~! || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்!!!

நாற்ச்சந்திக் கூவல் – ௧௨௫ (125)

சமீபத்தில் தினமும் எழுதுவது பற்றி காரசாரமான பல விவாதங்கள் முகநூலில் சுழன்றது. 10-20 என்று தினப்படி எழுதிக் குவிக்கும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். நறுக்கென நாலு வரிகளில் கவிதை எழுதி, ட்விட்டரில் டிரென்ட் ஆக்குபவர்களும் உண்டு. ஆடிக்கும் அம்மாவாசைக்கும் தூசி தட்டும் ரகம் ஒரு ஜாதி. புரியாததை எழுதி புலவர் பெயர் வாங்கும் பலர்.

என் போல் சோம்பேறிகளுக்கு எந்த நியதியும், தர்மமும், வெக்கமுமில்லை. புதியதொரு நண்பருடன், இணைய தமிழ் பற்றி ஒரு நீண்ட உரையாடல், எதேர்ச்சியாக நிகழ்ந்தது. பேசும் சுவாரஸியத்தில் நானும் வலையில் எழுதுவேன் (எழுதினேன்) என்று சொல்ல, அவர் இணைப்பை கேட்க, நான் எழுதி பல காலமாச்சு என்று நெழிய… இந்த பதிவும் பிறந்தது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் தீவிர இலக்கிய வாசகனாக மாற முயற்சி செய்த நான், எழுதவும் முற்ப்பட்டேன். என்ன என்னமோ எழுதி உள்ளேன், இன்று திரும்பி வாசித்து பார்த்தால் சிரிப்பி தான் மிச்சம். முதிர்சியின்மை வெளிச்சமாக தெரியும் எழுத்துக்கள். சொல்லித் தர ஆள் இல்லாத குறை. குரு மூலம் செல்லும் பாதையே செம்மையானது. ஒரு ஏகலைவன் தான் உள்ளான். மீதி போர் வீரர்கள் அனைவரும் முறையே பயின்றவர்கள். தெளிவு குரு உரு சிந்தித்தல் என்கிறது திருமந்திரம். குருவாய் வருவாய் குகனே. நிற்க.

அன்று நான் எழுத பயன்படுத்தியது Google Transliteration input tool for Desktop. இன்று அது இணைய வடிவுல் மட்டுமே உள்ளது. உங்கள் கூகிள் கிரோமில், ஜிமெயிலில் பயன்படுத்தலாம். அந்த வேளையில் தமிழில் எழுதியவர்கள் சொற்ப்பம். இன்று வாய்ப்புக்கள் அதிகம், எளிதான பல வழிகள் உண்டு. நான் மதிக்கும் ஒரு எழுத்தாளார், கூகிள் dictation மூலம், (ஆளே இல்லாமல்) அசால்ட்டா கட்டுரைகள் புனைகிறார். முன் அவருக்கு dictation எடுக்க ஒரு ஆளும், தட்டச்சு செய்ய ஒரு ஆளும் தேவை. திருத்தங்கள் அவரே செய்வார் அன்றும் இன்றும்.

இன்று நாமும் ரவுடிதான் என்ற முறையில், வழக்கத்துடன் வழுவி NHM writer கணினியில், செல்பேசியில் இரண்டு வசதிகள் : கூகிள் phonetic தமிழ், கூகிள் கையெழுத்து. கூகிளிடம் பேசி எழுத்து வடிவில் பார்ப்பதில் ஏனோ உவப்பில்லை. அதேபோல தான் வாட்சப் ஒலிச் செய்திகள். (வயசாகிவிட்டதோ!)

பலர் எழுத வந்தாலும் இரண்டு குறைகள் தொடர்கிறது. தன் குறையை தானே காண்பது தன்மானம். முதலாவது நம்முடனே (கூடவே) பிறந்தது: எழுத்துப் பிழைகள். போதிய பயிற்சியின்மையும், ஆசிரியர் வழிக்காட்டுதலும் இல்லாதது காரணம். இதனை கொஞ்சம் தயவு பண்ணி, மன்னித்து மறக்கலாம், காலப்போக்கில் மறையும் என்ற நம்பிக்கையில்.

இரண்டாவது : வன்மம். நேராக யாரிடமும் காட்ட முடியாத வெறித்தனத்தை, மனக்குப்பைகளை, அடையாளமில்லாமல் இணையத்தில் கொட்டுவது. பல கெட்ட வார்த்தைகள், வசைச் சொற்கள் சமூக இணையத்தில் இயல்பாக பயன்படுத்த்ப்படுகிறது. இந்த மன அமைப்பும், சகிப்புத்தன்மையும் எங்கிருந்து வந்ததோ? பண்பான விவாத சூழல் மறைந்துவிட்டது என்பது மிகையில்லை. சில மாதங்களுக்கு முன்: நீங்கள் இன்ன ஜாதி, அதனால் தான் இப்படி எல்லாம் கருத்து சொல்லுறீங்க என்றார் ஒருவர். அவரை அமைதியாக பிளாக் செய்தேன். டிவிட்டர் கதை இது. முகநூலில், ஒரு அரசியல் விவாதத்தில் இறங்கி, சண்டை போட்டு, நேரவிரையம் தான் நடந்தது. பெரிய அண்ணன் ஒருவரிடம் சொல்ல, அவரோ: நான் இது எல்லாம் பார்த்து, அடங்கி பழகாலமாச்சுப்பா என்றார். ஒதுங்குவதே உத்தமம். இன்றும் சில பதிவுகளை பார்க்கும் போது கை துடிக்கும், ஆனால் மனதில் ஒரு மணி அடிக்கும்: சும்மா இரு, சுகம் காணலாம்.

வேல்

நாற்ச்சந்திக் கூவல் – ௧௨௪ (124)

முருகன் தமிழ் கடவுள் என நாமும் பல காலமாக முழங்கி வருகிறோம். நேற்று இணைய வெளியெங்கும் அவன் புகழ் ‘வெற்றி வேல் வீர வேல்’.

நாய் சூரியனை பார்த்து குறைத்த கதை. ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும். ’கந்தனை மறவாதே மனமே’ என்பதற்காக கருப்பர்கள் செய்த உதவிக்கு வந்தனம் சொல்வோம், அவர்களுக்காக தகப்பன் சாமியின் அருளை இறைஞ்சுவோம்.

அருணகிரிநாதர் இயற்றியது கந்தர் அநுபூதி. சிறு வயதில் அம்மா பாட சொல்லி கேட்டு, பாடம் பண்ண பாடல்கள் சில உண்டு. முதல் பாடலை பற்றி இன்று வாசித்தேன், உங்கள் பார்வைக்கும்.

ஆடும் பரி, வேல், அணி சேவல் எனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்.
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே


பரி – குதிரை, வாகனம்
அணி – அழகு
பணி – தொழுதல், வேலை
அருள் – கருணை, ஏவல்
கயமா முகனை – கஜமுகாசுரனை
செரு – போர்
சாடும் – அழித்தல்
தனி – ஒப்பின்மை
நன்றி : தமில் இணைய பல்கலை அகராதி.

நேரடியான விளக்கம்: குதிரை போல வேகமாக பறக்கும் மயில் வாகனமும், வேலையும், அழகான சேவலையும் கொண்ட முருகப்பெருமானே! உன்னை தொழுது பாடி பணியும் பணியை நீ எனக்கு அருள் செய். யார் இவன்: கஜமுகாசுரனை வதைத்தவன், பிள்ளையாரின் தம்பி.

நயம்:
1. ஆடும் – ஆ உ ம் – ஓம். ஓம்-கார தத்துவத்தை சொல்லி தொடங்குவது மரபு. பிரவணத்தின் பொருள் சொன்னவன் முருகன் என்பதால் இன்னும் சிறப்பு.
2. பரியை நரியாக்கிய சிவன் (மாணிக்கவாசகர் கதை). பரியை சொல்லி மயிலை உணர்த்துகிறார். மயில் மெதுவாக நடக்கும். பரி பறக்கும், ஆடாது. ஆனால் முருகனின் மயில் அழகாக ஆடும், வேகமாக பறக்கும். இதுவும் அவனது அருளே.
3. மயில் தோகை விரித்து ஆடும் விதம் ’ஓ’வை குறிக்கும். சேவலின் கூவல் ‘ஓ’. இதிலிருத்து நாதத்தின் விளக்கத்தை அறிய ஞானம் தேவை. அதை தருவது இடையில் இருக்கும் வேல்.
4. சேவலுக்கும், மயிலுக்கும் அடைமொழி கொடுத்தார். வேல் ஞானத்தின் முழு சொரூபம், வேறு எந்த உவமையும் விளக்கமும் அவசியம் அல்ல. நிகர் இல்லா வேல்.
5. அவன் அருளாலே, அவன் தாழ் வணங்கி – சிவ புராணம். அவன் அருளால் அவனைப் பாடும் பேருடைய பணி கிடைக்க வேண்டும்.
6. கஜமுகனுக்கும் பிள்ளையாருக்கும் யானை முகம். அவன் அரக்கன், கணேசன் கடவுள். கீழ் நிலையிருந்து மேல் நிலைக்கு நாம் உயர் வேண்டும்.

கந்தனின் அருளால் – அவன் வேல், சேவல் கொடி, ஆடும் மயில் – நாம் அவனை பாடும் பேரு பெற வேண்டும். வேலின் துணையால் நாம் பிரணவம், அதன் பொருள் அறிய வேண்டும். அரக்க குணங்கள் மாய்ந்து, தெய்வீக இயல்புகளை வளர செய்பவன் அவனே, அதற்கு முழு முதல் கடவுளான கணபதி துணை வேண்டும்.

நன்றி: கெளமாரம்

இன்னும் எழுதலாம்…

தளம்

நாற்ச்சந்திக் கூவல் – ௧௨௩ (123)

குழாயடி சண்டை பார்த்துள்ளீர்களா? எந்த ஒரு லாஜிக்கும் இருக்காது. எல்லாருக்கும் அவசரம். முதல் வரும் உரிமையை அனைவரும் கோருவர். வசை மழை பொழியும், சின்ன கைக்கலப்பும் ஆகும். வரிசையில் வந்து பிடித்தால், ஆவதை விட அதிக நேரம் தேவைப்படும், மன அழுத்தமும் சேரும்.

பல பரிணாமங்கள் தாண்டி சமூக வலைத்தளங்கள், இந்த குழாயடியின் நவீன அரங்கமாக மாறியுள்ளது, மாற்றம் பெற்றுள்ளது – வேண்டுமென்றே. இங்கு தாக்குவதில், மற்றவர் மேல் உமிழ்வதில், அதிக சுகம் காணும் மக்கள் அதிகம். இணைய தமிழினின் ஆகாயம் தொடும் வளர்ச்சியில், தோன்றிய அசுரன் இவன்.

ஜாதி பேதங்கள் சத்தமே இல்லாமல் அவிழ்க்கப்படுகினறன. குரூபிஸம் கொடி கட்டி பறக்கிறது. ஆதாயத்துடனான, தனி மனித வழிபாடு, ஒரு பெரும் உச்சத்தை எட்டியுள்ளது. முட்டு கொடுக்கும் முட்டாள்கள் பெருகியுள்ளனர். அடுத்தவரின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் சிறுபிள்ளை தனம் நெருப்பாக பரவுகிறது.

நின்று நிதானித்து நாம் யோசிக்க வேண்டிய தருணம். அன்னப்பறவையாக உருமார வேண்டும். பாலும் விஷமும் சேர்த்துள்ளது ஒரே நிறத்தில், ஒரே கின்னத்தில்.

கொரோனா சொல்லும் பாடம் இங்கும் வெல்லும்: விலகி இரு, விழிப்புடன் இரு.

மதியை திருப்பும், கசக்கும், மிதிக்கும், புசிக்கும் முயற்சிகள் சர்வ சாதரணமாக தூண்டப்படுகிறது. இது ஒரு மாய வலை, மயக்கும் அலை. நவீனத்தை பரந்து வாசியுங்கள், திறந்து சிந்தியுங்கள், கொஞ்சமாக பகிருங்கள், ஆனால் விவாதம் செய்யாதீர்கள். உங்கள் சக்தியும் சகதியில் சேரும். நிம்மதி தான் எல்லாம். நேரம் தான் நம் சொத்து.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழுக்க முடியாதே #தீர்க்கதரிசனம்

எந்த சிக்கலுமே உன்னை சிதைக்க வந்தது அல்ல, செதுக்க வந்தது #வாட்சப்_ஞானம்

தளங்கள் தாளம் போடட்டும் – நாம்
தளங்கள் மாருவோம்
தளங்கள் நாடுவோம்
தவமொடு!

நாற்ச்சந்திக் கூவல் – ௧௨௨ (122)

அனுமானிடம் கேட்டார்களாம்: இன்று என்ன திதி என்று. பக்த அஞ்சனை மைந்தன் பகர்வான்: எனக்கு எல்லாம் இராமனைப் பாடி வழிப்படும் ஏகாதசி திதி தான். சர்வம் இராம மயம். இந்த ஊரடங்கு காலத்தில் நமக்கு இதே நிலை, வீட்டினுள் இருக்கும் எல்லா நாட்களும் ஒரே சாயலைக் கொண்டுள்ளன. அலுவலக வேலை இல்லாததால் இது வீக்கெண்ட் என்று மட்டும் மூளைக்கு எட்டுகிறது.

இன்று வாசித்தலுக்கு கூடுதல் நேரம் தர முடிவு செய்தேன், சுமாராக முடிந்தது. படித்த ஒரு கவிதையை பகிர்கிறேன்.

அவதூறுகளின் குப்பைக் கூடை
என் மேல் கவிழ்க்கப்படுவது
இது முதன்முறை அல்ல

எனக்கு அது புனித நீராட்டுப் போல்
பழகிப்போய்விட்டது
முதலில் மூச்சுத் திணறலாக இருந்தது
இப்போது சுவாச மதுரமாகிவிட்டது

– சிற்பி (முழுதும் படிக்க)

பின் டிரஸ்ட் ஒரு அட்டகாசமான தளம். பார்க்கும் வெளியில் பலவன பயிலலாம். சில நாட்களாக கொஞ்சம் வரைய ஆசை. தோதாக ஒன்று கண்டேன். என் முயற்சி. Patterns என்பார்கள், வடிவங்கள் எளிமையாகவும் அசத்தலாகவும் உள்ளன. மூல படத்தின் சுட்டி. இன்னும் முயற்சி செய்ய ஆசை. Stress busters – மன அழுத்தம் போகும்.

தெரியும் தெரியும்: சித்திரமும் கைப் பழக்கம்.

இன்னும் பழகலாம்….

நாற்ச்சந்திக் கூவல் – ௧௨௧ (121)

பேசுவதில் மனிதன் பெரும் சுகம் கொள்கிறான். நாங்கள் சில நண்பர்கள் கூகிள் மீட் தயவில் கலந்து பேசினோம். இந்த ஊரடங்கு காலத்தில் பல வேறு பகுதிகளில் இருப்பவர்கள் சேர்ந்து பார்ப்பது சிரமம். நிகர் நிலையில் நம் இணையம் கை கொடுக்கிறது.

எல்லோருக்கும் சொல்ல என்ன என்னமோ இருக்கிறது. கேட்க்க பல கேள்விள் உண்டு, விஷயங்களை அறிந்துக் கொள்ள / பகிர ஆர்வம் இருக்கிறது. விவாதிப்பதில் ஒரு திருப்தியும் தெளிவும் சுகமும் பிறக்கிறது. கேட்டல் என்னும் தவத்ததை செய்பவர்கள் சிலரே. தவளைகள் கத்தினாலும் தெம்பாக கேட்கும் திறன் இவர்களுக்கு எங்கிருந்து வந்ததோ! என் நண்பன் ஒருவன் இதில் பலே கில்லாடி. இதற்கு ஒரு படி மேலும் அவன் செல்லுவான்: பிறர் விளையாடுவதை ரசித்து கவனிப்பான், அது கால்ப்பந்தாகட்டும், பப்ஜி ஆகட்டும். அதில் சேரும் ஆசை அவனுக்கு எழாது, காண்பதில் மகிழ்ச்சி. பாக்யம். என்னமோ போங்க! இது நிற்க.

மனிதர்கள் மட்டும் தான் பேசிகிறார்களா? பேசத் துடிக்கிறார்களா? இல்லை. நாம் பேசுவதை விட கேட்டல் அதிகம். மரம் பேசுகிறது, காற்று கிசுகிசுக்கிறது, திரைப்படம் ஏதோ சொல்கிறது, மொழி இல்லாமல் இசை உரையாடுகிறது, வீட்டு விலங்குகளின் பாஷை புரிகிறது (சிலருக்கு), இயற்க்கை செய்தி சொல்லுகிறது, சம்பவங்கள் பாடம் தருகிறது, உறவுகள் அன்பையும் வம்பையும் பேசித் தள்ளுகிறது, காலம் விரசாக ஓடி ஓடி தத்துவங்களை உருவாக்குகிறது. 1. இந்த பேச்சுகளை நாம் கூர்ந்து கேட்டலின் விகிதத்தில் – நம் மூளை செப்பனிடப்படுகிறது, உள்ளம் முதிர்ச்சி அடைகிறது. 2. இத்தனையும் கேட்கும் மனிதன், தன் பங்கு வரும் பொழுதில் பேசி தள்ளுகிறான். நியாயம் தானே. காணாததைக் கண்டவன் போல.

சும்மாவா வள்ளுவ நாயனார் சொன்னார்: செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.

கண், மூக்கு, செவி, வாய், மெய். இதில் உட்கார்ந்த இடத்திலிருந்து வேலை வாங்குவது செவி மட்டும். கண் சென்று பார்க்க வேண்டும், மூக்கு முகர வேண்டும், வாயில் உணவைப் போட்டு ருசிக்க வேண்டும், உணரும் மெய் அது போலே. ஆனால் காது இருந்த இடத்திலிருந்து, கால் மேல் கால் போட்டுக்கொண்டு, இயங்கும் எஜமான். எல்லாம் காதில் வந்து விழும்.

திரையை மணி நேரங்கள் நோக்கினால் கண் வலிக்கும், பேசிக் கொண்டே இருந்தால் வாய் வலிக்கும், அளவுக்கு மீறினால் வாய் கசக்கும், ரொம்ப குளிரினாலே வெப்பத்தாலோ மெய் தாங்கா. ஆனால் காது வலிக்காது. அது ராஜ இந்திரியம்.

(இன்னும் எழுதலாம்…)

உயிர்

மோகன் டீயுடன் சோகத்தை கொஞ்சம் கொஞ்சமாக பருகினான். பதினெட்டாம் மாடி, பால்கனி. காலை ஆறு மணி, சில்லென காற்று, நீண்ட வானத்தின் நடுவில் சிவப்பு நிற சூரிய உதயம், அம்மாவின் நினைவை, அவள் விசால நெத்தியில் மிக நேர்த்தியாக குங்குமம் வைத்திருப்பாள்.

சித்தி அனுப்பிய வாட்சப் குறுச்செய்தியை மீண்டும் வாசித்தான். பரவசம் பொங்கியது. சோகம் தொண்டைய கவ்வியது. அம்மா அவளிடம் சொன்னாளாம்: அவனது காலை காபி தான், என்னை கடைசி பத்து ஆண்டுகள் உயிருடன் வைத்திருத்த அமிர்தமான மருந்து.

இந்த பழக்கம் என்று ஆரம்பித்தது என்று நினைவில் இல்லை. குறைந்து இருபத்தி ஐந்து வருடங்களாகியிருக்கும். தினமும் காலை எழுந்தவுடன் அம்மாவுக்கு காபி எனக்கு டீ. ஆனால் இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து உட்கார்ந்து மெல்ல மெல்ல சுவைத்து அருந்துவோம். முதலில் எழுபவர் பாணத்தை அன்புடன் தயார் செய்து ஆர்வத்துடன் காத்திருப்போம். எத்தனை எத்தனை பரிமாற்றங்கள். அரசியல், சினிமா, விளையாட்டு, கதைகள், சமையல் குறிப்புகள், அனுபவம், கேலி, கிண்டல், புரணி, முக்கிய முடிவுகள், அறிவுரைகள், செல்ல கோபங்கள்…. அம்மா எனக்காக பார்த்த பெண்னைப் பற்றி சொன்னது அத்தகு ஒரு பொழுதில், அவள் பாட்டியாக போகிறாள் என்று இன்பம் தந்தது அப்படி ஒரு வேளையில், இன்னும் இன்னும் அடுக்கலாம்.

வேலை மாற்றல் காரணமாக நான் பம்பாய் வந்து எட்டு ஆண்டுகள் உருண்டுவிட்டது, ஆனால் எங்கள் அதிகாலை பந்தம் தொடர்ந்தது. முதலில் தொலைபேசி மூலம் பின் இணய வழி. முதலில் அவள் வெகுவாக குழம்பினாலும், எளிதில் விடியோ கால் மார்கத்தை கற்று தேர்ந்தாள். எது எப்படி போனாலும், நாங்கள் இருவரும் ஒரே நேர் கோட்டில் தேனீர் அருந்தினோம். வெயில், மழை, பணி, பிணி எல்லாம் எங்களை அசைக்காமல் அனுபவிக்கவிட்டது அவன் செயல்.

இன்றும் மனம் அவள் குரலுக்காக தேடுகிறது, அந்த அன்பின் கதகப்பை நாடுகிறது. உனக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும், எனக்கு நீ அம்மா ஒருவளே. அவள் வானில் கரைந்து நாளொன்று ஓடிவிட்டாலும், தொலைபேசி அகராதியிலிருத்து அவள் பெயரை அழிக்க விருப்பமில்லை. அந்த அதிகாலை அழைப்பு, அரவணைப்பு மீண்டும் வராதா என்று என் கைபேசியை பார்த்து ஏங்கினேன், அம்மவின் அழகான முகம் சிரித்தது.

(கோராவில் ஒரு சம்பவம் படித்தேன், அதன் தாக்கம் இந்த கதை)

நாற்சத்திக் கூவல் – ௧௨௦ (120)
இன்னும் எழுதலாம்….

குறிச்சொல் மேகம்