~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘சிறுகதைகள்’

வெள்ளி விருந்து #2

நாற்சந்தி கூவல் – ௯௫(95)
(கதம்பம்)

பதிவெழுதி ஒரு வாரமாகிவிட்டது. வேகமான கால ஓட்டத்தில்  பல சுவையான சம்பவங்கள் நடந்தன. தீபாவளி சீசன். இதுவரை எல்லாம் சுகமே. இன்பங்களும், இனிப்புகளும், காரங்களும், உடைகளும், வெடிகளும் வரிசையாக நிற்கின்றன. இன்றோ விடுமுறை. அதில் எதோ தனி திருப்தி. மேட்டருக்கு வருவோம். வெள்ளி விருந்துடன் மீண்டும் நான் ! தம்பி குடுத்த ஊகத்தில் இந்த பதிவு மலர்கிறது. தொடருமா என்று எல்லாம் கேக்காதீங்க… போன பதிவு எவளோ ரீச்-ஆச்சுனு எனக்கு தெரியல…. படிப்பதை எல்லாம் இங்கு பகிர்வது, நியாமில்லை என்பதை தெளிவாக அறிவேன். பிறருடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு / அவர்களையும் சிந்தக, ரசிக்க வைக்கும் பதிவுகளை மட்டும் தருகிறேன்.


சிறுகதை :

 • இமையமலை எங்கள் மலைகல்கி – மூன்றே கதாபாத்திரம் கொண்ட , ஒரு சிறுகதை. என்ன ஒரு சரளமான நடை… சின்னதொரு கருவும் அவரிடம் சிறகு விரிக்கிறது. இன்னும் ஒரு பாரதி பற்றின் சான்று.
 • வாடாமல்லிகை –  புதுமைபித்தன் –  1934லில் இது முற்றிலும் புதிய சிந்தனை தான். ஸரஸுவின் (விதவை) மனநிலையை ஆழமாக படம்பிடித்துள்ளார். வர்ணனையும் அதி பிரமாதம்.  /எனக்கு உமது தியாகம் வேண்டாம். உமது பாசம் இருந்தால் போதும்!/ உணர்வின் உச்சம்
 • கோவிந்தனும் வீரப்பனும் கல்கி – விமோசனத்தில் வெளிவந்தது (மதுவிலக்குக்காக மட்டுமே வெளிவந்த மாத இதழ்). இப்படி சிம்பிளா கதை எழுதனும், அதே சமயம் உண்மையாகவும். ஒரு நல்ல கருத்தை சொல்லவல்தாகவும் அமைதல் வேண்டும்.

கட்டுரை :

 • சைக்கிள் ஓட்டுவோம் – என்.எஸ்.சுகுமார். சைக்கிள் ஓட்டுவதன் சிறப்பும், இன்று பெருகியுள்ள சிக்கல்களையும் சொல்லும் சிறிய பத்தி. கொலக்தாவில், சமீபத்தில் (சில தெருக்களில்) சைக்கிள் ஓட்ட தடை விதிக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல். {தினமணி நடுப் பக்கம்}
 • நண்பர், நல்லாசன், வழிகாட்டி – ஞானி – எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றி பல நல்ல தகவல்கள், அனுபவங்கள். தினமணி தீபாவளி மலரில் வந்துள்ளதாம்.
 • அறிவு தந்த மன்றங்கள் தெ.ஞானசுந்தரம் – தமிழகத்தின் பொற்காலத்தில் கல்லூரியில் பயின்ற இவர்கள் தான் பாக்கியவான்கள். இப்படிப்பட்ட மன்றங்கள் நான் படித்த கல்லூரியில் இல்லையே என்ற வருத்தத்தை தருகின்றன. இப்போ, இணையம் இந்த பசிக்கும் சோறு போடுகிறது என்பதே நிதர்சனம்.
 • நமக்குத் தேவை டான் ப்ரௌன்கள் – ஜெயமோகன் – // வாசகர்கள் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. ஆனாலும், புயல் காற்றில் தீபத்தைக் கையால் பொத்திக்கொண்டு செல்வதுபோல அவர்கள் இலக்கியத்தை முன்னெடுத்தார்கள். // என் கருத்து : டான் ப்ரௌன் வேண்டும் தான், ஆனாலும் சேதன் அண்ணனே வேணாம், வணிக எழுத்தாளர்கள் தேவையா இல்லையா என்று என்னால் ஏனோ சொல்ல முடியவில்லை. வணிகம் தாண்டியது தானே எழுத்து, தகுதியாக இருந்தால் வாசிப்பு  நிச்சியம் ஏற்படுமல்லவா ?
 • திருத்த வேண்டிய எழுத்துகள் திருப்பூர் கிருஷ்ணன் – யாரயோ குறி வைத்து எழுதியது போலவே தோன்றுகிறது. ஆனால் யார் என்று தெரியவில்லை. இப்படி சிந்திக்கும் எழுத்தாளார்களும் இன்று உண்டு என்பதை நான் மறுக்கவில்லை

கவிதை

 • வைரமுத்து பகிர்ந்து கொண்டது,அவர் எழுதியது அல்ல !)
நேற்று சபதங்களின் காரணமாக
மது கோப்பைகளை உடைத்தேன் – இன்று
மது கோப்பைகளை காரணமாக
சபதங்களை உடைத்தேன் !
 • நாமக்கல் கவிஞர், மதுவிலக்கை முன்னிட்டு, திருசெங்கோடு ஆஸ்ரமத்துக்கு எழுதியப் பாடல் :
குற்றமென்று யாருமே கூருமிந்த கள்ளினை
விற்கவிட்டுத் தீமையை விதைபதென்ன விந்தையே !
பாடுப்பட்ட கூலியைப் பறிக்கும்இந்தக் கள்ளினை 
வீடுவிட்டு நாடுவிட்டு வெளியிலே துரத்துவோம் !   

தந்தை கொண்டு சிரிப்பு, நம்பிக்கை நம்மை ஏற்றும்,
நம்பிக்கை கொண்டு சிரிப்பு, நல்லது நடக்கும் மாற்றம்! 
அனல் ஆணவச் சிரிப்பு, தம்வீரம் அழிவின் அசதி,
கர்வம் கூடா சிரிப்பு, கம்பீரம் கொஞ்சம் அலாதி !

 • காதல் பேருந்து, யார் எழுதியது என்று தெரியவில்லை. நன்பர் ஒருவர் மீள் பதிவு செய்துள்ளார். புதுக்கவிதை, கதை வடிவில். நல்லா இருக்கு, சிம்பிளா இருக்கு என்பது எனது அவிப்பிராயம்.

காணொளி / இசை :

குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் வயலின் தான் எத்தனை எத்தனை வேஷம் போட தக்கது. அவர் வாசுக்கும் “ஹரிவரசானம்” ஐய்யப்பன் பாடலைக் கேளுங்கள். எத்தனை நேர்த்தி, வளைவுகள். அற்புதம்

படங்கள் :

greatest prisonஇத நாம செஞ்சா அவுங்க என்ன நினைப்பாங்க.. அந்த ஆளு அப்படி பேசுவாரே… அம்மா நல்லா இருகன்னு சொல்லுவாங்களா… நாம இந்த  டிரஸ் போட்ட நம்மல பத்தி அவ என்ன பேசுவா….. அப்பாடி….

நாமே நமது சிறையை தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு உள்ளது. சிறையை விட்டு வெளிவர வேணும், சிறகு விரிக்க வேணும், சீக்கிரம் பறக்க வேணும் என நாம் சிந்திப்போமாகுக.

God and love ~~~~~~
இறை என்பது அன்பின் மறு வடிவும். இதை சொல்லாத மதம் இல்லை. ஆனால் இது நடவாமல் மக்களுக்கு மதம் பிடிக்கிறது. இது வேறு அது வேறு என்று. எல்லாம் ஒன்றே. அன்பே ஆனந்தம். நீங்கள் கடவுளை நம்ம வேண்டாம். ஆனாலும் காதலை நம்பி தான் ஆக வேணும். உலகை ஒழுங்கே இயக்கும் சக்தி அது. சர்வமும் அதுவே.

!!!!!!

Fill with gratitude விடியும் திங்களுக்கான செய்தி. நாளை நல்ல சிரிப்புடன் தொடங்க வேணும். ஆனால் நாமோ செல்போன் சிணுங்களுடன் தான் விடிகிறோம். நன்றி சொல்லுங்கள், அனைத்துக்கும். இந்த வையத்துக்கும், உங்களை வைபவர்களும் !

இன்னும் சில :

 • நவம்பர் மாத ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழ். இலவசமாக பதிவிறக்கி படிக்க சொடுக்கவும்.
 • வருடா வருடம் நவம்பர் மாதம் மீசை வளர்க்கும் Movemberராக கொண்டாடப்படுகிறது. ஆண்களின் பொது நலத்துக்கான இயக்கமிது. மேலும் அறிய
 • அதே போல நாவல் எழுதும் மாதம் நவம்பர். 50000 வார்த்தைகள் கொண்ட கதையே நாவல். ஆயிரகணக்கான மக்கள் எழுதும் தளம். மேலும் இது பற்றி படிக்க. (நான் எழுதல!) NaMoWriMoல எழுதி லிங்க் அனுப்புங்க.

diwali naarchanthi

ஒரு திருட்டுப் பையனும் சில கடிதங்களும்…

நாற்சந்தி கூவல் – ௩௬(36)
(சிறுகதை பதிவு)

கையில் கிடைத்ததை எல்லாம் படிக்கும் வழக்கம் வந்துவிட்டது. இந்த வாரம் தினமணி கதிரில் (08/01/2012) எனக்கு ஒரு விருந்து கிட்டியது. உங்களுக்கும் அதை பகிர்ந்து கொடுத்து மகிழ்ச்சி அடைய ஆசை.

ஒரு அழகான சிறுகதை இது. சில காலமாக பல சிறுகதைகள் படித்து விட்டேன். ஆனால் இது போல எந்த கதையும் இல்லை. படிக்க! சுவைக்க!! மாகிழ்க!!!

~~~~~~~~~~

ஒரு திருட்டுப் பையனும் சில கடிதங்களும்… 

தே.புது ராஜா

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்தத் தனி வீட்டை ஒரு மாத காலமாகக் கண்காணித்து வந்த அவனுக்கு இன்றுதான் எண்ணம் ஈடேறியது. ஆம். அவன் எதிர்பார்த்தபடியே அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் இன்று காலையில் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்கள். இந்தத் தருணத்துக்காகத்தானே காத்திருந்தான்? ஆனாலும் இது நேரமல்ல என்பதால், இரவு வரை பொறுமை காத்தான். தன் ஆசைகள் நிறைவேறப் போவதை எண்ணிக் களித்திருந்த அவனுக்கு அன்றைய பொழுது போனதே தெரியவில்லை.

இரவு மணி பத்து இருக்கலாம். அவன் மெல்ல அவ் வீட்டை நெருங்கினான். சுற்றிலும் ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டான். நிசப்தமே நிலவியது எங்கும். முன்வாசல் கேட்டை நெருங்கியவன் மீண்டுமொரு முறை திரும்பிச் சுற்றிலும் பார்த்துவிட்டு, படாரென எகிறிக் குதித்து உள்ளே போனான். தலைவாசல் கதவை நெருங்கிப் பூட்டை ஒருமுறை உற்றுப் பார்த்தான். சரியான பழங்காலத்து திண்டுக்கல் பூட்டு. அதைத் திறப்பது அத்தனை சுலபமில்லை. இருந்தாலும் முயற்சியைக் கைவிடவில்லை. கைவசமிருந்த அத்தனை ஆயுதங்களையும் உபயோகித்து அந்த இருட்டில் அப்பூட்டைத் திறப்பதற்குள் போதும் போதுமென்றானது. வியர்த்துக் கொட்டியது. ஒருவழியாகப் பூட்டைத் திறந்து கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றவனுக்கு அதிர்ச்சி.

“வருக! வருக! இவ்வில்லத்துக்கு அதிதியாக வருகை தந்த நண்பரை அன்புடன் வரவேற்கிறோம்!’

என்ற வாசகம் தாங்கிய பலகையொன்று மின் விளக்கின் ஜொலிப்புடன் அவனை வரவேற்றது. சற்று மிரண்டு போனவன், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திரும்பி முன்வாசற் கதவை உட்புறமாகத் தாழிட்டுவிட்டு மீண்டும் திரும்பி அப்பலகையைப் பார்த்தான்.

அதில் மேலும் கீழ்க்காணுமாறு எழுதப்பட்டிருந்தது.

“நண்பரே, நீங்கள் வயிற்றுப் பசிக்காக இங்கு வந்தீர்கள் என்றால் சமையலறைக்குச் செல்லுங்கள்’

“ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வந்தீர்களென்றால் படுக்கை அறைக்குள் செல்லுங்கள்’

“வாழ்க்கையில் நிரந்தரமாகச் செட்டிலாக விரும்பி வந்திருந்தால் இருப்பு அறைக்குள் செல்லுங்கள்’

“உங்கள் முயற்சி திருவினையாகட்டும். வாழ்த்துக்கள்’

என்றிருந்தது.

மணி பதினொன்றாகப் போகிறது. நல்ல பசியும் கூடத்தான். பாழாய்ப் போன இந்தப் பூட்டைத் திறப்பதற்குள் சாப்பிட்ட புரோட்டாவே ஜீரணமாகிவிட்டது. படுக்கையறையும் இருப்பறையும் எங்கே போய்விடப் போகின்றன? பின்னர் பார்த்துக் கொள்ளலாம். முதலில் சமையலறை சென்று நன்றாகச் சாப்பிட்டு பசியாற்றிக் கொள்ளலாம். இவ்வளவு அக்கறையுடன் எழுதி வைத்து விட்டுப் போனவன் நல்ல சாப்பாடும் செய்து வைத்திருப்பான். ஒரு கை பார்த்துவிட்டுத்தான் அடுத்த வேலை! என்று எண்ணியவன் சமையலறை நோக்கி நடந்தான்.

“பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ என்பார்களே, அவனும் ஒரு கணம் தன் வேலையையும் வந்த சூழலையும் மறந்து சமையலறைக்குள் நுழைந்தான். கூடவே அவனுக்கு ஒரு சந்தேகமும் வந்தது. “ஒரு வேளை சாப்பாட்டில் விஷம் கலந்து வைத்திருப்பானோ? அதானே இந்தக் காலத்தில் இப்படிக் கூடவா இளித்தவாயன்கள் இருப்பார்கள்? இல்லை… இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது கவனமாகத்தான் இதைக் கையாள வேண்டும்’ என்று எண்ணியவாறே உள்ளே நுழைந்தவன் பாத்திரங்கள் ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தான்.

ஏமாற்றமே மிஞ்சியது அவனுக்கு. எல்லாப் பாத்திரங்களும் சுத்தமாகத் துலக்கித் துடைத்து வைக்கப்பட்டிருந்தன. குழப்பமும் பசியும் கூடவே வெறுப்பும் சேர்ந்து அவனைக் கோபமூட்டியது. மீதமிருந்த ஒரு பாத்திரத்தைக் காலால் எட்டி உதைத்தான். அதிலிருந்து ஒரு சிறு புத்தகமும் ஒரு கடிதமும் வெளிவந்து விழுந்தன.

கடிதத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். “நண்பரே மன்னிக்கவும். சமைத்து வைத்திருந்தால் உமக்குச் சந்தேகம் வரக் கூடும் என்பதால் அப்படிச் செய்யவில்லை. இதோ இங்கு தேவையான அத்தனை மளிகைப் பொருட்களும் உள்ளன. இந்தப் புத்தகத்தில் எளிமையான, சுவையான பலவிதமான சமையல் குறிப்புகள் உள்ளன. அதைப் பார்த்து உமக்குப் பிடித்த உணவை உமது விருப்பப்படியே சமைத்து உண்ணலாம். அதற்கான பொறுமையும் நிதானமும் நிச்சயம் உங்களிடம் உண்டு. ஒரு மணி நேரம் பொறுமையாகப் போராடி பூட்டைத் திறந்தவரல்லவா தாங்கள்’

இந்த வரியைப் படித்ததும் அவனுக்கொரு பயம் கலந்த சந்தேகம் வந்தது. “ஒரு வேளை வீட்டுக்குள் மறைந்திருந்து காண்காணிக்கிறார்களா?’ என்று. ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு மேலே படிக்கத் தொடங்கினான். எந்தெந்தப் பொருட்கள் எங்கெங்கு இருக்கின்றன என்பது முதல் கேஸ் ஸ்டவ்வை எப்படிப் பற்ற வைப்பது என்பது வரை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு, இறுதியாக, “அன்பரே மளிகைப் பொருட்களைச் சற்று சிக்கனமாக, தங்களின் தேவைக்கேற்றாற் போல் மட்டும் பயன்படுத்தவும். ஏனெனில் இந்தக் குடும்பத்தின் ஒரு மாதத்திற்கான பொருளாகும் இங்கிருப்பவை, என்று முடிக்கப்பட்டிருந்தது.

கிடைத்த குறிப்புகளைப் பார்த்துக் கவனமுடன் சமையல் வேலையில் இறங்கினான். முற்றிலும் புது அனுபவமாக இருந்தது அவனுக்கு. தான் எங்கிருக்கிறோம்? எதற்காக வந்தோம்? என்பதைக் கூட மறந்து சமையலில் மூழ்கினான். அதிலொரு தனிப் பரவசத்தையும் உணர்ந்தான். சமைத்து முடித்து சாவகாசமாக அமர்ந்து சாப்பிட்ட போது நினைத்துக் கொண்டான். “ஆகா… என்ன ருசி… எந்த ஹோட்டலிலும் இதற்கு முன் இப்படியொரு சுவையான உணவை நான் சாப்பிட்டதே இல்லை. ஒருவேளை நானே செய்ததால் அப்படித் தோன்றுகிறதோ? ப்ச்… ஏதோ ஒன்று. பசியாறினால் சரி’ என்று நினைத்துக் கொண்டு உண்டு முடித்தான். இப்போது அவனுக்கொரு புத்துணர்ச்சியும் புதுத் தெம்பும் வந்திருந்தது. கூடவே வந்த வேலையும் நினைவுக்கு வந்தது. நிதானமாக அங்கிருந்து வெளியேறியவன் வெளிக் கதவை ஒருமுறை பார்த்துவிட்டு அப்படியே படுக்கையறைக்குள் நுழைந்தான்.

அங்கே ஒரு பெரிய கட்டில் மெத்தை, ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, ஒரு ஏசி மெஷின், இன்னபிற சாதனங்களுடன் மூன்று பெரிய லாக்கர்களும் இரண்டு பெரிய இரும்புப் பீரோக்களும் இருந்தன. அத்தனையும் நவீனத் தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டவை. அவற்றைப் பார்த்ததும் அவனுக்குள் ஒரு குதூகலம் பிறந்தது. அருகிலிருந்த டீபாய் மீது பேப்பர் வெயிட்டைச் சுமந்தபடி ஒரு கடிதம் அவனுடைய கண்களைக் கவர்ந்தது. அதை எடுத்துப் படித்தான்.

“நண்பரே மன்னிக்கவும். இவற்றிற்கான சாவிக் கொத்து தொலைந்துவிட்டது. எனவே தங்களிடமுள்ள ஆயுதங்களைப் பயன்படுத்தி அதிகம் சேதப்படுத்தாமல் திறந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் இந்த மேஜையிலுள்ள உபகரணங்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அலுப்போ சலிப்போ அடையாதீர், முயற்சி செய்யுங்கள், உங்களால் நிச்சயம் முடியும். ஒரு மணி நேரம் போராடி வீட்டைத் திறந்து பொறுமையாகச் சமைத்துச் சாப்பிட்ட உங்களுக்கு இதுவும் சாத்தியம்தான். முயற்சியுடையான் இகழ்ச்சியடையான்’

அதைப் பார்த்த அவனுக்குதான் பூலோகத்தில்தான் இருக்கிறோமா அல்லது மாயாஜாலப் படங்களில் வருவதுபோல ஏதாவது பூதங்களின் லோகத்திலா? என்ற சந்தேகம் வந்தது. உடனே ஒருமாதிரி பயமும் குழப்பமும் வந்தாலும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு இரண்டில் ஒன்று பார்த்து விடுவதெனச் செயலில் இறங்கினான்.

பொறுமையாகவும் நிதானமாகவும் ஒவ்வொரு லாக்கரையும் கழற்றி எறிந்தான். உள்ளே ஒன்றுக்கும் உதவாத ஒரு சில காகிதங்களைத் தவிர வேறொன்றுமில்லை. உண்மையில் அது பெரிய ஏமாற்றமாக இருந்தாலும் அது அவனுடைய மனநிலையைப் பாதிக்கவில்லை. சலிக்காமல் மீதமிருந்த இரண்டு பீரோக்களையும் திறந்தான். அதில் விலையுயர்ந்த ஆடம்பரமான துணிவகைகள் ஏராளமிருந்தன. அவை அவனுக்கு எந்த விதத்திலும் பயன்படாதவை. கடைசிப் பீரோவின் உள்ளறையில் ஒரு மரப்பெட்டி இருந்தது. அதை வெளியே எடுத்துத் திறந்தான். முழுவதும் நகைகள்.

சிறிய மூக்குத்தி முதல் பெரிய ஒட்டியாணம் வரை. எப்படியும் நூறு சவரன் தேறும். அதிலும் ஒரு துண்டுச் சீட்டு இருப்பதைக் கண்டான்.

“நண்பரே, எதையும் வெளித் தோற்றத்தைப் பார்த்து நம்பிவிடாதீர்கள். கண்களால் காண்பதும் பொய், காதுகளால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ அப்படிச் செய்வதால் பின்னால் வரும் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம் அல்லவா?”

“மின்னுவதெல்லாம் பொன்னல்லவே எல்லா இடங்களிலும் தெளிவாகவும் கவனமாகவும் அணுகுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது.

சற்று யோசித்தவன், நகைகள் ஒவ்வொன்றையும் எடுத்து உரசிப் பார்க்கத் தொடங்கினான். அத்தனையும் கவரிங் நகைகள். பெட்டி காலியானது. அடியில் ஒரு சிறிய காகிதத் துண்டு. அதையும் எடுத்துப் பார்த்தான்.

“நண்பரே கோபித்துக் கொள்ளாதீர். ஆடம்பரம் என்பதும் இப்படித்தானிருக்கும். அதை நம்பிப் போனால் இறுதியில் மிஞ்சுவது இப்படித்தான். இந்தக் காலியான பெட்டியைப் போல’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

சற்று யோசித்தான். வீட்டினுள் நுழைந்தபோது தென்பட்ட அந்த வரவேற்புப் பலகை வாசகங்கள் நினைவுக்கு வந்தன. அதில் மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த “வாழ்க்கையில் நிரந்தரமாகச் செட்டிலாக வேண்டுமென்றால் இருப்பு அறைக்குள் செல்லவும்’ என்ற வாசகம் அவனை உந்தித் தள்ளியது. உடனே அவன் முகத்தில் ஒரு புன்னகையும் உள்ளுக்குள் ஒரு நம்பிக்கையும் பூத்தது. எனவே வேகமாக அவ்வறையை நோக்கிச் செல்ல எத்தனித்தவனுக்கு ஏனோ வேகமாக அவற்றை அப்படியே போட்டுவிட்டுப் போக மனமில்லை. கழற்றிப் போட்ட இரும்புப் பெட்டகங்களையும் பீரோக்களையும் பொறுமையாக இணைத்துப் பொருத்தி மீண்டும் கச்சிதமாக வைத்துவிட்டு, துணிகளையும் போலி நகைகளையும் இருந்த இடத்தில் வைத்து மூடிவிட்டு பொறுமையாக அங்கிருந்து வெளியேறினான்.

அடுத்த அறைக்குச் சென்று கதவைத் திறந்தான். அங்கே நிறையத் தட்டுமுட்டுச் சாமான்களும், உடைந்த பர்னிச்சர்களும், பழைய காகிதக் கட்டுகளும் ஒழுங்கற்ற முûறையில் போடப்பட்டிருந்தன. அதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்ற போதிலும் ஏமாற்றம் அடையவும் இல்லை. ஏனென்றால் முந்திய கடிதம் அவனை வழி நடத்த உதவிற்று. பொறுமையாகச் சுற்றிலும் பார்த்தான். வேறொன்றும் தென்படவில்லை. அங்கே ஓர் உடைந்த நாற்காலி மீது ஒரு முழு வெள்ளைத் தாளில் எழுதப்பட்ட கடிதம். எடுத்துப் பொறுமையாகப் படித்தவன் அதை அப்படியே நான்காக மடித்துத் தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அவ்வறையை விட்டு வெளியேறுவதற்காகத் திரும்பினான். அங்கே நிலைப்படியில் பளிச்சென்ற நிறத்தில் ஒரு வாசகம் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. அதனருகில் சென்று படித்துப் பார்த்தான்.

“தங்களின் வருகைக்கு நன்றி’

“நண்பரே நீங்கள் உங்களை முற்றிலும் இழந்துவிட்டுப் போக வேண்டும் என்றால் கழிவறைக்குள் போய்விட்டுச் செல்லுங்கள். உங்களை முழுமையாக மீட்டெடுத்துக் கொண்டு செல்ல நினைத்தால் பூஜையறைக்குள் போய்விட்டுச் செல்லுங்கள்’

சற்று நின்று யோசித்தவன், “கழிவறையா? வேணாம் சாமீ’ கக்கூசைக் கழுவிச் சுத்தம் செய்யவும் என்று எழுதி வைத்திருந்தாலும் வைத்திருப்பான். எதற்கு வம்பு? பேசாமல் இதோடு கிளம்பி விடுவதே மேல் என்று முடிவு செய்து அங்கிருந்து வெளியேறி தலைவாசல் கதவை நெருங்கியவனுக்கு ஏதோ ஓர் உந்துதல்! “எதற்கும் கடைசி வாய்ப்பாகப் பூஜையறையை ஒரு முறை பார்த்துவிட்டுத்தான் போவோமே!’ என்று நினைத்தவன் அங்கிருந்து நேராகப் பூஜையறைக்குச் சென்று கதவைத் திறந்து உள்ளே போனான் . அதிர்ந்து நின்றான்.

அங்கே சுவரில் மாட்டப்பட்டிருந்தது ஆளுயரத்தில் அவனுடைய படம். மறுவினாடியே அதிர்ச்சியிலிருந்து மீண்டான். ஏனெனில் அது படமல்ல, ஓர் ஆளுயர நிலைக் கண்ணாடி. அதில் தெரிந்த தன் பிம்பத்தைத்தான் அவன் பார்த்தான்.

பின்னர் சற்று நிதானித்துக்கொண்டு, அறை முழுக்கக் கண்களை ஓட விட்டான். அங்கே பூஜைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருந்தன. ஆனால் எந்தவொரு சாமி படமோ, விக்ரகங்களோ, இத்யாதி அடையாளச் சின்னங்களோ ஏதும் கண்ணில் படவில்லை. ஒரே குழப்பமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது அவனுக்கு. கூடவே ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருந்தது அச்சூழல். எனவே பார்வையைக் கூர்மையாக்கி நாலா திசையிலும் தேடிப் பார்த்தான். வழக்கத்திற்கு மாறாக அங்கு எந்தக் கடிதமோ துண்டுக் காகிதமோ கண்ணில் படாதது ஆச்சர்யம் தந்தது. மீண்டுமொரு முறை அவன் அந்த நிலைக் கண்ணாடியை உற்றுப் பார்த்தான். அங்கே கீழ்காணும் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது சிறிதாக ஓர் ஓரத்தில்.

“யாரொருவர் தன் சொல்லாலோ, செயலாலோ நினைவாலோ பிறர்க்குத் துன்பம் விளைவிக்கவில்லையோ அவரே தெய்வம். அவரே இங்கு பூஜைக்குரியவர்’ என்றிருந்தது.

அதனைப் பார்த்த அவனுக்குள் மனம் ஏதோ செய்தது. கண்களை மூடிச் சற்று நேரம் அங்கே அமைதியாக அமர்ந்துவிட்டான். பின்னர் நிதானமாக எழுந்து சென்று தலைவாசற் கதவைத்திறந்தான். அங்கே பொழுது புலர்ந்து வெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது. கதவைப் பூட்டிவிட்டு விடுவிடுவென நடந்து முன் வாசல் கேட் தாண்டிக் குதித்து சாலை வழியே நடந்து ஊருக்குள் நுழைந்து ஜன சந்தடியில் ஐக்கியமாகிக் காணாமல் போனான்.

மூன்றாம் நாள் அந்தக் குடும்பம், வெளியூர் பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிற்று. வீட்டைத் திறந்து ஒவ்வொரு அறையாகச் சென்று ஆர்வமாகப் பார்த்தனர். எல்லா அறையிலுமே யாரோ ஆள் வந்து போனதற்கான அறிகுறிகள் தென்பட்டனவேயன்றி வேறெந்த மாற்றமும் இல்லை. இறுதியாகக் கழிவறைக்குச் சென்று நிதானமாகப் பார்த்தனர். அங்கே அப்படியே வைத்தது வைத்தபடியே இருந்தன அத்தனை நகைகளும், பணமும். மாதமொன்று கடந்த பின் அந்த வீட்டின் தலைவருக்கு ஒரு கடிதம் வந்தது. ஆவலுடன் எடுத்துப் பிரித்துப் பார்த்தார்.

அன்பரே வணக்கம்,

தாங்கள் குறிப்பிட்டிருந்த விலாசத்திற்கு தங்களின் கடிதத்துடன் சென்றேன். உடனே எனக்கு அங்கே வேலை கிடைத்தது. அது ஒரு நவீன இரும்பு லாக்கர் மற்றும் பீரோக்கள் செய்யும் தொழிற்சாலை. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இந்த வேலை. என் திறமைகளையும் உழைப்பையும் ஆக்கபூர்வமான வழியில் செலவிடுகிறேன் எனும் போது ஒரு மனநிறைவும் ஆத்ம திருப்தியும் ஏற்படுகிறது. இதுவரை இப்படியொரு வாய்ப்பு என் வாழ்க்கையில் அமைந்ததே இல்லை. என் திறமைக்கும் உழைப்பிற்கும் உரிய அங்கீகாரம் கிடைத்ததும் என்னால் வேறெதையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. முழு கவனத்தையும் வேலையிலேயே செலுத்தத் தொடங்கினேன். புதுப் புது உத்திகளை யோசித்து செயல் வடிவம் கொடுத்ததைப் பார்த்த முதலாளிக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டது. நல்ல சம்பளமும் கொடுத்து அவரது கெஸ்ட் ஹவுஸிலேயே தங்க வைத்துள்ளார். இப்போதெல்லாம் அங்கு நானே சமைத்துத்தான் சாப்பிடுகிறேன் சிக்கனமாக. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். என் எதிர்காலம் பற்றிய ஒரு பிடிப்பும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது எனக்குள்.

இத்தனைக்கும் காரணமான உங்களைத் தெய்வம் என்று சொன்னால் கூடப் போதாது. அதற்கும் மேல் என்னவென்று சொல்லத் தெரியவில்லை. கோடி முறை நன்றி சொன்னாலும் போதாது. திருட்டுப் பையனாக வந்த என்னைத் திருமகனாக மாற்றி அனுப்பியது அந்தக் கடிதங்களே! குறிப்பாக அந்தப் பூஜையறை வாசகம் எனக்கொரு மனத்தெளிவைக் கொடுத்தது. அந்தக் கடிதங்களை எழுதிய உங்களை நேரில் தரிசிக்க விரைவில் வருகிறேன்.

இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள

திரு(ட்டுப்)ந்திய பையன்

~~~~~~~~~~

நாற்சந்தி நன்றிகள் – ‘தினமணி கதிர்’ மற்றும் அதன் இணைய பக்கம். இந்த கதையின் ஆசிரியர் “தே.புது ராஜா”

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: