~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << !~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

Posts tagged ‘பாரதி கவிதைகள்’

பாரதத்தின் தீ – பாரதி

நாற்சந்தி கூவல் – ௯௭(97)
(பாரதீ பதிவு)

எண்ணிய முடிதல் வேண்டும்
 நல்லவே எண்ணல் வேண்டும்
  திண்ணிய நெஞ்சம் வேணும்
 தெளிந்த நல்லறிவு வேணும்;
  பண்ணிய பாவமெல்லாம்
 பரிதிமுன் பனியை போலே,
  நண்ணிய நின்முன் இங்கு
 நசிந்திடல் வேண்டும் அன்னாய் !

சொல் மந்திரம் போல் அமைய வேண்டும் என்பான் பாரதி. மேலே உள்ள கவிதையை, தமிழ் வேதம் என்றே சொல்லலாம். வாழ்க்கை முழுதும் வறுமையின் பிடியில் மடியில் தவழ்ந்தவன் கேட்கும்வரங்கள் பலே பலே. இது தான் அவனை மேன்மைபடுத்துகிறது. தான் பெற்ற கல்வியை, அறிவை, தெளிவை, ஞானத்தை இந்த உலகுக்கு வழங்கி செழிக்க வேண்டும் என சிந்தித்தவன். மகா கவிஞன் பிறந்த இந்த 132ஆம் தினத்தில் அவனை பற்றி பேச ஆசை.

மோகத்தைக் கொன்றுவிடு — அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச் சாய்த்துவிடு — அல்லாலதில்
சிந்தனை மாய்த்துவிடு
யோகத் திருத்திவிடு — அல்லா லென்றன்
ஊனைச் சிதைத்துவிடு !

பாரதி படம்

பாரதி படம்

ஐந்து வயதில் தாயின் இழப்பு, பத்து வயதில் முறிந்த முதல் (பிள்ளை) காதல், திருநெல்வேலியில் கசக்கும் ஆங்கில கல்வி, பதினைந்து வயதில் தந்தையின் மறைவு, வறுமை, கடன் ! இதற்கு இடையில் பதினான்கு வயதில் பாரதியின் திருமணம் – ஏழு வயது செல்லமாளுடன். எத்தனை எத்தனை ஏற்ற இறக்கங்கள், அத்தனை அத்தனை அனுபவங்கள். புதிர் நிறைந்த வாழ்க்கையை புரிந்த கொள்ள தான் யார் உளர் ?

சிறிது காலம் எட்டையபுரம் சமஸ்தான வேலை. பஞ்சம் பிழைக்க காசி வாசம் புகுகிறான் பாரதி, தன் பாட்டி பாகிரதி அம்மாளுடன். காசி சர்வ கலா சாலையில் படிப்பு : ஹிந்தி, சமஸ்க்ரிதம். முதல் வகுப்பில் தேர்ச்சி. ஆறு ஆண்டுகள் சென்றது, கவிதை புனையாமல், மனம் புண்ணாகி, நொந்து கொண்ட நிமிஷங்கள்….

வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி !
…….
பேதை மாசக்தியின் பெண்ணே ! வாழ்க !
காளியின் குமாரி ! அறங் காத்திடுக !
வாழ்க மனையகத் தலைவி வாழ்க !

சிறு வயதிலேயே பாடல்கள் பாடி பாரதி என்று பட்டம் பெற்ற, ஆற்றல் மிகு குழந்தை அவன். வானத்தின் அமிழ்தம் அருந்தும் தருணங்களில், வறுமை என்னும் முள் நெஞ்சி குத்தியது : பாரதியின் வேதனை. சமஸ்தான வேலைக்கு போகும் முன் கவிதாதேவியை விவாகரத்து செய்தான். அமிழ்தம் இருந்த இடம் காணாமல் போகிறது. ஐயகோ பொற்குடம் மறைந்தது என்றே கதறுவான்

ஆறு வருட காசி வாசம், கவிதையின் காதல் உறவுகள் மறைந்த காலம். பாவத்தை எல்லாம் வாங்கி கொள்ளும் கங்கை, பலனாக பாவம் செய்தது போலும்! பாரதி ஒரு பாக்கூட, அவளின் தாய் மடி வாழ்ந்த காலத்தில் எழுதவில்லை : காசி ஊரை பற்றி, கங்கையை பற்றி, அதன் அழகை பற்றி, கம்பீரத்தி பற்றி… ஆனாலும் அது வெற்று வாழ்க்கை அல்ல, சிப்பிக்குள் முத்து வளர்ந்த காண்டம். சுதேச இயக்கம் அவனுள் புகுந்த காலம். உடையில், தோற்றத்தில், சிந்தனையில், சமூக அக்கறையில், வாசிப்பில், படிப்பில், நேசிப்பில், ஆர்வத்தில், பிற மொழி புலமையில், கருத்துக்களில் ஏற்றதுக்கான மாற்றம் தந்தது காசி வாசம்.

கவியின் கையெழுத்து

கவியின் கையெழுத்து

மீண்டும் எட்டையபுரம். சொந்த பூமிக்கு திரும்புகிறான். மனைவியுடன் சேர்கிறான். எந்த வேலையும் இல்லாமல் சம்பளம் வாங்க கசந்த கவிஞன் அவன். காதலியாம் கவிதையை கரம்பிடித்தான்…. கூடினான்… குலாவினான்…. கொஞ்சினான்….  மதுரையில் தற்காலிக தமிழ் ஆசிரியர். சென்னை சுதேசமித்திரன் பயணம். புதுகை தலைமறைவு, மீண்டும் சென்னை, திருவெல்லிக்கேணி. 39 ஆண்டுகள் பெரிதாக சொல்லி கொள்ளும் அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை. சாதாரண வறுமை நிறைந்த வாழ்கை. இதனால் நசிந்தும் போகும் சாதாரண மானுடன்  அல்ல பாரதி. செறிவனா வாழ் வீச்சும், சொல் வளமும், இதய திடமும், இலகும் மனமும், கோடி இன்பம் காணும் இயற்கையின் காதலன் அவன் !.

பாரதி

பாரதி

அச்சில் வந்த முதல் கவிதை ‘தனிமை இரக்கம்’, இதழ் ‘விவேக பாநு’ (1902). கீதையை தமிழில் மொழிபெயர்தத பெருமை பாரதிக்கு உண்டு. பாஞ்சாலியின் சபதம் மற்றுமொரு அற்புதம்.

கட்டுரை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, நாவல், கவிதை, இயக்க பணி, குடும்பம், வேலை, ஒன்பது மொழிகளில் பேசவும், படிக்கவும், எழுதவும் புலமை என் பல பரிணாமங்கள் பெற்ற பெருமகன். மிகுந்த வியப்பு என்ன வென்றால், படைப்புகளை சமைக்க எங்கிருந்து இவனுக்கு (மட்டும்) நேரம் கிட்டியது ? சிந்திக்க, சிறகு விறிக்க தான் காலம் ஏது இவனுக்கு ? 39 ஆண்டுகளில், முதல் 20 வருடங்களில் செழிப்பாக கவி பாடும் திறம் இருந்தாலும், கவிதை ஏதும் எழுதியதாக தெரியவில்லை. வாழ்ந்த எஞ்சிய காலத்தில் ஏற்பட்ட படைப்புகளே மழை போல செழிப்பாக, மலை போல் உயரிய கருத்துக்களுடன், மலைப்பை ஏற்படுத்துகின்றன. அனைத்தும் ஜீவ ரசம் ததும்பும் கவிதைகள் / படைப்புகள்

Bharthi quote
அவன் தமிழினால் தொடாத இடமே இல்லை என்றே சொல்லாம். அனைத்து வகையான கருத்துகளையும் சொல்லி உள்ளான். சிறு வயதில் விளையாடும் உரிமை மறுக்க பட்ட பாரதி (படி படி என்று அப்பன் தொல்லை !) எழுதிய “ஓடி விளையாடு பாப்பா” குழந்தை இலக்கியத்தின் முன்னோடி. பெண் விடுதலையின் தலைமகன். தாய் மறைந்த சோகம், சாகும் வரை அவனை வாட்டியது. இதனாலே அவன் சக்தி மீதும், கண்ணம்மா மீதம் தீராக் காதல் கொண்டான் என்றே தோன்றுகிறது

பொதுயுடமை என்னும் சொல்லை தமிழில் கொண்டு வந்தவன் பாரதி. உலகம் முழுவதும் தன பார்வையை செலுத்தியவன், தமிழின் சமய சார்பு அற்ற நவீன கவிதை உலகத்தின் முன்னோடி. தன் பா திறத்தால், அனவைருக்கும் தன தமிழை கொடையாய் வாரி வாரி வழங்கியவன், கவிதையின் முழு அட்ஷய பாத்திரமாய் வாழ்ந்தவன்.

இன்னும் என்ன என்னமோ சொல்ல எத்தனித்து தான் எழுத அமர்ந்தேன். ஆனாலும் இது போதும், மேலும் அவனை வாசிக்க வேணும், புரிந்து கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்

பாரதியின் சிந்தனை அனைத்தும் இந்த தீ போன்றது, ரசனைகளும் தான். தமிழை வைத்து பிழைக்கும் மாக்கள் உள்ள இக்காலத்தில், தமிழ் பிழைக்க உதித்த உத்தமன் பாரதி. எளிய சொல், எளிய பதம், எளிய சந்தம். எளிய வாழ்கை, செழுமையான தமிழ், வீர உணர்வுகள், விவேக சிந்தனைகள் -> பாரதி

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா !
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் – அதைத்
தினமும் புகழ்ந்திட்டி பாப்பா !

தமிழன் என்ற மமதையும், தான் கவிஞன் என்ற கர்வமும், சக்தி தான் வடிவம் என்றும், ரசனை தன் வாழ்வு என்றும் உலாவியவன். பாரதத் மணி திருநாடை மறக்காமல் மதித்தவன். அதனாலே தமிழை (தாயை) முதல் சொல்லி, நாட்டையும் இணைக்கிறான். என்னே அவனது அழகு ! தெய்வம் என்பது யாது ? அவனது பதில்

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் — தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;

இது, இது தான் பாரதி, உண்மை என்பதே பெரும் தெய்வம், பெருமைக்குரிய சொத்து. (இரண்டு பொருள் வரும் : தெய்வம் உண்மை, உண்மை என்பதே தெய்வம். இரண்டுமே சரி தான் !)

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித் திருநாடு!

 

இணைப்புகள் :

பாரதியார் கவிதைகள்

பாரதியார் சிறுகதைகள்

பாரதியார் கட்டுரைகள்

பாரதி வரலாறு – வ ரா

காசியில் சுப்பையா, சென்னையில் பாரதி

இந்த யுகம் பாரதியின் யுகம் – பி.ஸ்ரீ.ஆச்சார்யா

இசைப்பாவில் பாரதி பாடல்கள்

 

யார் பாரதி ? (காணொளிகள்)

ராஜா, பாரதி பாஸ்கர் : பொதுவான உரையாடல். மக்கள் அறிந்துள்ள பாரதி இவ்வளவே

பாரதி கிருஷ்ணகுமார் : பாரதி பற்றி அறிய, மிக மிக அரிய ஆழமான கருத்துகள், பார்வைகள், நேசங்கள், கவிதை உருவாக்கங்கள் இன்னும் பிற. பாரதியின் காசி வாழ்க்கை, கவிதை எழுதா நாட்கள் பற்றி இவர் சொல்லித்தான் அறிந்தேன் !

நெல்லை கண்ணன்  பாரதி கவிதைகளின் உட்பொருள் பற்றி

(இன்னும் இருக்கும் சுட்டிகளை படித்து விட்டு பகிர்கிறேன்)

 

தஞ்சை பாரதி சங்கம்

v  தளம் : mahakavibharathiyar.info

பாரதிக்கு என்று இப்படி ஒரு இடம் வேண்டும். கவிதை, கட்டுரை, புகைப்படம் இன்னும் இன்னும் நிரம்ப உள்ள பொக்கிஷம் இது. துழாவிப் பாருங்கள் 🙂

 

தமிழின் தளத்தில் இருந்து சில சுட்டிகள் :

பாரதி – சில பார்வைகள்

பாரதியும் ஷெல்லியும்

கங்கையும் காவிரியும் (தாகூரும் பாரதியும்)

 

இன்று எஸ்.எஸ் அம்மாவின் நினைவு தினம். அவரின் தேன் மதுர குரலில் பாடல்கள் சில : இசைப்பாவில்

 

இந்த ரகசியத்த யார்டையும் சொல்லாதீங்க…. ஏனா இது அவளோ வொர்த்-தே இல்ல  ‘நாற்சந்திக்கு இன்று இரண்டாவது பிறந்தநாள்.’ #ஹையா

naarchanthi

.

குறிச்சொல் மேகம்

%d bloggers like this: