, அடிப்படை உரிமைகைள் எல்லாம் எல்லாம் மறுக்கப்பட்ட தீண்டத்தகாத தலித் மனிதர்களின் வாழ்க்கை படம் தான் இந்த நாவல்

#முன்னுரையிலிருந்து சுந்தர ராமசாமி : வெளியுலகத்துக்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்கையினூடே எப்படி இவரால் (தகழி) சகஜமாக புகுந்து மன உணர்வுகளை அள்ளி கொண்டுவர முடிகிறது ? அவர்களின் அடி மனதில் இருந்த நெருப்பை எப்படி இவரால் மொழியில் மறு உருவாக்கம் செய்ய முடிந்தது ? கொடுமையில், மனம் கொள்ளும் கோபத்தில், ரத்தத்தில் உஷ்ணம் ஏறமால் என்னால் எந்த பக்கத்தையும் படிக்கமுடிவில்லை  — எனக்கு(ம்) ஏற்றப்பட்ட உணர்வுகளும் இதுவே. ஆனால் இவ்வளவு தெளிவாக சொல்ல முடியும் என்று தோன்றவில்லை.

#தம்பியின்_வரிகளில் (என் உணர்வுகள்): வெளிப்படியாக சொல்லி விடுகிறேன். புத்தகத்தின் நடை பல இடங்களில் பரபரவென பறகிராற்போல் நகர்கிறது. எங்கேனும் ஓரிடத்தில் வெளிப்படும் உரையாடல் (வசனம்) நெஞ்சை அப்படியே கிழித்துவிடுவது போல உணரமுடிகிறது. பல இடங்களில் தொடர்ச்சியாக படிக்க முடியாமல் இதயம் விக்கித்தபடி நின்றிருக்கிறேன்.

நாவலின் நெற்றியடி வசனம் ஒன்றை சொல்லுங்கள் என்றால், பளிசென்று சொல்லிவிடுவேன் :

பணக்காரன், வயிறு தெரியம திம்பான். சீரணமாவாது.
ஏழைகள் கண்டதையும், கெடச்சதையும் திம்பானுங்க. 
அவங்களுக்கும் சீரணமாவது.

மலக்கிடங்கில் தோட்டிகளின் இடையில் நடக்கும் விவாதத்தில் வரும் வசனமிது. எவ்வளவு பொருள் பொதிந்த உண்மை. இன்றளவும் இதுவே தான் உலக நியதி. என்றும் மாறாத மாயம் போலும் !

இந்தியா சுதந்திரம் பெரும் தருவாயில் (1946) வெளிவந்த அடிமைகளின் கதை இது. அந்த கால கட்டத்தில் தன்னை தானே, ‘கலை உலகின் கடைசி ஏழை’ என்று வர்ணித்து கொள்ளும் சுந்தர ராமசாமி, சரஸ்வதி என்னும் சஞ்சிகையில் தமிழில் எழுதினார். அவருக்கு அப்ப 20 வயது (தான்!) என்று சொன்னால் நம்பவா முடிகிறது ?

தமிழில் இந்த நாவல் மொழி பெயர்க்கப்பட்டது என்று சொல்லக் கூடாது. மொழியாக்கம் செய்ய பட்டு, மெருகேறியுள்ளது. கதையின், கருவின் வீரியம் குறையாத, நாடி துடிப்புக்குள் பறக்கும் நடை மற்றும் சொல்லாட்சி. கொச்சை தமிழில்லேயே தோட்டிகள் பேசும் வசனம் வந்தாலும், அவை வாசிப்புக்கு வேகத்தடையாக அமையவேயில்லை.

சந்தர்ப்பமா ?  சூழ்நிலையா ? என்று தெரியவில்லை. இந்த நாவலை படித்து கொண்டு இருக்கும் சமயத்தில் தான், முதன் முதலில், இயக்குனர் ராம் அவர்களின் கற்றது தமிழ் படம் பார்தேன். பிரபாகாரனும், சுடலைமுத்துவிக்கும் பந்தம் இருப்பதாகவே தோன்றியது. இருவருக்கும் எத்தனை எத்தனை பொருத்தங்கள் : இறுதி வரை நாயகன் நல்வனா ? கெட்டவனா ? என்ற கேள்விக்கு சரியான விடையில்லை. இருவரும் வாழ்கையில் எதையோ தேடி தேடி சலித்து துன்பம் அடைகின்றனர். சாமர்த்தியசாலிகள். கைக்கூடா காதல் மற்றும் லட்சியம். சமூகத்தின் மேல ஒரு கோவம், வெறி. இல்லாமையின் எதிரொலி. தெரிந்த தொழிலை செய்ய, மரியாதை இல்லாமை… #இது_நிற்க

தோட்டியின் மகன் நாவலில் இல்லாத உணர்வே இல்லை என்று சொல்லலாம். அன்பு, வெறுப்பு, கோபம், தாபம், காமம், காதல், பாசம், வேஷம், வஞ்சம், துன்பம், கொடுமை, சோகம், இறப்பு,  பெருமை, நெகிழ்வு, காழ்புணர்ச்சி, பயம், அழுகை, கதறல், அடிமை, பசி, பட்டினி, நோய், பஞ்சம், தாழ்வு மனப்பாங்கு….. இன்னும் இன்னும் இருப்பதை எல்லாம் அடக்கலாம். தகழி தான் எத்தனை சாமர்த்தியசாலி ! மனித உணர்வுகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து அதற்கு மொழியில் அழகு வடிவம் தந்துள்ளார்.

அன்றைய சமூகத்தின் ஆவண பெட்டகம் இந்த நாவல். போகிற போக்கில் பாத்திரங்களின் பாங்கில் சமூக்கதை, சம்பிரதாயங்களை சாடியுள்ளார். கடவுள் மீது தகழிக்கு என்ன கோவமோ தெரியவில்லை! பக்தியையும் பூசைகளையும் வேஷங்கள் என்பதை நேராக சொல்லாமல், சம்பவங்களாக அடுக்கியுள்ளார். பணக்காரர்களின் பழக்க வழக்கங்களை பார்த்து பார்த்து தானும் அது போல செய்யும் மக்களை அன்று முதல் இன்று வரை காணலாம்.

தோட்டிகளின் வாழ்கை தான் நாவல் என்றாலும். மையக்கரு : மகனுக்காக பாடு படும் தந்தையின் முயற்சிகளும் அதன் பலாபலன்களும். இதற்காக அவன் காணும் கனவுகள் ஏராளம், செய்யும் தியாகங்கள் தாராளம். தான் என்ன ஆனாலும் சரி, தன் மகன் பெரிய ஆளாக வர வேண்டும், எந்த சிரமமும் அவனுக்கு வரக்கூடாது. படித்து புகழ் பெற வேணும். நவ நாகரிக மனிதனாக அவன் வளர, வாழ வேண்டும். மகனின் செழுமையான வாழ்விற்கு, தந்தையின் முழுமையான் அர்ப்பணம்.

காலம் தொட்டு மகன்களை பெற்ற அப்பகளுக்கு தான் எத்தனை பெரிய ஆசைகள், கனவுகள். எல்லாம் ஒரே புள்ளில் நோக்கி தான் : தான் பெற்ற தவப் புதல்வன், சீரும் சிறப்புடன் வாழ வேண்டும். இதற்காக சுடலைமுத்து போடும் திட்டங்கள், அவனை அவனே நிர்பந்தத்துடன் மாற்றி கொள்ளும் வாழ்கை முறை, சேர்த்து வைக்கும் பணம், செலவு செய்யும் குணம்… அனைத்தும் அனைத்தும் பிரமிக்க வைக்கிறது. ஏனெனில் சாதாரண தோட்டி இது எதையும் செய்ய மாட்டன். மோகன் கொடுத்து வைத்தவன் தான். சாதாரண நடு வர்க்கத்து குடும்ப தலைவனின் வாழ்கையில் இருக்கும் அதே அளவு அதீத பாசம் தான் இந்த தந்தை மகன் உறவும்!

உறவுகள் ஆயிரம் வரும்
 சிறகுகள் ஆயிரம் விரியும்
தந்தைகள் என்றும் அப்படியே
 விந்தைகள் படைக்க கனவுக்ளுடன்
சிந்தை அனைத்தும் செலவுசெய்து
 சீர்மிகு புதல்வனை வளர்க துடிப்பர் !

புத்தகத்தை வாசிக்க கொடுத்து, என்னையும் எழுத ஊக்குவிக்கும் தமிழ் தம்பிக்கு என் அன்பு வணக்கம். நட்பில் நன்றி நல்குவது நன்றன்று!

நாற்சந்தி கூவல் – ௯௭(97)
(பாரதீ பதிவு)

எண்ணிய முடிதல் வேண்டும்
 நல்லவே எண்ணல் வேண்டும்
 திண்ணிய நெஞ்சம் வேணும்
 தெளிந்த நல்லறிவு வேணும்;
 பண்ணிய பாவமெல்லாம்
 பரிதிமுன் பனியை போலே,
 நண்ணிய நின்முன் இங்கு
 நசிந்திடல் வேண்டும் அன்னாய் !

சொல் மந்திரம் போல் அமைய வேண்டும் என்பான் பாரதி. மேலே உள்ள கவிதையை, தமிழ் வேதம் என்றே சொல்லலாம். வாழ்க்கை முழுதும் வறுமையின் பிடியில் மடியில் தவழ்ந்தவன் கேட்கும்வரங்கள் பலே பலே. இது தான் அவனை மேன்மைபடுத்துகிறது. தான் பெற்ற கல்வியை, அறிவை, தெளிவை, ஞானத்தை இந்த உலகுக்கு வழங்கி செழிக்க வேண்டும் என சிந்தித்தவன். மகா கவிஞன் பிறந்த இந்த 132ஆம் தினத்தில் அவனை பற்றி பேச ஆசை.

மோகத்தைக் கொன்றுவிடு — அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச் சாய்த்துவிடு — அல்லாலதில்
சிந்தனை மாய்த்துவிடு
யோகத் திருத்திவிடு — அல்லா லென்றன்
ஊனைச் சிதைத்துவிடு !

பாரதி படம்

பாரதி படம்

ஐந்து வயதில் தாயின் இழப்பு, பத்து வயதில் முறிந்த முதல் (பிள்ளை) காதல், திருநெல்வேலியில் கசக்கும் ஆங்கில கல்வி, பதினைந்து வயதில் தந்தையின் மறைவு, வறுமை, கடன் ! இதற்கு இடையில் பதினான்கு வயதில் பாரதியின் திருமணம் – ஏழு வயது செல்லமாளுடன். எத்தனை எத்தனை ஏற்ற இறக்கங்கள், அத்தனை அத்தனை அனுபவங்கள். புதிர் நிறைந்த வாழ்க்கையை புரிந்த கொள்ள தான் யார் உளர் ?

சிறிது காலம் எட்டையபுரம் சமஸ்தான வேலை. பஞ்சம் பிழைக்க காசி வாசம் புகுகிறான் பாரதி, தன் பாட்டி பாகிரதி அம்மாளுடன். காசி சர்வ கலா சாலையில் படிப்பு : ஹிந்தி, சமஸ்க்ரிதம். முதல் வகுப்பில் தேர்ச்சி. ஆறு ஆண்டுகள் சென்றது, கவிதை புனையாமல், மனம் புண்ணாகி, நொந்து கொண்ட நிமிஷங்கள்….

வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி !
…….
பேதை மாசக்தியின் பெண்ணே ! வாழ்க !
காளியின் குமாரி ! அறங் காத்திடுக !
வாழ்க மனையகத் தலைவி வாழ்க !

சிறு வயதிலேயே பாடல்கள் பாடி பாரதி என்று பட்டம் பெற்ற, ஆற்றல் மிகு குழந்தை அவன். வானத்தின் அமிழ்தம் அருந்தும் தருணங்களில், வறுமை என்னும் முள் நெஞ்சி குத்தியது : பாரதியின் வேதனை. சமஸ்தான வேலைக்கு போகும் முன் கவிதாதேவியை விவாகரத்து செய்தான். அமிழ்தம் இருந்த இடம் காணாமல் போகிறது. ஐயகோ பொற்குடம் மறைந்தது என்றே கதறுவான்

ஆறு வருட காசி வாசம், கவிதையின் காதல் உறவுகள் மறைந்த காலம். பாவத்தை எல்லாம் வாங்கி கொள்ளும் கங்கை, பலனாக பாவம் செய்தது போலும்! பாரதி ஒரு பாக்கூட, அவளின் தாய் மடி வாழ்ந்த காலத்தில் எழுதவில்லை : காசி ஊரை பற்றி, கங்கையை பற்றி, அதன் அழகை பற்றி, கம்பீரத்தி பற்றி… ஆனாலும் அது வெற்று வாழ்க்கை அல்ல, சிப்பிக்குள் முத்து வளர்ந்த காண்டம். சுதேச இயக்கம் அவனுள் புகுந்த காலம். உடையில், தோற்றத்தில், சிந்தனையில், சமூக அக்கறையில், வாசிப்பில், படிப்பில், நேசிப்பில், ஆர்வத்தில், பிற மொழி புலமையில், கருத்துக்களில் ஏற்றதுக்கான மாற்றம் தந்தது காசி வாசம்.

கவியின் கையெழுத்து

கவியின் கையெழுத்து

மீண்டும் எட்டையபுரம். சொந்த பூமிக்கு திரும்புகிறான். மனைவியுடன் சேர்கிறான். எந்த வேலையும் இல்லாமல் சம்பளம் வாங்க கசந்த கவிஞன் அவன். காதலியாம் கவிதையை கரம்பிடித்தான்…. கூடினான்… குலாவினான்…. கொஞ்சினான்….  மதுரையில் தற்காலிக தமிழ் ஆசிரியர். சென்னை சுதேசமித்திரன் பயணம். புதுகை தலைமறைவு, மீண்டும் சென்னை, திருவெல்லிக்கேணி. 39 ஆண்டுகள் பெரிதாக சொல்லி கொள்ளும் அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை. சாதாரண வறுமை நிறைந்த வாழ்கை. இதனால் நசிந்தும் போகும் சாதாரண மானுடன்  அல்ல பாரதி. செறிவனா வாழ் வீச்சும், சொல் வளமும், இதய திடமும், இலகும் மனமும், கோடி இன்பம் காணும் இயற்கையின் காதலன் அவன் !.

பாரதி

பாரதி

அச்சில் வந்த முதல் கவிதை ‘தனிமை இரக்கம்’, இதழ் ‘விவேக பாநு’ (1902). கீதையை தமிழில் மொழிபெயர்தத பெருமை பாரதிக்கு உண்டு. பாஞ்சாலியின் சபதம் மற்றுமொரு அற்புதம்.

கட்டுரை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, நாவல், கவிதை, இயக்க பணி, குடும்பம், வேலை, ஒன்பது மொழிகளில் பேசவும், படிக்கவும், எழுதவும் புலமை என் பல பரிணாமங்கள் பெற்ற பெருமகன். மிகுந்த வியப்பு என்ன வென்றால், படைப்புகளை சமைக்க எங்கிருந்து இவனுக்கு (மட்டும்) நேரம் கிட்டியது ? சிந்திக்க, சிறகு விறிக்க தான் காலம் ஏது இவனுக்கு ? 39 ஆண்டுகளில், முதல் 20 வருடங்களில் செழிப்பாக கவி பாடும் திறம் இருந்தாலும், கவிதை ஏதும் எழுதியதாக தெரியவில்லை. வாழ்ந்த எஞ்சிய காலத்தில் ஏற்பட்ட படைப்புகளே மழை போல செழிப்பாக, மலை போல் உயரிய கருத்துக்களுடன், மலைப்பை ஏற்படுத்துகின்றன. அனைத்தும் ஜீவ ரசம் ததும்பும் கவிதைகள் / படைப்புகள்

Bharthi quote
அவன் தமிழினால் தொடாத இடமே இல்லை என்றே சொல்லாம். அனைத்து வகையான கருத்துகளையும் சொல்லி உள்ளான். சிறு வயதில் விளையாடும் உரிமை மறுக்க பட்ட பாரதி (படி படி என்று அப்பன் தொல்லை !) எழுதிய “ஓடி விளையாடு பாப்பா” குழந்தை இலக்கியத்தின் முன்னோடி. பெண் விடுதலையின் தலைமகன். தாய் மறைந்த சோகம், சாகும் வரை அவனை வாட்டியது. இதனாலே அவன் சக்தி மீதும், கண்ணம்மா மீதம் தீராக் காதல் கொண்டான் என்றே தோன்றுகிறது

பொதுயுடமை என்னும் சொல்லை தமிழில் கொண்டு வந்தவன் பாரதி. உலகம் முழுவதும் தன பார்வையை செலுத்தியவன், தமிழின் சமய சார்பு அற்ற நவீன கவிதை உலகத்தின் முன்னோடி. தன் பா திறத்தால், அனவைருக்கும் தன தமிழை கொடையாய் வாரி வாரி வழங்கியவன், கவிதையின் முழு அட்ஷய பாத்திரமாய் வாழ்ந்தவன்.

இன்னும் என்ன என்னமோ சொல்ல எத்தனித்து தான் எழுத அமர்ந்தேன். ஆனாலும் இது போதும், மேலும் அவனை வாசிக்க வேணும், புரிந்து கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்

பாரதியின் சிந்தனை அனைத்தும் இந்த தீ போன்றது, ரசனைகளும் தான். தமிழை வைத்து பிழைக்கும் மாக்கள் உள்ள இக்காலத்தில், தமிழ் பிழைக்க உதித்த உத்தமன் பாரதி. எளிய சொல், எளிய பதம், எளிய சந்தம். எளிய வாழ்கை, செழுமையான தமிழ், வீர உணர்வுகள், விவேக சிந்தனைகள் -> பாரதி

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா !
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் – அதைத்
தினமும் புகழ்ந்திட்டி பாப்பா !

தமிழன் என்ற மமதையும், தான் கவிஞன் என்ற கர்வமும், சக்தி தான் வடிவம் என்றும், ரசனை தன் வாழ்வு என்றும் உலாவியவன். பாரதத் மணி திருநாடை மறக்காமல் மதித்தவன். அதனாலே தமிழை (தாயை) முதல் சொல்லி, நாட்டையும் இணைக்கிறான். என்னே அவனது அழகு ! தெய்வம் என்பது யாது ? அவனது பதில்

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் — தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;

இது, இது தான் பாரதி, உண்மை என்பதே பெரும் தெய்வம், பெருமைக்குரிய சொத்து. (இரண்டு பொருள் வரும் : தெய்வம் உண்மை, உண்மை என்பதே தெய்வம். இரண்டுமே சரி தான் !)

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித் திருநாடு!

 

இணைப்புகள் :

பாரதியார் கவிதைகள்

பாரதியார் சிறுகதைகள்

பாரதியார் கட்டுரைகள்

பாரதி வரலாறு – வ ரா

காசியில் சுப்பையா, சென்னையில் பாரதி

இந்த யுகம் பாரதியின் யுகம் – பி.ஸ்ரீ.ஆச்சார்யா

இசைப்பாவில் பாரதி பாடல்கள்

 

யார் பாரதி ? (காணொளிகள்)

ராஜா, பாரதி பாஸ்கர் : பொதுவான உரையாடல். மக்கள் அறிந்துள்ள பாரதி இவ்வளவே

பாரதி கிருஷ்ணகுமார் : பாரதி பற்றி அறிய, மிக மிக அரிய ஆழமான கருத்துகள், பார்வைகள், நேசங்கள், கவிதை உருவாக்கங்கள் இன்னும் பிற. பாரதியின் காசி வாழ்க்கை, கவிதை எழுதா நாட்கள் பற்றி இவர் சொல்லித்தான் அறிந்தேன் !

நெல்லை கண்ணன்  பாரதி கவிதைகளின் உட்பொருள் பற்றி

(இன்னும் இருக்கும் சுட்டிகளை படித்து விட்டு பகிர்கிறேன்)

 

தஞ்சை பாரதி சங்கம்

v  தளம் : mahakavibharathiyar.info

பாரதிக்கு என்று இப்படி ஒரு இடம் வேண்டும். கவிதை, கட்டுரை, புகைப்படம் இன்னும் இன்னும் நிரம்ப உள்ள பொக்கிஷம் இது. துழாவிப் பாருங்கள் 🙂

 

தமிழின் தளத்தில் இருந்து சில சுட்டிகள் :

பாரதி – சில பார்வைகள்

பாரதியும் ஷெல்லியும்

கங்கையும் காவிரியும் (தாகூரும் பாரதியும்)

 

இன்று எஸ்.எஸ் அம்மாவின் நினைவு தினம். அவரின் தேன் மதுர குரலில் பாடல்கள் சில : இசைப்பாவில்

 

இந்த ரகசியத்த யார்டையும் சொல்லாதீங்க…. ஏனா இது அவளோ வொர்த்-தே இல்ல  ‘நாற்சந்திக்கு இன்று இரண்டாவது பிறந்தநாள்.’ #ஹையா

naarchanthi

.

நாற்சந்தி கூவல் – ௯௬(96)
(கதம்பம்)

வெள்ளி விருந்தை, திங்கள் உதிக்கும், சோம்பல் தெறிக்கும் வார ஆரம்பத்தில் சமைத்துள்ளேன். வேறு என்ன : தாமதமாக வந்தாலும், ருசி குறையாது என்ற நம்பிக்கை தான். பொழுதை போக்காமல், பொழுதை ஆக்க வேண்டும் என்பதே தற்போதைய குறிக்கோள். மலை போல புத்தகங்களும், இணைப்புகளும், மின்-புத்தகங்களும், பாடல்களும்…. அப்பாடி என்ன செய் போறேன் தெரியல. பார்க்கலாம்….

மடிபா மாபெரும் சாகப்தம். புத்தன் வழியில், அகிம்சை முறையில் போராடி, தென் ஆபிரிக்கா மக்களுக்கு சுதந்தரம் வாங்கி தந்தவர், நிற வெறியை ஒழிக்க பாடுப்பட்டவர் : நெல்சன் மண்டேலா. அவரது முழுப் பெயர் நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா. ரோலிஹ்லாலா என்பதன் அர்த்தம் : மரக்கிளைகளை உலுக்குபவன் அல்லது கலகக்காரன். அவர் ஒரு குத்து சண்டை வீரரும் கூட ! நாற்சந்தியின் ஆழ்ந்த இரங்கல்.

This slideshow requires JavaScript.

தீபாவளி மலர் :

தீபாவளி மலர்களின் சூறாவளி சுகந்தம் கரையைக் கடந்த பின்… கூகிள் பிளஸ்-சில் ஒரு பதிவைக் பார்த்தேன். ஆனந்த விகடன் தீபாவளி மலர் 2013 PDFவடிவில் (இணையத்தில் இலவசமாக) உள்ளது என்பது தான் அது. அமுதசுரபி தீபாவளி மலர் அப்படி கிட்டுமா என்று தேடினேன்…. பெரும் வியப்பு : அவர்களே தங்கள் இணையத்தளத்தில் மொத்தம் 500 பக்கம் கொண்ட மலரை, 12 கோப்புகளாக தந்துள்ளனர், நீங்களும் பதிவிறக்கி படிக்க லிங்க்

மாத இதழ்கள் :

அமுதசுரபி தளத்தை பார்வையிட்டேன். மாதம் மாதம் இதழ்கள் PDF வடிவில் இலவசமாக பதிவிறக்க வழி உள்ளது. மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் : டிசம்பர் மாத இதழ்

ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் : டிசம்பர் இதழ்

மீள் :

ஒரு விஷயத்தை பல்வேறு விதங்களில் சொல்லலாம். ஒரு சந்தோஷத்தில் கூடுதலாக பேசலாம். இதற்கு கவித்துவ வெளிப்பாடு என்று பெயர். தமிழ் என் தாய் என்றால் அப்பன் யாரு என்று கேட்கலாகாது. இது அயோக்கியத்தனம். மனவிகாரம். மனைவி என் பிரசாதம் என்பது உயர்வுபடச் சொல்வது. அவள் எல்லோருக்குமான சக்கரைப் பொங்கல் அல்ல. அவள் சமயபுரத்தாள் எனக்கு கட்டிய பரிவட்டம். பரிவட்டமும் பிரசாதம்.. வேலையின் மனைவியின் கண்கள் மீன் போல் உள்ளது என்று நீங்கள் கூறினால் நாறுமா என்று எவரும்கேட்கக் கூடாது. நமது மொழி நாகரிகத்தின் வெளிப்பாடு மொழியை நாகரிகமாக வெளிப்படுத்துங்கள் ஆனால் வெறும் படிப்பு மட்டும் நாகரிகம் தருவதில்லை. மனக் குரூரம் இல்லாதிருக்க வேறெதோ தேவைப் படுகிறது.

– எழுத்தாளர் பாலகுமாரன்

(facebookக்கில் பகிர்ந்துக் கொண்டது)

கட்டுரைகள் :

பாரத் ரத்னா பற்றி

தமிழ் தி இந்து ஏட்டில் வந்த கட்டுரைகள்:

பாரதி மணியின் தில்லியில் நிகம் போத் காட் – அனுபவங்கள் பல… தவற விடாமல் வாசியுங்கள்

மின்புத்தகம் :

வாசிக்க கன்னாபின்னா என்று ஆங்கில மற்றும் தமிழ் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்வது பழக்க வழக்கமாகிவிட்டது. சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த புத்தகம் : நா.பார்த்தசாரதியின் இலக்கிய கதைகள். சங்க கால தனிப் பாடல்களின் சுவையான தொகுப்பு. சில பக்கங்கள் மட்டுமே ஆரம்பித்தேன். நீங்களும் மகிழுங்கள்

பதிவிறக்க

காணொளி :

கரு.பழனியப்பன், நீயா நானா நிகழ்ச்சியில் பேசியது : சுஜாதாவின் பத்து கட்டளைகள். மிகவும் பிடித்து இருத்தது.

சிறுகதை :

கடந்த வாரம் பல கதைகள் படிக்க முடிந்தது, குறிப்பாக சொல்ல வேண்டிய கதை ஜெயகாந்தன் எழுதியது : அக்னி பிரவேசம் . 1966ரில் ஆனந்தவிகடனில் வெளிவந்த கதை இது, மேலும் அவரே இதனை பற்றி சொன்ன சில வரிகள் :

எனது கதையின் முடிவை மாற்றியும், அந்த கதாபாத்திரத்தைக் கொன்றும் அதே தலைப்பில் கதை எழுதித் தமிழ்நாட்டின் பெரும் பத்திரிக்கைகளில் அவற்றுக்கு ஊக்கம் தந்து, நடந்த அத்துமீறல்களை சகித்துக் கொண்டிருந்தேன். எழுதுகிற பணிக்கு பொறுமை மிக மிக இன்றியமையாதது. அதன் பிறகு தான் அதன் முடிவை மாற்றி – நான் சொல்லவந்த கருத்தை மாற்றிக் கொள்ளலாம் – நான் ஒரு நாவலே எழுதுவதற்கு அந்த ‘அத்துமீறல்‘களும் எனது ‘அக்னி பிரவேசம்‘மும் காரணமாதலால் அவர்களுக்கும் கூட நான் நன்றி பாராட்டுகிறேன்.

(ஆதாரம் – ஜெயகாந்தன் சிறுகதைகள் – NBT)

இசை :

இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை தொகுப்புகள் பல : www.soundcloud.com/navinmozart இந்த தளத்தில் உள்ளன. அவரை பற்றி சொல்லவோ, எழுதவோ வேண்டியது இல்லை. ரசனை போதும்.

விளையாட்டு :

கிறிஸ்மஸ் முன்னிட்டு கூகிள் கொண்டு வந்துள்ள புதிய தளம் இது, அட்டகாசம் என்றால் இது தான் என்று அடித்து சொல்லலாம். செம கலக்கல். நிச்சயம் பாரக்க வேண்டிய அற்புதம் : http://www.google.com/santatracker/#/village

வால் பேப்ர்

எதேச்சியாக இந்த புத்தரை சந்தித்தேன், தமிழ் சினிமா நாயகன் போல கண்டதும் காதல் தான். என் மடிகணினியின் திரையை இவர், தனது மௌனமான நிம்மதியுடன் அலங்கரித்து கொண்டுள்ளார். தம்பிக்கும் பிடித்து விட்டது, உங்களுக்கும் தான் 🙂 பதிவிறக்க

படம் :

கண்ணன் மீது காதலாகிய பிரேமை கொண்டு, கன்னம் சிவக்க, வெட்கி தவிக்கும் ராதையின் அழகிய படம் :

ராதை

ராதை ரம்யம் !

நாற்சந்தி கூவல் – ௯௫(95)
(கதம்பம்)

பதிவெழுதி ஒரு வாரமாகிவிட்டது. வேகமான கால ஓட்டத்தில்  பல சுவையான சம்பவங்கள் நடந்தன. தீபாவளி சீசன். இதுவரை எல்லாம் சுகமே. இன்பங்களும், இனிப்புகளும், காரங்களும், உடைகளும், வெடிகளும் வரிசையாக நிற்கின்றன. இன்றோ விடுமுறை. அதில் எதோ தனி திருப்தி. மேட்டருக்கு வருவோம். வெள்ளி விருந்துடன் மீண்டும் நான் ! தம்பி குடுத்த ஊகத்தில் இந்த பதிவு மலர்கிறது. தொடருமா என்று எல்லாம் கேக்காதீங்க… போன பதிவு எவளோ ரீச்-ஆச்சுனு எனக்கு தெரியல…. படிப்பதை எல்லாம் இங்கு பகிர்வது, நியாமில்லை என்பதை தெளிவாக அறிவேன். பிறருடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு / அவர்களையும் சிந்தக, ரசிக்க வைக்கும் பதிவுகளை மட்டும் தருகிறேன்.


சிறுகதை :

 • இமையமலை எங்கள் மலைகல்கி – மூன்றே கதாபாத்திரம் கொண்ட , ஒரு சிறுகதை. என்ன ஒரு சரளமான நடை… சின்னதொரு கருவும் அவரிடம் சிறகு விரிக்கிறது. இன்னும் ஒரு பாரதி பற்றின் சான்று.
 • வாடாமல்லிகை –  புதுமைபித்தன் –  1934லில் இது முற்றிலும் புதிய சிந்தனை தான். ஸரஸுவின் (விதவை) மனநிலையை ஆழமாக படம்பிடித்துள்ளார். வர்ணனையும் அதி பிரமாதம்.  /எனக்கு உமது தியாகம் வேண்டாம். உமது பாசம் இருந்தால் போதும்!/ உணர்வின் உச்சம்
 • கோவிந்தனும் வீரப்பனும் கல்கி – விமோசனத்தில் வெளிவந்தது (மதுவிலக்குக்காக மட்டுமே வெளிவந்த மாத இதழ்). இப்படி சிம்பிளா கதை எழுதனும், அதே சமயம் உண்மையாகவும். ஒரு நல்ல கருத்தை சொல்லவல்தாகவும் அமைதல் வேண்டும்.

கட்டுரை :

 • சைக்கிள் ஓட்டுவோம் – என்.எஸ்.சுகுமார். சைக்கிள் ஓட்டுவதன் சிறப்பும், இன்று பெருகியுள்ள சிக்கல்களையும் சொல்லும் சிறிய பத்தி. கொலக்தாவில், சமீபத்தில் (சில தெருக்களில்) சைக்கிள் ஓட்ட தடை விதிக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல். {தினமணி நடுப் பக்கம்}
 • நண்பர், நல்லாசன், வழிகாட்டி – ஞானி – எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றி பல நல்ல தகவல்கள், அனுபவங்கள். தினமணி தீபாவளி மலரில் வந்துள்ளதாம்.
 • அறிவு தந்த மன்றங்கள் தெ.ஞானசுந்தரம் – தமிழகத்தின் பொற்காலத்தில் கல்லூரியில் பயின்ற இவர்கள் தான் பாக்கியவான்கள். இப்படிப்பட்ட மன்றங்கள் நான் படித்த கல்லூரியில் இல்லையே என்ற வருத்தத்தை தருகின்றன. இப்போ, இணையம் இந்த பசிக்கும் சோறு போடுகிறது என்பதே நிதர்சனம்.
 • நமக்குத் தேவை டான் ப்ரௌன்கள் – ஜெயமோகன் – // வாசகர்கள் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. ஆனாலும், புயல் காற்றில் தீபத்தைக் கையால் பொத்திக்கொண்டு செல்வதுபோல அவர்கள் இலக்கியத்தை முன்னெடுத்தார்கள். // என் கருத்து : டான் ப்ரௌன் வேண்டும் தான், ஆனாலும் சேதன் அண்ணனே வேணாம், வணிக எழுத்தாளர்கள் தேவையா இல்லையா என்று என்னால் ஏனோ சொல்ல முடியவில்லை. வணிகம் தாண்டியது தானே எழுத்து, தகுதியாக இருந்தால் வாசிப்பு  நிச்சியம் ஏற்படுமல்லவா ?
 • திருத்த வேண்டிய எழுத்துகள் திருப்பூர் கிருஷ்ணன் – யாரயோ குறி வைத்து எழுதியது போலவே தோன்றுகிறது. ஆனால் யார் என்று தெரியவில்லை. இப்படி சிந்திக்கும் எழுத்தாளார்களும் இன்று உண்டு என்பதை நான் மறுக்கவில்லை

கவிதை

 • வைரமுத்து பகிர்ந்து கொண்டது,அவர் எழுதியது அல்ல !)
நேற்று சபதங்களின் காரணமாக
மது கோப்பைகளை உடைத்தேன் – இன்று
மது கோப்பைகளை காரணமாக
சபதங்களை உடைத்தேன் !
 • நாமக்கல் கவிஞர், மதுவிலக்கை முன்னிட்டு, திருசெங்கோடு ஆஸ்ரமத்துக்கு எழுதியப் பாடல் :
குற்றமென்று யாருமே கூருமிந்த கள்ளினை
விற்கவிட்டுத் தீமையை விதைபதென்ன விந்தையே !
பாடுப்பட்ட கூலியைப் பறிக்கும்இந்தக் கள்ளினை 
வீடுவிட்டு நாடுவிட்டு வெளியிலே துரத்துவோம் !   

தந்தை கொண்டு சிரிப்பு, நம்பிக்கை நம்மை ஏற்றும்,
நம்பிக்கை கொண்டு சிரிப்பு, நல்லது நடக்கும் மாற்றம்! 
அனல் ஆணவச் சிரிப்பு, தம்வீரம் அழிவின் அசதி,
கர்வம் கூடா சிரிப்பு, கம்பீரம் கொஞ்சம் அலாதி !

 • காதல் பேருந்து, யார் எழுதியது என்று தெரியவில்லை. நன்பர் ஒருவர் மீள் பதிவு செய்துள்ளார். புதுக்கவிதை, கதை வடிவில். நல்லா இருக்கு, சிம்பிளா இருக்கு என்பது எனது அவிப்பிராயம்.

காணொளி / இசை :

குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் வயலின் தான் எத்தனை எத்தனை வேஷம் போட தக்கது. அவர் வாசுக்கும் “ஹரிவரசானம்” ஐய்யப்பன் பாடலைக் கேளுங்கள். எத்தனை நேர்த்தி, வளைவுகள். அற்புதம்

படங்கள் :

greatest prisonஇத நாம செஞ்சா அவுங்க என்ன நினைப்பாங்க.. அந்த ஆளு அப்படி பேசுவாரே… அம்மா நல்லா இருகன்னு சொல்லுவாங்களா… நாம இந்த  டிரஸ் போட்ட நம்மல பத்தி அவ என்ன பேசுவா….. அப்பாடி….

நாமே நமது சிறையை தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு உள்ளது. சிறையை விட்டு வெளிவர வேணும், சிறகு விரிக்க வேணும், சீக்கிரம் பறக்க வேணும் என நாம் சிந்திப்போமாகுக.

God and love ~~~~~~
இறை என்பது அன்பின் மறு வடிவும். இதை சொல்லாத மதம் இல்லை. ஆனால் இது நடவாமல் மக்களுக்கு மதம் பிடிக்கிறது. இது வேறு அது வேறு என்று. எல்லாம் ஒன்றே. அன்பே ஆனந்தம். நீங்கள் கடவுளை நம்ம வேண்டாம். ஆனாலும் காதலை நம்பி தான் ஆக வேணும். உலகை ஒழுங்கே இயக்கும் சக்தி அது. சர்வமும் அதுவே.

!!!!!!

Fill with gratitude விடியும் திங்களுக்கான செய்தி. நாளை நல்ல சிரிப்புடன் தொடங்க வேணும். ஆனால் நாமோ செல்போன் சிணுங்களுடன் தான் விடிகிறோம். நன்றி சொல்லுங்கள், அனைத்துக்கும். இந்த வையத்துக்கும், உங்களை வைபவர்களும் !

இன்னும் சில :

 • நவம்பர் மாத ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழ். இலவசமாக பதிவிறக்கி படிக்க சொடுக்கவும்.
 • வருடா வருடம் நவம்பர் மாதம் மீசை வளர்க்கும் Movemberராக கொண்டாடப்படுகிறது. ஆண்களின் பொது நலத்துக்கான இயக்கமிது. மேலும் அறிய
 • அதே போல நாவல் எழுதும் மாதம் நவம்பர். 50000 வார்த்தைகள் கொண்ட கதையே நாவல். ஆயிரகணக்கான மக்கள் எழுதும் தளம். மேலும் இது பற்றி படிக்க. (நான் எழுதல!) NaMoWriMoல எழுதி லிங்க் அனுப்புங்க.

diwali naarchanthi

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: